Monday, April 19, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 4 (சிக்கலான கற்றல்)



அட என்னங்க இது, கத்துக்கிறதே சிக்கல். அப்புறம் என்ன சிக்கலான கற்றல்?

இது ஒன்றும் இடியாப்பச் சிக்கல் இல்லை. பெயர்தான் சிக்கல். மற்றபடி மிகவும் சாதாரண விஷயங்கள்தாம். நாம் தினமும் சந்திக்கும் எவ்வளவோ சிக்கல்களுக்கு மத்தியில் இதெல்லாம் ஒன்றும் இல்லை.

உளவியலாளர்கள் வைத்த பெயர் சிக்கலான கற்றல். எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்த உங்களுக்கு தடையாகவோ அல்லது சிரமமாகவோ இருக்குமானால் அது சிக்கலான கற்றல்.

ஒண்ணும் பெரிய விஷயமில்லைங்க. சிக்கலான சில விஷயங்களைத் தீர்ப்பதற்கு ஒரு எளிமையான வழி இருக்கிறது. அதைக் கடைசியில் பார்க்கலாம்.

சிக்கலான கற்றலை நம் உளவியலாளர்கள் வழக்கம் போல ஒரு சில வகைகளாகப் பிரித்து வைத்துவிட்டார்கள். அவர்கள் பிரித்து வைத்த கணக்குப்படி ஏகப்பட்ட பிரிவுகள். அதனையடுத்து பல உட்பிரிவுகள்; அதற்குப் பிறகு சில உப பிரிவுகள் - இப்படி நிறைய இருக்கின்றன. ஆனால், எல்லாவிதமான கற்றலுக்கும் அடிப்படை ஒன்றுதான்.

அது உங்களிடம் இருக்கும் ஆர்வம். தெரிந்து கொள்ளும் ஆர்வம்; "அட, இது புதுசா இருக்கே" என்று திகைக்க வைக்கும் ஆர்வம்; புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

இப்படித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

பொதுவாக கற்றல் என்பதே குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களிடம்தான் இப்படிப்பட்ட ஆர்வத்தைப் பார்க்க முடியும். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெரியவர்களால் பதில் சொல்லி மாளாது. ஏனென்றால், அவர்களுக்குப் புரியாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. நாம் செய்யும் எல்லா விஷயங்கள் குறித்தும் அவர்களுக்கு நிறைய சந்தேகங்கள், கேள்விகள் இருந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் அவர்களிடம் அடுத்த எதிர்கேள்வி தயாராக இருக்கும்.

"இந்த வயசில என்ன கேள்வி கேக்குது பாரேன்!" என்று நினைக்க வேண்டாம். இந்த ஆர்வம் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான். இந்த ஆர்வமெல்லாம் ஐந்து வயது முதல் ஏழு வயதிற்குள்ளாக கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போய்விடுகின்றன. அதற்கு மேல் அவர்களின் கவனமெல்லாம் வேறுபுறமாக மாறிவிடும். அதன் பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களுக்குக் கவலையில்லை.

ஆனால், சில குழந்தைகள் டீன் ஏஜ் பருவம் வரை ஆர்வத்துடன் இருப்பார்கள். இன்ன விஷயம் என்றில்லாமல் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களிடம் இருக்கும். பெரும்பாலான விஷயங்களை மிக எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

இது எப்படி சாத்தியம் என்பவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம், IQ என்று ஒரு விஷயமிருக்கிறது. போன வாரத்தில் கூட நுண்ணறிவு என்று ஒரு விஷயம் பார்த்தோமே; சமயத்துக்குத் தகுந்த மாதிரி யோசிக்க வைக்கும் சமயோசித புத்தி. அதுதான்.

இந்த நுண்ணறிவுத் திறன்தான் குழந்தைகளை ஆர்வத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அந்தக் குழந்தைகளின் நுண்ணறிவு (Intelligence quotient) அதிகமாக இருக்கும்.

நுண்ணறிவு மிக்க ஒருவர் எந்த ஒரு செயலையும் மிக எளிதாக, ஆர்வத்துடன் சிறப்பாகச் செய்யமுடியும். நுண்ணறிவு குறைந்த ஒருவர் புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லாதவராக இருப்பார். அவருக்கு ஒரு புதிய விஷயத்தைத் தெரிந்து கொள்வது மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கும்.

இந்த நுண்ணறிவு எல்லோருக்கும் அளவில் மாறுபடும். இந்த மாற்றம்தான் கற்றுக் கொள்வதில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுகிறது. உங்கள் நடவடிக்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. நுண்ணறிவுச் சோதனை மூலம் ஒருவரது நுண்ணறிவினை அளவிட முடியும்.

சரி, உங்கள் நுண்ணறிவுத் திறன் அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவுதானே. உங்களுடைய நுண்ணறிவுத் திறனைக் கணக்கிட்டுப் பார்க்க ஆன்லைனில் சில இணையதளங்கள் இருக்கின்றன. உங்களுக்காக ஒரே ஒரு இணையதள முகவரி http://www.iqtest.com/ உங்கள் நுண்ணறிவுத் திறனைச் சோதித்துப் பார்த்துவிட்டு வாருங்கள். அடுத்த வாரத்தில் அது குறித்த பல விஷயங்களைப் பார்க்கலாம்.


சரி, சிக்கலான கற்றலை அணுக எளிமையான ஒரு விஷயம்.
__________________________________________________

கடந்த வாரங்களில் குறிப்பிட்ட பட்டியல்களிலிருந்து இது வேறு மாதிரியான பட்டியல். கடிதம் எழுதுவது போல விளக்கமாக இந்தப் பட்டியலை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வசதியாக இருக்கும்.

தினமும் பத்து நிமிடங்கள் ஒதுக்கிவிடுங்கள். படுக்கைக்குப் போகும் முன் எழுதிவிடுங்கள். அதுதான் மிகவும் முக்கியம்.

சரி, என்ன விஷயம் என்று பார்க்கலாம். உங்களுக்கான பிரச்னையை ஒரு கடிதமாக அல்லது சின்னக் கட்டுரையாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் எழுதிக் கொள்ளுங்கள். "அடடா, அவசரப்பட்டுவிட்டோமே, இப்படிச் செய்திருக்கலாமே?" என்று தோன்றுகிறதா? அதையும் எழுதிவிடுங்கள். குறைந்தது இரண்டு விஷயம் கண்டிப்பாக அதில் இருக்க வேண்டும். ஒன்று உங்கள் பிரச்னை. இரண்டாவதாக அதற்கு உங்கள் தீர்வு. அடுத்ததாக நீங்கள் அந்தத் தீர்வை மாற்றி வேறு விதமாக இருக்கலாமே என்று நினைத்தது. மூன்றாவதாக இருக்கும் இந்த விஷயம் சில சமயங்களில் மட்டுமே இடம் பெறும். அதனால் என்ன? பரவாயில்லை. ஆனால், தினமும் இப்படி எழுதி வைத்துக் கொள்வதைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

வாரக் கடைசியில் அந்தக் கடிதங்களை (கட்டுரைகளை) எடுத்துப் படித்துப் பாருங்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு படிக்கும்போது உங்களுக்கு வேறு விதமான தீர்வு கிடைக்கலாம். அப்படி வேறு விதமான தீர்வு கிடைத்தால் அதையும் எழுதி, அந்தக் கடிதத்தை மீண்டும் அடுத்த வாரம் படிப்பதற்காக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, ஒரு வாரம் கழித்து அந்தக் கடிதத்தைப் படிக்கும்போது நீங்கள் எழுதியிருக்கும் தீர்வு சரி என்றே தோன்றுகிறதா? அப்படியானால் அந்தக் கடிதத்தை எடுத்து வேறு ஏதாவது ஓரிடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

மறுபடியும் அடுத்த வரும் தினங்களில் எழுதுவதைத் தொடருங்கள். அடுத்த வாரக் கடைசியில் படித்துப் பாருங்கள். போன வாரக் கடிதங்கள் இருக்குமானால் அதையும் படித்துப் பாருங்கள். உங்கள் தீர்வு சரி என்று தோன்றும் வரை அந்தக் கடிதங்களை அடுத்தடுத்த வாரங்களுக்கு சேர்த்து வைத்திடுங்கள். சரி என்று தோன்றிய கடிதத்தை வேறு இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.

இப்படி பத்திரப்படுத்திய கடிதங்களை சில மாதங்களுக்குப் பிறகு - வீட்டை சுத்தம் செய்யும்போது இந்தக் கடிதங்களெல்லாம் உங்களிடம் கிடைக்கும் - எடுத்துப் பாருங்கள். அப்போதும் நீங்கள் செய்தது சரி என்று தோன்றினால் அதற்கு மேல் அந்தக் கடிதத்தை நீங்கள் வைத்திருப்பதில் உபயோகமில்லை. தூக்கியெறிந்துவிடுங்கள்.

ஏனென்றால், அந்தக் கடிதத்தில் இருக்கும் விஷயம், அதற்கான தீர்வு - இவையெல்லாம் உங்கள் மனதில் பதிவாகியிருக்கும். அதே போன்ற பிரச்னை உங்களுக்கு மறுபடி வரும்போது இந்த சங்கதி நிச்சயம் உங்கள் ஞாபகத்துக்கு வரும். உங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும்.

ஆனால், நீங்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று, தினமும் இந்தக் கடிதத்தை சிரமம் பாராமல் எழுதவேண்டியதுதான்.

No comments: