Friday, March 26, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள்

"ஞாபக மறதியா" இந்த லிங்கை கிளிக் பண்ணவங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம். ஞாபகம் வேற. மறதி வேற.

குழப்பமா இருக்கா..?

ஞாபகம் வெச்சுக்குங்க. நாம இந்த வாரம் பாக்கப் போற விஷயம் ஞாபகம்.

இந்த ஞாபகத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். குறுகிய கால ஞாபகம்; நீண்ட கால ஞாபகம். இந்த வகைகளையெல்லாம் நாம் பிறகு பார்க்கலாம். முதலில் ஞாபகம் எனும் விஷயத்துக்கு வருவோம்.

ஞாபகம் வைத்துக் கொள்வது பற்றி ஆய்வாளர்கள் எழுதி வைத்துவிட்டுப் போனதெல்லாம் சில வரையறைகள் மட்டும்தான். அவை அனைத்தும், செயல்முறை குறித்த விளக்கங்களாகவே இருக்கின்றன. உங்களின் ஞாபகசக்தியை உங்களுடைய நடத்தையின் மூலம் ஆராய முடியும்.

ஞாபகம் என்பது நீங்கள் ஒரு விஷயத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ளும்போது அந்த விஷயத்தில் எவ்வளவு அக்கறையுடன் கற்றுக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்தே ஞாபகம் என்பது அமைகிறது.

சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி ஞாபகம் என்பது உங்களுக்குத் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளவும், ஒருங்கிணைக்கப் பெற்ற ஒருவிதச் சிறப்புத் தன்மை கொண்ட தூண்டல்களின் தொகுதிதான் என்று கூறுகின்றனர்.

சுருக்கமாகச் சொல்ல முடியுமானால், நினைவு என்பது செய்திகளின் களஞ்சியம். நீங்கள் சேமித்து வைத்துள்ள செய்திக் களஞ்சியத்திலிருந்து உங்களுக்குத் தேவையானதை, தேவையான சமயத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்கிறீர்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியல் வல்லுநருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இப்படித் தேவையானதை, தேவையான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியுமானால், உங்களுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும் செய்திக் களஞ்சியத்தின் அளவை, அவர் சோதிக்க விரும்பினார். அவருடைய ஆய்வின்படி அவர் பெற்ற விவரங்கள்தான் ஞாபகம் என்பது இரண்டு வகை. ஒன்று நீண்ட கால நினைவு; மற்றொன்று குறுகிய கால நினைவு.

முதலில் குறுகிய கால நினைவு என்பதைப் பார்க்கலாம். அது என்ன குறுகிய கால நினைவு? பெரும்பாலும் வாய்மொழிச் சொற்கள் அத்தகையது. சில விஷயங்கள் ஒரு சில கணங்கள் மட்டுமே உங்கள் நினைவில் இருக்கும். அதன் பிறகு அதை நினைவுக்குக் கொண்டு வருவது முடியாமல் போய்விடும்.

ஒரு சின்ன உதாரணம்: ஒரு டெலிபோன் டைரக்டரியிலிருந்து ஒரு நம்பரைப் பார்த்து போன் செய்கிறீர்கள். உங்களுக்கு தேவையானதைக் கேட்கிறீர்கள். அவர்கள் ஸ்டாக் இருக்கிறதா? என்று பார்த்துவிட்டு மறுபடி போன் செய்வதாகச் சொல்கிறார்கள்.

உடனே, வேறு ஒரு கம்பெனிக்கும் போன் செய்து அதே விவரத்தைக் கேட்கிறீர்கள். பத்து நிமிடம் கழித்து போனில் தகவல் சொல்வதாகச் சொல்கிறார்கள். நேரம் ஆனது. பதில் வரவேயில்லை.

பத்தே நிமிஷம் காத்திருந்துவிட்டு, உங்கள் பொறுமைக்கு வந்த சோதனையாக நினைத்துக் கொண்டு நீங்களே போன் செய்கிறீர்கள். நீங்கள் போன் செய்வதற்கு முன் ஒரு சின்ன விஷயம் சொல்லிவிடுகிறேன். மனிதர்களின் கவன ஈர்ப்பு மற்றும் நினைவுகொள் திறன் எண்களைப் பொறுத்தளவு நான்கு முதல் எட்டு எண்கள் மட்டுமே. சரி, இப்போது போன் செய்கிறீர்கள். முதலில் விவரம் கேட்ட கம்பெனிக்கு போன் செய்வதற்கு, நீங்கள் டெலிபோன் டைரக்டரியைத் தேடினால் அது குறுகிய கால நினைவு.

அதாவது, முதல் முறை செய்த நம்பருக்கே மறுபடி போன் செய்திருந்தால் உங்களால் டைரக்டரியைப் பார்க்காமலே செய்திருக்க முடியும். வேறொரு எண்ணுக்கு நடுவே போன் செய்தீர்களே - அதுதான் இங்கு வந்து குறுக்கிடக்கூடிய விஷயமாகிவிட்டது. அதே நம்பருக்கே மறுபடி போன் செய்திருந்தால் உங்களின் தொடர் முயற்சிகளினால் உங்களின் நினைவுப் பகுதியில் சேமிப்பாகியிருக்கும். தொடர் முயற்சிகளுக்குக் குறுக்கீடாக அமையும் வேறு சில விஷயங்களினால்தான் அந்த எண் உங்கள் நினைவுப் பகுதியில் சேகரிக்கப்படவில்லை.

இந்தக் குறுகிய கால நினைவில் மிக முக்கியமானது, பொருளற்ற ஒரு விஷயத்தை அதிக காலம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்பதுதான். அடுத்த செய்தி உங்களின் நினைவுப் பகுதியில் தானாக சேமிக்கப்பட்டுவிடும். ·பிளாப்பி டிஸ்கைப் போல "இடமில்லை" என்றோ "புரொடெக்ட் செய்யப்பட்டது" என்றெல்லாம் சொல்லாமல் தானாக அடுத்த விஷயம் வந்து உங்களின் நினைவுப் பகுதியில் சேமிக்கப்பட்டுவிடும்.

அதாவது copy and paste போல. நீங்கள் கடைசியாக copy செய்த விஷயத்தை paste செய்ய முடியும். அதற்கு முன் இருப்பதை paste செய்ய வேண்டுமானால் clip board-ல் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதைப் போன்றதே இதுவும்.

சரி, நீண்ட கால நினைவு என்பது அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது. முதல் முறை போன் செய்தீர்களே அந்தக் கம்பெனிக்கு மறுபடி போன் செய்கிறீர்கள். அடுத்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மறுபடியும் அந்தக் கம்பெனிக்கு போன் செய்கிறீர்கள். அன்று மாலை உங்களை அதே எண்ணுக்கு மறுபடி போன் செய்யச் சொன்னால் கொஞ்சம் யோசித்து அதே நம்பருக்கு போன் செய்துவிட முடியும். இது எப்படி சாத்தியம் என்பவர்களுக்கு ஒரு விஷயம். நீண்ட கால நினைவுக்குத் தேவையானதெல்லாம் மீண்டும் மீண்டும் அந்தச் செயல் நிகழ வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்வது; செய்து பார்த்துவிடுவது; ஒத்திகை பார்ப்பது. இவை மட்டும்தான் ஒரு விஷயத்தை நீண்ட கால நினைவில் வைத்திருக்க முடியும்.

இந்த ஒத்திகையின் மூலம் அந்த போன் நம்பர் உங்கள் நினைவில் அன்று மாலை வரை நினைவில் இருக்கும். இரண்டு நாள் கழித்து அந்த எண்ணுக்கு போன் செய்ய வேண்டுமானால் முதல் முறை நீங்கள் டைரக்டரியைத் தேடுவீர்கள். அதன் பிறகு உங்களின் நினைவுப் பகுதியில் அந்த எண் சேமிக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து அந்த எண்ணுடன் தொடர்பு ஏற்படுமானால் அந்த எண்கள் உங்களின் நீண்ட நாள் நினைவில் சேமிக்கப்படும். நமக்குத் தெரியாத செய்திகளை விட பழக்கமான செய்திகள் பல நினைவுப் பகுதியில் எளிமையாகச் சேமிக்கப்படுகின்றன.

ஞாபகம் வைத்துக் கொள்ள சில பயிற்சிகள் மேற்கொள்ளலாம். எளிமையான பயிற்சிதான், முடிந்தால் செய்து பாருங்கள். தினமும் நீங்கள் சாப்பாட்டு மேஜையின் முன் உட்காரும்போது அதுவரை நடந்ததை நினைவுக்குக் கொண்டு வரப் பழகிக் கொள்ளுங்கள்.

இந்த பட்டியலிடும் முறையினால் பல சின்னச் சின்ன விஷயங்களை தவறாமல் உங்கள் கவனத்தில் இருத்திக் கொள்ள முடியும். மாடியிலிருந்து இறங்கிய பிறகு, வண்டி சாவியை வீட்டிலேயே வைத்துவிட்டு மறுபடி மாடி ஏறுவது; லைப்ரரி புத்தகங்களை எடுத்துக் கொண்டு மூன்று கிலோமீட்டர் வண்டியோட்டிக் கொண்டு போன பிறகு லைப்ரரி லீவு என்று தெரிந்து வருத்தப்படுவது; இது போன்ற பல சின்னச் சின்ன விஷயங்களை கவனமாகச் செய்ய முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதுதான் இந்தப் பட்டியல் போடும் முறை.

அதாவது, காலையில் சாப்பாட்டு மேஜையின் முன் உட்கார்ந்தவுடன், அன்று காலை எழுந்தது முதல் டைனிங் டேபிள் முன் உட்காரும் வரை என்ன நடந்தது என்பதை, சின்னச் சின்ன விஷயங்களையும் கூட உங்கள் நினைவிலிருந்து கொண்டு வரப் பாருங்கள். அதாகப்பட்டது, காலையில் எழுந்தவுடன் பெட்டிலிருந்து இறங்கினேன். பெட்டிலிருந்து இறங்கும்போதுதான் பெட்டின் முனையில் கிழிந்திருப்பது கண்ணில் பட்டது. பாத்ரூமில் நுழைந்ததும் பேஸ்ட் இன்றோடு கடைசி என்பதைத் தெரிந்து கொண்டது. இப்படி உங்கள் பட்டியல் காலை உணவு வரை நீள வேண்டும். அதுவரை நடந்த அனைத்தையும் நினைவிலிருந்து கொண்டு வாருங்கள்.

அடுத்து மதிய உணவுக்கு அமரும்போதும் ஒரு பட்டியல் போட்டுவிடுங்கள். காலை உணவுக்குப் பிறகு மதிய உணவு வரை. அடுத்த பட்டியல் இரவு உணவின்போது. சாயங்காலம் காபி குடித்துவிட்டு வாசலில் திட்டு மேலேயே டம்ளரை வைத்துவிட்டு வந்தேன் என்பது வரை அதில் இடம் பெற வேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததிலிருந்து மதிய உணவு வரை. அடுத்த மீண்டும் இரவில் ஒரு பட்டியல். அதற்கு அடுத்த நாள் மாலை காபி குடிக்கும்போது இதே பட்டியலை காலையில் ஆரம்பித்து மாலை காபி குடிப்பது வரை பட்டியல் போடுங்கள். இப்படி பட்டியல் போடும் காலத்தை நீட்டிக் கொண்டே போகலாம். இரண்டு நாளுக்குப் பிறகு வழக்கம்போல சாப்பாட்டு மேஜையில் பட்டியல் போடுங்கள். மறுபடியும் நீங்கள் இந்தப் பட்டியலின் காலநிலையை மாற்றிக் கொள்ளலாம்.

இந்தப் பட்டியலை நீங்கள் நாளடைவில் நிறுத்திவிடலாம். உங்களுக்கே ஞாபகசக்தியின் மேல் ஒரு நம்பிக்கை வந்தபிறகு இந்தப் பட்டியலிடும் முறையை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பட்டியலிடும் முறை உங்களின் குறுகிய கால மற்றும் நீண்ட கால நினைவினை மேம்படுத்தும்.

அதன் பிறகு, "ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..." என்று நீங்கள் பாட்டு பாடிக் கொண்டு உங்கள் பழைய நினைவுகளுக்கே போக முடியும். ஏனென்றால் பல பழைய நினைவுகள் எல்லோருக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கிறது என்பதுதான் நிஜம்.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன ஒரு விஷயம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? மறந்து போயிருந்தால் அதுதான் விஷயம்.

மறதிக்கான கட்டுரையை மறக்காமல் தமிழோவியத்துக்குக் கொடுத்துவிட்டேன். இங்கே சொடுக்குங்கள். தமிழோவியத்தில் பார்க்கலாம்.

No comments: