Saturday, May 15, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 7 (கவனம்)
பிரபலமான ஓவியர் ஒருவருடைய ஓவியத்தைத் திருடிக் கொண்டு போனவனைப் பிடித்து ஜெயிலில் அடைத்து வைத்திருந்தார்கள். அவனுக்கு சாப்பாடு எதுவும் தர வேண்டாம் என்று உத்தரவு. நான்கு நாட்களுக்குப் பிறகு அவனிடம் அந்த அழகான ஓவியத்தைக் கொண்டு போய் காட்டினார்கள். "எப்படி இருக்கிறது" என்று கேட்டார்கள்.

நான்கு நாள் பட்டினி இருந்தவன் கண்ணுக்குத் தென்பட்டது அந்த ஓவியத்தின் ஒரு ஓரத்திலிருந்த திராட்சை மட்டுமே. அதைச் சுட்டிக் காட்டி "இந்தத் திராட்சை மிகவும் சுவையாக இருக்கும்" என்றான். அந்த நேரத்தில் அவனுக்குத் தேவை அந்த திராட்சை மட்டுமே. அவன் கவனத்தில் அந்த திராட்சை மட்டுமே தென்படுகிறது.

கவனம் என்பது உங்கள் தேவைகளைக் கொண்டே அமைகிறது.

இந்த கவனம் இருக்கிறதே, இது ஆளாளுக்கு மாறுபடும். ஒவ்வொருத்தர் கவனமும் அவரவர் விருப்பப்பட்ட பொருளிலே அல்லது செயலிலே இருக்கும். ஒருவருடைய ஆர்வத்தைப் பொறுத்தே இந்த கவனமும் மாறுபடுகிறது.

ஒரு தெருப் பெயரைச் சொல்லி பத்து பேரிடம் வழி கேட்டுப் பாருங்கள். பத்து பேரும் பத்து விதமான அடையாளங்களைச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் அதிகம் விரும்பும் இடமாக அல்லது அவர்களுக்கு அதிகம் பழக்கமாக உள்ள இடங்களைக் கொண்டுதான் உங்களை வழிநடத்துவார்கள்.

உங்கள் அம்மாவைக் கேட்டுப் பாருங்கள். பிள்ளையார் கோவிலுக்கு அடுத்த தெரு என்று சொல்லுவார்கள். அதே இடத்தை உங்கள் தங்கையிடம் கேட்டுப் பாருங்கள். "நீ வழக்கமா சிகரெட் புடிச்சுகிட்டு நிப்பியே ஒரு டீக்கடை, அதைத் தாண்டி அடுத்த ரைட்ல இருக்கு" என்று வரும் பதில். உங்கள் நண்பனைக் கேட்க, அதே தெருவில் இருக்கும் ஒரு ஒயின் ஷாப் பெயரிலிருந்து வழி சொல்ல ஆரம்பிப்பார். இதுவே உங்கள் அப்பாவிடம் அந்தத் தெருவைப் பற்றி கேட்டுப் பாருங்கள். "நம்ம PWD வரதாச்சாரி வீட்டுக்கு அடுத்த தெரு" என்று சொல்வார். உங்கள் அண்ணியிடமிருந்து "பரஸ் ஜுவெல்லரி இருக்கே அதுக்கு எதிர்த்த மாதிரி இருக்கிறதுதான் அந்தத் தெரு" என்பதாக பதில் வரும்.

அவர்கள் அந்தத் தெருவை கவனித்து வைத்திருப்பது அப்படி.

சரி, அதே தெருவை இவ்வளவு விளக்கங்களுக்குப் பிறகு நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டிருப்பீர்கள்? "நிர்மலா டேபிள் டென்னிஸ் போவாளே, அந்த கிரவுண்டுக்கு அடுத்த தெருதானே?" இப்படியாக ஒரே தெரு எத்தனை விதமான கவனத்துக்குள்ளாகிறது.

சரி, இந்த கவனம் என்பது அவரவர் தேவையைப் பொறுத்தும் சூழ்நிலையைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

நீங்கள் போக வேண்டிய அவசரம். அதற்குத் தடங்கலாக விழுந்த சிக்னல். அடுத்த வண்டிகள் வரும்முன் போய்விடலாம் என்று நினைத்த அவசரம். போலிஸ்காரர் வந்துவிடுவாரோ என்ற பயம். இதெல்லாம் சேர்ந்து சைக்கிள்காரனை இடித்து விட்டீர்கள். ஒரே நேரத்தில் உங்கள் கவனத்தைப் பல விஷயங்களிலும் செலுத்த முயலும் இந்தச் செயலுக்கு கவனப் பகுப்பு என்று சொல்வார்கள். இந்த கவனப் பகுப்பு முறை பெரும்பாலும் நடைமுறைக்கு ஒத்து வருவதில்லை.

பிறகு எப்படி நண்பர்களுடன் பேசிக் கொண்டே சுற்றிலும் பார்த்துக் கொண்டே நடந்து போகின்றோம். சிகரெட் புகைத்துக் கொண்டே கைத்தடியைச் சுழற்றிக் கொண்டே போகின்றோம். இவையனைத்தும் ஒரே நேரத்தில் எப்படி சாத்தியம்?

இந்த கவனப் பிளவை உட்வொர்த் என்பவர் "ஒரே நேரத்தில் இரண்டு தனித்தனியான நடவடிக்கைகளில் கவனத்தைக் குவியும்படி செய்தல்" என்கிறார். இரண்டு விஷயங்களில் ஒன்று தானாகவே நடைபெறும். ஒரு விஷயம் மட்டுமே உளச் செயலாக இருக்கும். மற்றொன்று உடல் சார்ந்த செயலாக தன்னாலேயே நடைபெறும். நண்பர்களுடன் பேசுதல் உளச் செயல். நடந்து போகுதல் உடற்செயல்.

இப்படி இருக்க, கவனப்பிரிவு என ஒன்று உண்டு. கவனத்தை சமமாகப் பிரிக்க முடியாது. சமமாகப் பிரித்து இரண்டு வேலைகளைச் செய்ய வைக்க முடியாது.

நீங்கள் உங்கள் நண்பரின் பைக்கில் அவர் பின்னால் உட்கார்ந்து போயிருப்பீர்கள். அப்போது நண்பர் வண்டியோட்டிக் கொண்டே உங்களிடம் பேசிக் கொண்டு வருவார். ஆனால், திடீரென "என்ன சொன்னே" என்று உங்களைக் கேட்பார். அப்போது உங்கள் நண்பரின் கவனம் உங்கள் பேச்சில் இல்லை. வண்டியோட்டுவதில்தான் இருந்திருக்கிறது. அதற்கு முன் வரை அவர் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் வந்தார். பேச்சும் வண்டியோட்டுவதுமாக கவனம் மாறிக் கொண்டே இருக்கிறது.

இப்படி மாறிக் கொண்டே இருப்பதுதான் கவனம். அதாவது கேமராவின் ஷட்டர் ஸ்பீட் போல.

ஷட்டர் ஸ்பீட் வேகத்துக்கு இப்படி மாறிக் கொண்டிருக்கும் கவனத்தின் வீச்சு என்னவாக இருக்கும்? என்று உளவியலாளர்கள் கண்டுபிடித்து வைத்துள்ளார்கள். ஒருவர் எந்த அளவு கவனம் செலுத்தி செய்தியைச் சரியாக மனதில் பதிவு செய்ய முடியும் என்பதைக் கொண்டு அவருடைய கவன வீச்சினைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவருடைய கவனிக்கும் ஆற்றலில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதை கவனவீச்சின் அளவை சோதனை செய்யும்போது தெரிந்து கொள்ளலாம்.

இயல்பான ஒரு மனிதனின் கவனவீச்சு எழுத்துக்களைப் பொறுத்தவரை மூன்று என்கிறார்கள். எண்களைப் பொறுத்தவரை நான்கு. பரிசோதனைகள் பல செய்த பிறகு கண்டுபிடித்த தீர்வுகள் இவை.

அதனைக் கொண்டே வாகனங்களுக்கு எண்களை அளிக்கிறார்கள். மோட்டார் வண்டிகள் அனைத்தும் இதனடிப்படையிலேயே TMX 2541 என்று மூன்று எழுத்துக்களும் நான்கு எண்களும் வைத்திருந்தார்கள். தற்போது வாங்கும் வண்டிகளுக்கு ஒவ்வொரு TN 01 X 5498 என்று கொடுக்கிறார்கள்.

இந்த எழுத்துக்களும் எண்களும் அதிகமாகும் பட்சத்தில் கவன வீச்சு பாதிக்கப்படும்.

பொருள் தரமுடியாத ஒரு வடிவத்தைப் பார்ப்பதை விட பொருள்தரக்கூடிய வடிவத்துக்கு கவனவீச்சு அதிகமாக இருக்கும். TN என்பது தமிழ்நாடு என்பதையும், 01 எனப்படுவது அந்த வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் எண் பதிவான RTO - வைக் குறிப்பதாகும். இதே போல சில வண்டிகளில் தமிழில் எண்களை எழுதியிருப்பார்கள். அந்த எண்களை கவனத்தில் கொள்வதென்பது சற்று சிரமமான விஷயம். முதலில் சொல்லப்பட்ட TN 01 X 5498 என்பதை கவனித்த வேகத்துக்கு இதை கவனிக்க முடியாது.

கவனம் என்பது எல்லா வயதினரிடமும் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால், அந்தந்த வயதுக்குத் தக்க அந்த நேரத்து சூழ்நிலைக்கேற்ப கவனம் மாறுபடக்கூடியது. இப்படி மாறக்கூடிய கவனம் என்பது ஒருவரின் ஆர்வத்தைப் பொறுத்து அமைகிறது. மிகுந்த ஆர்வத்தோடும் கவனத்தோடும் இருக்கும் ஒருவருக்கு மிகச் சரியான ஊக்கம் கிடைக்குமானால் அவர் வாழ்நாளில் மிகச் சிறந்த பயனை அடையலாம்.

மிகச் சிறந்த பயனை அடைவதற்கான ஊக்கம் உங்களுக்கு தமிழோவியத்தில் வழங்கப்பட்டிருக்கிறது

1 comment:

home equity loans said...

home equity loans