Friday, April 02, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - மறதி



மறக்காமல் இந்தப் பகுதிக்கு வந்த எல்லோரிடமும் ஒரு விஷயத்தை இப்பவே சொல்லியாக வேண்டும். இல்லேன்னா மறந்து போகும்.

மறதி எல்லாருக்குமே இருக்கும். இதெல்லாம் வாழ்க்கைல சகஜமப்பா. எனக்கு மறதியே கிடையாதுன்னு யாராவது சொன்னா அவங்களைப் போல கஷ்டப்படறவங்க இந்த உலகத்தில வேற யாருமே இருக்க முடியாது. மறதி என்பதே மனிதர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

ஞாபகம் வைத்துக் கொள்ள நினைக்கும் எவ்வளவோ விஷயங்கள் மறந்து போய்விடும். மறக்க நினைக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்னும் மறக்கமுடியாமலிருக்கும். அப்படிப்பட்ட சில விஷயங்களை மறந்து போகணும்னு நினைக்கிறவங்களுக்கு கடைசியாக ஒரு சில விஷயங்களைச் சொல்கிறேன்.

மறதி என்பது அரைகுறையாகவோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ நினைவிழந்து போய்விடுவதுதான்.

இந்த மறதி இருக்கிறதே, அது கற்றுக் கொள்ளுதலோடு தொடர்புடையது. கற்றுக் கொள்வதின் பெரும்பகுதியை நீங்கள் மறந்துவிடுவதாக நினைத்தால் அது தவறு. ஒரு விஷயத்தை எந்த அளவுக்கு ஆர்வத்தோடு கற்றுக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அந்த விஷயம் உங்கள் நினைவிலிருக்கும்.

மறதி என்பது கடந்து செல்கின்ற காலத்தோடு அமைதியாகச் செல்லும் ஒரு மந்தமான செயல் அல்ல. பரிசோதனைகளின்படி மறதி என்பது ஒரு சுறுசுறுப்பான செயல்முறை. உங்களின் நினைவுப் படிமங்களில் சேமிக்கமுடியாத அளவு சுறுசுறுப்பு கொண்டது மறதி.

மறதியை ஒரு அனுபவச் செயலாகக் கொண்டு இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து வைத்திருக்கின்றனர்.

1. இயல்பு நிலை மறதி
2. பிறழ்வு நிலை அல்லது நோய்க் குறி சார்ந்த மறதி.

முதலில் இருக்கும் இயல்பு நிலை மறதியைக் கூட மூன்றாகப் பிரிக்க முடியும்.

காலப்போக்கு காரணமாக ஏற்படக் கூடிய மறதி. ஒரு திறமையை நீங்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தாமலே இருப்பதால் அந்தப் பயிற்சி மறந்து போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக கணக்கில் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தாலும் இப்போது உங்கள் பிள்ளை கொண்டு வந்து கொடுக்கும் அதே அல்ஜீப்ரா கணக்கைப் போட முடியாமல் தடுமாறுவது.

ஆனால், சைக்கிள் ஓட்டுவதை நீங்கள் சின்ன வயதில்தான் கற்றுக் கொண்டீர்கள். எத்தனையோ வருஷத்துக்குப் பிறகு போன வாரம் சைக்கிள் ஓட்டியிருப்ப்பீர்கள். இது எப்படி சாத்தியமாகும்?

அதே போல சிறிய வயதில் நீங்கள் கற்றுக் கொண்ட நீச்சல் அதன்பிறகு பயிற்சியே இல்லாமல் வளர்ந்து, வயதான பிறகும் மறந்துபோகாமல், உங்களால் நீச்சலடிக்க முடிகிறதே. இது எப்படி?

இதுக்குக் காரணம் இவை அனைத்தும் செயல்முறை சார்ந்த விஷயம். உங்களின் உடலைக் கொண்டு செயல் வடிவில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள். செயல்முறை சார்ந்து நீங்கள் கற்றுக் கொண்டவை, நீண்ட கால இடைவெளிக்குப் பிறகும் மறந்து போகாமல் நினைவில் வைத்திருக்க முடியும். செயல்முறை அல்லாத பல விஷயங்களை மட்டுமே காலப் போக்கில் மறந்து போகும் வாய்ப்பு உள்ளது.

குறுக்கீடு சார்ந்த மறதி. மறதியில் இது இன்னொரு வகை. நாம் போன வாரத்தில் பார்த்த விஷயத்தை நினைவுக்குக் கொண்டு வர முடியுமா. அந்த டெலிபோன் டைரக்டரி விஷயம்தான்.

முதலில் ஒரு நம்பரைத் தொடர்பு கொண்டு ஏதோ ஒரு பொருளைக் கேட்கிறீர்கள். அவர்கள் பார்த்துவிட்டுச் சொல்வதாகச் சொன்னதும் நீங்கள் அடுத்ததாக வேறு ஒரு எண்ணுக்கு போன் செய்கிறீர்கள். அவர்களும் கொஞ்ச நேரத்தில் சொல்வதாகச் சொல்கிறார்கள். கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு மறுபடி முதல் எண்ணுக்கே போன் செய்ய முற்படுகிறீர்கள். இப்போது நீங்கள் முதலில் போன் செய்த அதே நம்பரை போனில் அழைக்க, மறுபடி டைரக்டரியைத் தேடுகிறீர்கள். அதுதான் குறுக்கீடு சார்ந்த மறதி.

முதலில் போன் செய்த அதே நம்பர் அதற்குள் மறந்து போனதன் காரணம் அடுத்ததாக நீங்கள் போன் செய்த நம்பர். இடையில் அது வந்து உங்கள் நினைவுப் பகுதியில் சேர்ந்துவிட்டது. அல்லது நீங்கள் காத்திருந்த நேரத்தில் நீங்கள் கேட்ட பொருள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அலைக்கழிப்பு உங்கள் நினைவுப் பகுதியில் இருந்ததால் அந்த நம்பர்கள் மறந்து போகின்றன.

எந்தவிதமான குறுக்கீடும் இல்லாமல் அடிக்கடி அந்த போன் நம்பரை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டால், "ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்ய அர்ச்சனாவுக்கு போன் போடு" என்று சொல்வீர்களானால், அர்ச்சனா ஸ்வீட்ஸ் போன் நம்பர் உங்களின் நினைவுப் பகுதியில் நிரந்தரமாக இனித்துக் கொண்டிருக்கும். (இதைத்தான் sweet memories-னு சொல்றாங்க போலிருக்கு)

இயல்பு நிலை மறதியில் இன்னும் ஒரு மறதி உண்டு. அது ஊக்குவித்த மறதி. இது ஒரு மனிதரின் மகிழ்ச்சியான சமயமல்லாத நேரங்களைப் பொறுத்து ஏற்படக்கூடிய மறதி. அதாவது உங்களுக்கு விருது கிடைத்தபோது நீங்கள் எப்படி இருந்தீர்கள். எவ்வளவு சந்தோஷப்பட்டீர்கள் என்பதெல்லாம் நினைவிலிருக்கும். அப்படிப்பட்ட சூழலை மறக்கவே முடியாது. ஆனால், இரண்டு நாள் முன்பு காலையில் நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் உங்களால் சொல்லமுடியாது. (சுஜாதா கட்டுரையில் சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது, அது அப்புறம்)

அதாவது மகிழ்ச்சியான நேரங்களை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்தச் சம்பவம் உங்கள் நினைவுப் பகுதியில் சேமிக்கப்படுகிறது. அந்த விருது உங்களை ஊக்கப்படுத்துவதாக அமைகிறது. ஊக்கப்படுத்துவதன் மூலம் அந்தச் செயல் உங்கள் நினைவுகளில் நிரந்தரமாகத் தங்கிப் போகின்றது. ஆக, உங்களை ஊக்கப்படுத்தாத பல சமயங்கள் உங்கள் நினைவிலிருந்து மறைந்து போகின்றது.

சரி. உங்கள் மறதியைச் சோதிக்கவென்று சிலர் இருப்பார்கள். "காலைல என்ன சாப்பிட்ட, சொல்லு பார்க்கலாம்" என்று கேட்பார்கள். உண்மையிலேயே உங்களுக்கு மறந்து போகாமல் இருந்தால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியும். கூடவே நீங்கள் அவர்களிடம் திருப்பிக் கேட்க ஒரு விஷயம் இருக்கிறது. "உன் பாக்கெட்ல எவ்வளவு சில்லரை காசு இருக்கு, கையிலெடுக்காமல் சொல்லு பார்க்கலாம்" என்று கேட்டுப் பாருங்கள். நிச்சயம் அவர்களால் சொல்ல முடியாது. அவர்களுக்கும் மறந்து போயிருக்கும்.

மறதி ஒரு நோய் என்னும் அளவுக்குப் போவதெல்லாம் கடுமையான மனஅதிர்ச்சி ஏற்படும்போது மட்டும்தான். அம்னீஷியா என்பது கடுமையான மறதி நோய். சில சமயங்களில் கடுமையான காயம் ஏற்பட்டாலும் இப்படிப்பட்ட மறதி ஏற்படும்.

சரி, சில விஷயங்களை மறந்து போக நீங்கள் ஆசைப்படுவீர்களானால் இந்தப் பகுதி உங்களுக்காக.

முதல் விஷயம். நீங்கள் மறந்து போக நினைக்கும் விஷயத்தை விட உங்களுக்குப் பிடித்தமான வேறொரு விஷயத்தில் ஈடுபடுங்கள். கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுங்கள். களைத்துப் போகும் வரை உங்களை அந்த வேலையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஏதாவது மாற்று விஷயத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். மனதுக்கு வேலை இல்லாதபோது உங்கள் நினைவுகள் மறக்கடிக்கப்படும்.

தனிமையான சூழலில் இருக்காதீர்கள். தனிமையான சூழல் உங்களின் மனம் உங்கள் நினைவுகளை அள்ளிக் கொண்டு வந்து உங்கள் முன் போட்டுவிடும்.

மறக்க நினைக்கும் விஷயம் நடந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாறிக் கொள்ளுங்கள். பெரும்பாலும் அந்த இருப்பிடங்கள் உங்களை அடிக்கடி மலரும் நினைவுகளுக்குக் கொண்டு போய்விடும்.

இதெல்லாம் தாண்டி காலம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. காலப்போக்கில் மறந்துபோக முடியும். அதாவது கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அல்லது சில வருஷங்களுக்குப் பிறகு மறக்க நினைத்த விஷயத்தில் உங்களுக்கு இருந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோய்விடும். ஒரு விஷயத்தின் முக்கியத்துவம் குறைந்து போகும்போது அந்த விஷயம் உங்கள் நினைவுப் பகுதியில் இருந்து ம(றை)றந்து போய்விடும்.

அது சரி, இந்த நினைவு மறதி எல்லாமே ஒரு முக்கியமான விஷயத்தோடு தொடர்புடையது என்றுதான் நாம் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம். அது என்ன என்று மறக்காமல் ஆர்வத்தோடு இருப்பவர்கள் தமிழோவியத்துக்குப் போய்ப் பாருங்க.

சுஜாதா அவருடைய கட்டுரையில் சொன்ன விஷயம் இதுதான்
___________________________________________________

ஒரு இண்டர்வியூவில் நான்கு நபர்கள் வேலைக்கு வந்தவரிடம் கேள்வி கேட்கிறார்கள்.

அப்போது ஒரு கேள்வி: நீ இன்னைக்கு காலைல என்ன சாப்பிட்டே"

வேலைக்காக வந்தவர்: மோர் சாதமும் ஊறுகாயும்

கேள்வி கேட்டவரின் அடுத்த கேள்வி: போன் பிப்ரவரி 24-ம் தேதி காலல என்ன சாப்பிட்டே

வேலைக்கு வந்தவர்: மோர் சாதமும் ஊறுகாயும்

கேள்வி கேட்டவர்: (ஆச்சரியத்துடன்) எப்படி கரெக்டா சொல்ற

வேலைக்கு வந்தவர்: பத்து வருஷமா காலைச் சாப்பாடு மோர் சாதமும் ஊறுகாயும்தான்.

==============================================================

No comments: