Monday, March 22, 2004
சூரியனார் கோயில்
நவக்கிரகங்களுள் முதன்மையானது சூரியன். பண்டைய இலக்கியமான தொல்காப்பியத்தில் சூரிய வழிபாடு பற்றி பாடப்பட்டுள்ளது. சூரிய பகவானுக்குப் பிறகுதான் மற்ற கிரகங்கள்.
சூரியனார் கோயில் அமைந்திருக்கும் இடம் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரை. கஞ்சனூர்க்கு மேற்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும், ஆடுதுறைக்குத் தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும், திருமங்கலக்குடியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இத்தலத்துக்கு நவக்கிரகத் தலம் என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலுக்கு மயிலாடுதுறையிலிருந்தோ, கும்பகோணத்திலிருந்தோ பேருந்து மூலமாக வந்துசேரலாம்.
இக் கோயில் அமைந்திருக்கும் ஊரின் பெயரும் சூரியனார் கோயில்தான்.
முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1079 - 1120) இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. புராணங்களில் இத்தலத்துக்குக் கூறப்படும் தல வரலாறு மூலம் இக்கோயிலைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. பின்னாளில் விஜயநகர வேந்தர்கள் காலத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது திருவாவடுதுறை ஆதீனத்தின் மேற்பார்வையில் சிறப்புடன் திகழ்கிறது.
புராண வரலாறு
இமயமலையின் வடக்குப் பகுதியில் பல முனிவர்கள், நான்கு வேதங்களையும் ஆறு மெய்யறிவு நூல்களையும் பதிணென் புராணங்களையும் அறுபத்தாறு கலைகளையும் தொண்ணூற்றாறு தத்துவங்களையும் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அந்த முனிவர்களுள் ஒருவர் காலவ முனிவர். அவருடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தபோது பின்னாளில் அவருக்கு தொழுநோய் பீடிக்கும் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். அவருடனிருந்த முனிவர்கள் அவருடைய கவலையை அறிந்தனர். வரும் நோயைத் தடுக்கும் வழிகளை காலவ முனிவருக்கு எடுத்துக் கூறினர்.
காலவ முனிவர் இமயமலைச் சாரலில் ஐம்புலன்களை அடக்கி, நவக்கிரகங்களை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினால் ஈர்க்கப்பட்டு ஒன்பது தேவர்களும் காட்சியளித்தனர். அவருக்கு வேண்டும் வரம் அளிப்பதாகச் சொன்னதும் காலவ முனிவர் தம்மை தொழுநோய் பற்ற இருப்பதாகத் தெரிவித்து, அந்நோய் பற்றாமலிருக்க வரம் கேட்டார். ஒன்பது தேவர்களும் வரமளித்து மறைந்தனர்.
படைப்புக் கடவுளான நான்முகன் ஒன்பது தேவர்களையும் அழைத்து "உயிர்களாய்ப் பிறந்த அனைவரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அந்த முனிவருக்கு வர இருந்த நோய் உங்களுக்கு வரும்" என்று சாபம் கொடுத்தார். அதற்குப் பரிகாரமாக அவர்களை தென் தமிழ்நாட்டின் காவிரிக் கரையில் இருக்கும் வெள்ளெருக்கங்காட்டில் கார்த்திகை மாதம், முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரு ஞாயிறு வரை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் எண்ணி ஒழுக்கத்தோடு தவம் புரியச் சொன்னார்.
அவர்கள் சாபம் நீங்குவதற்காக நான்முகன் வாக்கின்படி வெள்ளெருக்கங்காட்டில் கடுந்தவம் இருந்தனர். பன்னிரு வாரங்களுக்குப் பின்னர் முப்பெருங்கடவுளரும் காட்சி தந்தனர். "உங்களைப் பிடித்திருந்த தொழுநோய் தொலைந்துவிட்டது. இன்று முதல் இந்த இடம் உங்களுடையதே. துன்பம் தொலைய உங்களிடம் வருவோர்க்கு நீங்களே அருள் புரிய வரம் தருகிறோம்" என்று வரம் தந்தனர்.
தேவர்கள் ஒன்பதின்மரே துன்பங்களை நீக்கும் பேறு பெற்றதும் அயனும், அரியும் செய்ய ஏதுமில்லாமல் போய்விடும் என்பதற்காக சிவன் தனது கையிலிருந்த திரிசூலத்தைக் கொண்டு ஒன்பது புனித நீர் நிலைகளை உருவாக்கினார். அந்நீர் நிலைகளில் புனித நீராடி அன்போடு வழிபடுபவர்களுக்கு மட்டுமே நவக்கிரகங்களின் அருள் கிடைக்கும். சூரியன் தலைமையில் அனைவரும் மேற்கொண்ட தவத்தால் அங்கே அனைவருக்கும் கோவில் உண்டாகும். மேலும், சூரியனார் கோயில் என்ற பெயரையே இந்த ஊரும் வழங்கி வருமாறு அருள் புரிந்தார்.
வெள்ளெருக்கங்காட்டில் இக்கோயில் பிரார்த்தனைத் தலமாக உருவாகியது. இந்தக் கோயிலை வழிபடக்கூடிய முறைகள் மற்ற கோவில்களிலிருந்து மாறுபட்டது. அதற்கு இந்தக் கோயிலின் அமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். இக்கோயில் இந்த ஊரின் மத்தியில் மேற்கு முகமாக அமைந்திருக்கிறது. 50 அடி உயரமுள்ள ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. ஐந்து கலசங்கள் உடையது. கோபுரத்தில் புராண வரலாற்றினைக் குறிப்பிடும் வகையில் சுதைச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.
கோயிலின் வெளியே சூரிய புஷ்கரணி அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்துக்கு வருபவர்கள் முதலில் இந்த புஷ்கரணியில் நீராட வேண்டும். சிவன் அளித்த அருளின்படி நீராடாமல் இந்தக் கோயிலை வழிபடுதல் கூடாது. நீராடி முடித்து சிரம் மேல் கரம் கூப்பி ராஜகோபுரத்தை வணங்கி கோபுர தரிசனம் செய்வது முறை. ராஜகோபுரத்தை அடுத்ததாக கொடி மரம் அமைந்திருக்கிறது. கொடி மரத்தை அடுத்ததாக அமைந்திருப்பதுதான் சூரியனார் கோயில். கோயிலைச் சுற்றி பிரகாரமும் நாற்புறமும் உயரமாக அமைந்த மதில்களும் உள்ளன. பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அமர்ந்திருப்பவர் கோள் தீர்த்த விநாயகர்.
கோள் தீர்த்த விநாயகர்
கோபுர தரிசனம் முடித்து கோயிலினுள் நுழைந்ததும் வணங்க வேண்டியவர் கோள் தீர்த்த விநாயகர். நவக்கிரக நாயகர்கள் சாபம் பெற்று வெள்ளெருக்கங்காட்டை அடைந்து தவத்தைத் தொடங்கும்போது, தங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கும் பொருட்டு விநாயகரை வணங்கி தவம் மேற்கொண்டனர். நவக்கிரகர்களின் கோளைத் தீர்த்து வைத்த விநாயகர் "கோள் தீர்த்த விநாயகர்" எனப்படுகிறார்.
ஸ்ரீகாசி விஸ்வநாதரும் விசாலாட்சி அம்மையும்
அடுத்ததாக, விநாயகர் சந்நிதியிலிருந்து வடகிழக்காக இருக்கும் முதல் மண்டபம் நர்த்தன மண்டபம். இதன் படிக்கட்டுகளின் வழியாக இந்த மண்டபத்தைக் கடந்து அடுத்ததாக இருக்கும் சபாநாயகர் மண்டபத்தை அடைய வேண்டும். இந்த மண்டபத்தில் நடராசரும், நவக்கிரக உத்ஸவ மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கின்றனர். இவர்களை தரிசித்த பிறகு அடுத்ததாகப் போக வேண்டிய இடம் ஸ்தபன மண்டபம். சபாநாயகர் மண்டபத்திற்குக் கிழக்கே அமைந்திருப்பதுதான் ஸ்தபன மண்டபம். இம் மண்டபத்தின் வடக்குப்பகுதியில் காட்சியளிக்கும் ஸ்ரீகாசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மையாரையும் வழிபட வேண்டும்.
சூரிய பகவான்
அதன் பிறகு நாம் தரிசிக்க வேண்டியவர் பிரதான கருவறையில் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் சூரிய பகவான். தனது இரண்டு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்தி புன்னகைத்தபடி காட்சியளிக்கிறார். சூரிய பகவானுக்கு இடது புறத்தில் உஷாதேவியும், வலதுபுறத்தில் பிரத்யுஷா தேவியும் (சாயாதேவி) நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு முன்னே அமைந்திருக்கும் மகா மண்டபத்திலிருந்து அர்த்த மண்டபத்துக்குள் நுழையும் வாயிலில் துவாரபாலகர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு முன்புறமாக சூரிய பகவானைப் பார்த்தபடி சூரியனின் வாகனமான குதிரை இருக்கிறது. சூரிய பகவானை தரிசிக்க ஸ்தபன மண்டபத்தைத் தாண்டி மகா மண்டபமான குரு மண்டபத்தின் வழியாக வந்து அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலுக்கு வெளியே சூரிய பகவான் சந்நிதியில் நின்று சூரிய பகவானை தரிசிக்க வேண்டும். பிரார்த்தனைகளை முடித்துக் கொண்ட பிறகு, அப்படியே திரும்பி நின்று குருபகவானை வழிபட வேண்டும்.
இக்கோயிலில் சூரிய பகவானுக்கு மட்டும் அவருடைய வாகனமான குதிரை தனியே இருக்கிறது. மற்ற நவக்கிரக நாயகர்களுக்கு வாகனங்கள் இல்லை. இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு நவக்கிரகக் கடவுளர்கள் வாகனமில்லாமல், கைகளில் கருவியில்லாமல், இரண்டு கரங்களுடன் காட்சியளிகின்றனர்.
குரு
மகா மண்டபத்தில் குதிரைக்குப் பின்பக்கமாக மேற்கில் சூரியனை நோக்கியபடி நின்றிருப்பவர் குரு பகவான். வலக்கையால் அபய முத்திரை காட்டி இடக்கையைத் தொடையில் ஊன்றியபடி இருக்கிறார். சூரிய பகவானிடம் பிரார்த்தனைகளை முடித்துக் கொண்ட பிறகு, அப்படியே திரும்பி நின்று குருபகவானை வழிபட வேண்டும். இவரை தரிசனம் செய்து பிரார்த்தனைகளைச் சொல்லி முறையிட்ட பிறகு பக்தர்கள் தரிசிக்க வேண்டிய மற்றொருவர் சனி பகவான்.
சனீஸ்வரன்
மகா மண்டபத்திலிருந்து தென் புறத்தில் இருக்கும் கர்ண துவார வாயிலின் வழியாக கீழே இறங்கி, தெற்குப் பிரகாரத்தை அடைந்து சூரிய பகவானின் கருவறையை ஒட்டினார் போலச் செல்லும் வழியில் கிழக்கே சென்று சனி பகவானை வழிபட வேண்டும். தெற்குப் பிரகாரத்தில் அமைந்த சிறு கோயிலில் நின்றவாறு காட்சியளிக்கிறார் சனீஸ்வரன். வலக்கையால் அபய முத்திரை காட்டி, இடக்கையைத் தொடையில் ஊன்றியிருக்கிறார்.
அடுத்ததாக தரிசிக்க வேண்டியவர் புதன்.
புதன்
தெற்குப் பிரகாரத்திலேயே சனீஸ்வரருக்குக் கிழக்கே இருக்குன் சிறு கோயிலில் நின்ற கோலத்தில் மேற்கு முகமாகக் காட்சியளிக்கிறார். வலக்கரம் அபய முத்திரையைக் காட்டுகிறது. இடக்கரம் தொடையில் ஊன்றப்பட்டிருக்கிறது.
அங்காரகன்
கிழக்கு, தெற்குப் பிரகாரச் சந்திப்பில் இருக்கும் சிறு கோயிலில் நின்ற கோலத்தில் வடக்கு முகமாக காட்சியளிக்கிறார். வலது கையால் அபய முத்திரை காட்டி, இடது கையைத் தொடையில் ஊன்றி இருக்கிறார்.
சந்திரன்
அங்கிருந்து வடக்காகத் திரும்பிச் சென்று சந்திரனை தரிசிக்க வேண்டும். கிழக்குப் பிரகாரத்தில் அமைந்த சிறு கோயிலில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர் சந்திரன். இவரது இரு கரங்களிலும் குமுத மலர்களை ஏந்தியபடி இருக்கிறார். இவருடைய தலைக்குப் பின்னால் மதியின் முழுவட்டம் தெரிகிறது. வேறெந்தக் கோயிலிலும் இப்படி ஒரு காட்சியைக் காணமுடியாது. மற்ற கோயில்களில் சந்திரனின் தலைக்குப் பின்புறம் பிறைமதியின் பிறைவட்டமே இருக்கும்.
கேது
கிழக்கு வடக்குப் பிரகாரங்களின் சந்திப்பில் அமைந்திருக்கும் சிறு கோயிலில் நின்ற கோலத்தில் காட்சி தரும் இவர், பாம்புடன் கூடிய மனிதத் தலை கொண்டவராகக் காட்சியளிக்கிறார். இவர் தமது இரு கரங்களையும் குவித்து அஞ்சலி முத்திரையாக வைத்திருக்கிறார்.
கேது தரிசனத்துக்குப் பிறகு மேற்கு முகமாகத் திரும்பிச் சென்று சுக்கிரனையும் ராகுவையும் தரிசிக்க வேண்டும்.
சுக்கிரன்
வடக்குப் பிரகாரத்தில் இருக்கும் சிறு கோயிலில் தெற்கு முகமாக நின்ற கோலத்தில் இருக்கும் சுக்கிரன், வலது கையால் அபய முத்திரை காட்டி, இடது கையைத் தொடையில் ஊன்றியிருக்கிறார்.
இராகு
சுக்கிரனுக்குத் தெற்கே இருக்கும் சிறு கோயிலில் கிழக்கு முகமாக நின்றிருக்கும் இராகு, தலைப் பகுதி அசுரன் தலையாகவும், உடல் பாம்பின் உடலாகவும் காட்சியளிக்கிறார்.
கடைசியாக தரிசிக்க வேண்டியவர் தேஜஸ் சண்டேசுரர்.
தேஜஸ் சண்டேசுரர்
சூரியன் ஒளிமயமாக இருப்பதால் தேஜஸ் சண்டர் எனப்படுகிறார். வடக்குப் பிரகாரத்தில் ராகுவுக்கு மேற்கே இருக்கும் சிறு கோவிலில் தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறார்.
அங்கிருந்து அடுத்தபடியாக சூரியனார் கருவறையை ஒட்டி முன்பு வந்த வழியாகத் திரும்பி வந்து சனீஸ்வரர் கோயிலைத் தாண்டி தெற்குப் பிரகாரத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து மேற்கு நோக்கி நடந்து கோள் தீர்த்த விநாயகர் சந்நிதிக்கு வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அடுத்ததாக கொடிமரத்தை அடைந்து வீழ்ந்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு பிரகாரத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். பிரகாரத்தைச் சுற்றி வந்த பிறகு கொடிமரத்தடியில் மீண்டும் விழுந்து வணங்கி எழ வேண்டும். பிறகு ஒரு ஓரமாக ஒதுங்கி அமர்ந்து நவக்கிரக நாயகர்களை மனத்தில் நிறுத்தி தியானிக்க வேண்டும். தியானம் முடித்து கோபுர வாசல் வழியாக வெளியேறுதல் நலம். இதுவே சூரியனார் கோயிலில் வழிபடும் முறையாகும்.
வழிபாடுகள்
தீர்த்தவாரி; மாசியில் சிவராத்திரி, குரு, சனி பெயர்ச்சியின்போதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இது தவிர ஆடி கடைச் செவ்வாய், ஆவணி முதல் ஞாயிறு நவராத்திரி, கார்த்திகை ஞாயிறு, திங்கள், தை அஷ்டமி ஆகிய நாள்களில் விழா நடைபெறுகிறது.
தைத்திங்களன்று கோயிலின் தலமரமான வெள்ளெருக்கைத் தலையில் வைத்துக் கொண்டு நீராடுவது பின்னாலில் ஏற்பட்ட ஒரு பழக்கமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment