Monday, October 06, 2008

இரண்டு பிஸினஸ்மேன்கள்


எல்லா பிஸினஸ்மேன்களும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போல. சிறு வயதிலிருந்தே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், தோல்விகள் வந்துவிடுமோ என்ற பயப்படாத குணம், தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னேறத் துடிக்கும் வெறி, அப்படியே தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தாலும் அத்தனையையும் துரத்தித் துரத்தி அடித்து துவம்சம் செய்து விரட்டி அடிக்கும் விடாமுயற்சி, தான் சாதிக்க நினைப்பதை சாதித்தே தீரவேண்டும் என்ற பிடிவாதம் - இவையெல்லாமே பிஸினஸ்மேன்களின் குணாம்சங்களாக இருக்கின்றன.

நேற்று ரிச்சர்ட் பிரான்ஸன் புத்தகத்தைப் படிக்கும்போது இவையெல்லாவற்றையுமே மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள முடிந்தது. படித்துக் கொண்டிருக்கும்போதே வேறு ஒரு பிஸினஸ்மேனின் வாழ்க்கையும் குறுக்கே வந்து கொண்டே இருந்தது. அது ஹென்றி ஃபோர்ட்.


ஹென்றி போர்டை ஒரு கண்டுபிடிப்பாளராக மட்டும் பார்க்க முடியவில்லை. ஒரு வெற்றிகரமான வியாபாரியாகத்தான் பார்க்க முடிகிறது. ஹென்றி ஃபோர்டையும் ரிச்சர்ட் பிரான்ஸனையும் ஒப்பிடலாமா, என்று கேட்போருக்கு, இரண்டு பேரின் வாழ்க்கையிலிருந்தும் பல சம்பவங்களை எடுத்துக் காட்ட முடியும். இரண்டு பேரின் வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள், அவற்றைச் சமாளிக்கும் விதம் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி.

ரிச்சர்ட் பிரான்ஸன் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதைச் சிறப்பான வகையில் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். வாடிக்கையாளர் திருப்தியே நமது வெற்றி என்பது ஃபோர்டின் சித்தாந்தம்.

இரண்டு பேரும் விளம்பர விஷயத்தில் மிகவும் நுணுக்கமாக விளையாடியிருக்கிறார்கள். விளம்பரமாக எதையும் கொடுக்காமல் நாள்தோறும் தம்மைப் பற்றிய செய்திகள் வரும்படி பார்த்துக் கொண்டவர்கள். தக்க சமயம் பார்த்து எதிரி நிறுவனங்களின் மேல் வழக்குப் போட்டு வெற்றி பெற்றவர்கள். இந்த வழக்கு விவரங்களையே தங்கள் விளம்பரமாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.

ஃபோர்டுக்கும் பிரான்ஸனுக்கும் வேறுபாடு என்று நினைத்தது ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான். ஃபோர்டு எப்போதும் பழைமைவாதியாகவே இருந்திருக்கிறார். மாடல் ‘T’ என்ற தனது காரை மேலும் அதிக வசதியுள்ளதாக மாற்ற விரும்பி ஒரு காரை அவர் முன்னால் நிறுத்தினார்கள். மிகவும் ஆவேசமாக அந்தக் காரின் கதவுகளைப் பிய்த்தெறிந்து காரின் மேல் ஏறிக் குதித்துக் குதித்து நசுக்கியிருக்கிறார்.

‘மாடல் டி மட்டும்தான் ஃபோர்ட் கம்பெனியின் கார். யார் அதை மாற்ற நினைத்தாலும் அது அவருக்கு நல்லதல்ல. மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் வெளியேறிவிடலாம்’ என்று கத்தினார் ஃபோர்ட்.

பிரான்ஸன் அப்படியல்ல. எப்போதும் புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செலுத்தி இஷ்டத்துக்குப் பல நிறுவனங்களை ஆரம்பித்திருக்கிறார். அவற்றில் பல வெற்றிகளும் உண்டு. தோல்வி அடைந்தவையும் உண்டு.

பிரான்ஸனிடமும் ஒரே ஒரு பழைமைவாதம் இருந்தது. அது தன்னுடைய நோட்டுப் புத்தகம். தான் நடத்தும் விமானத்தில் ஏறி வாடிக்கையாளரின் அருகில் அமர்ந்து கொண்டு, இந்த விமான சேவை எப்படி இருக்கிறது? என்று கேட்டுக் குறிப்பெடுத்துக் கொள்பவர்.

நிறைய சம்பாதித்துவிட்டோம் என்று ஒரு கட்டத்தில் சலித்துப் போகும்போது - தான் இல்லாமலே இந்த நிறுவனம் இயங்கும் என்ற நிலை வரும்போது, தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் மனித சமூகத்தின் மேல் அக்கறை கொண்டு சமூக சேவை செய்ய வருவதும் பிஸினஸ்மேன்களின் இயல்பாக இருக்கிறது.

ரிச்சர்ட் பிரான்ஸன்: டோன்ட் கேர் மாஸ்டர் - இதுதான் புத்தகத்தின் பெயர். ரிச்சர்ட் பிரான்ஸனை எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. புத்தகத்தைப் படித்து முடிக்கும்போதுதான் ஒரு விஷயம் தெரிந்தது. சமீபமாக இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் வெர்ஜின் மொபைலுக்கும் அவருக்கும் ஏதோ தொடர்பு என்பது புரிந்தது. அந்த மொபைலின் தயாரிப்பு என்னவோ டாடா நிறுவனம்தான். பிராண்டின் பெயரை மட்டும் வைத்து இங்கே மார்க்கெட்டிங் செய்கிறார்கள்.

முதல் சில பக்கங்களிலேயே இது குறித்து வந்திருக்கலாம் என நினைக்கிறேன். ரிச்சர்ட் பிரான்ஸன் யார்? அவரைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்பது போன்ற விவரங்கள் முதல் அத்தியாயத்திலோ அல்லது அதற்கும் முன்பாகவோ கொடுத்திருக்கலாம். சுவையான ஆரம்பம் இருந்தாலும், திரைப்படத்தில் வரும் கதாநாயகன் ஒருவனைப் போல் பிறந்தான், வளர்ந்தான், வியாபாரம் செய்தான், தோல்வி அடைந்தான். வெறி கொண்டான், வெற்றியின் உச்சத்தை அடைந்தான் என்று சொல்லி முடியும்போது இவர்தான் இந்தியாவில் வெர்ஜின் மொபைலை மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்கிறது புத்தகம்.

பிரான்ஸனின் ஆரம்ப கால வாழ்க்கையிலிருந்து சமீபத்திய மொபைல் மார்க்கெட்டிங் வரை நிறையவே சுவாரஸ்யங்கள் உண்டு.

மாணவர்களுக்கான பத்திரிகையை ‘ஸ்டூடண்ட்’ என்ற பெயரில் நடத்தி வருகிறார். பத்திரிகை இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிறது. காசு கொடுத்து வாங்குவதை விட ஓசியில் படிப்பவர்களே அதிகமாக இருந்தார்கள். ‘பரவாயில்லை, என்னுடைய நோக்கம் இளைஞர்கள் விரும்பிப் படிக்கும் ஓர் இதழைக் கொண்டு வருவதுதான். அது நிறைவேறினாலே போதும்’ என்கிறார் பிரான்ஸன். பிரான்ஸானுக்கென்று ஒரு தனி வட்டம் உருவாகிறது.

இது நாளடைவில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஓர் இயக்கமாக மாறுகிறது. வருமானம் இல்லாமல் போனதும் ஸ்டூடண்ட் பத்திரிகையை விற்றுவிட நினைக்கிறார் பிரான்ஸன்.

அடுத்தது வேறு ஒரு பிஸினஸ் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுக்கிறார். இப்படி ஒரு முடிவெடுக்கும்போது அவருக்கு வயது இருபதுக்கும் குறைவே.

பின்னர், இசைத்தட்டுகள் விற்பனை செய்கிறார். ரெக்கார்டிங் ஸ்டூடியோ கட்டுகிறார். அவரே புதிய இசைக் கலைஞர்களைக் கண்டெடுத்து இசைத்தட்டுகளை வெளியிடுகிறார். இசைத்தட்டு விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறார். அடுத்ததாக விமானம் வாங்கி பல திசைகளுக்கும் ஓட்டுகிறார். ஆனால், அதில் நஷ்டம் என்று வரும்போது அதனை மூடிவிடாமல் வேறு ஒரு வழி செய்கிறார்.

ஏற்கெனவே லாபத்தில் போய்க் கொண்டிருக்கும் தமது இசைத்தட்டு விற்பனை நிறுவனத்தை அதிக லாபத்துக்கு விற்றுவிட்டு, நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கும் கம்பெனியைத் தூக்கி நிறுத்தப் பார்க்கிறார். முழுக் கவனத்தோடு செயல்பட்டு அதில் ஜெயித்தும் காட்டுகிறார்.

ஒவ்வொரு துறையையும் எடுத்துக் கொண்டு அதில் மிகவும் கவனமாக உழைத்து இன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2008-ம் ஆண்டின் உலகப் பணக்காரர்கள் வரிசையில் 236-வது இடத்தில் இருக்கிறார்.

236-வது இடத்தில் இருக்கும் ஒரு வியாபாரியின் வாழ்க்கையே இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதென்றால் முதல் சில இடங்களுக்குள் இருப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Tuesday, September 23, 2008

பகத் சிங் என்ன சாதித்தார்?


எந்த ஒரு புத்தகத்தையும் எழுத ஆரம்பிக்கும்போது எந்தவிதமான முன் தீர்வுகளும் இல்லாமல் எழுதப் பழகிக் கொள். - எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லும் விஷயம்.

இதை எத்தனை தூரம் கடைப்பிடிக்க முடியும் என்று தெரியவில்லை. ஒருவரைப் பற்றி எழுத ஆரம்பிக்கும்போதே கிடைக்கும் தகவல்களால் ஒருவித ஆச்சரியமும், இத்தனை விஷயங்கள் உண்டா என்ற மலைப்பும், இப்படியும் ஒரு வாழ்க்கையா என்ற வியப்பும் சூழ்ந்து கொள்வது இயல்புதான்.

என்.எஸ். கிருஷ்ணனை எழுதத் தொடங்கியபோது இருந்த பிரமிப்பும், எழுதி முடித்த பிறகு இருந்த ஆச்சரியமும் ஒரே விதமாக இருந்தன. அதிகம் மாற்றமில்லை. இன்று வரையிலும் கூட அவரைப் பற்றிய வெவ்வேறு தகவல்கள் கிடைக்கும்போது என்னுடைய பிரமிப்பும், வியப்பும் அதே நிலையில்தான் இருக்கின்றன.

ஆனால், எனது அடுத்த புத்தகமான ‘பகத்சிங்: துப்பாக்கி விடு தூது’, பகத் சிங்கின் வாழ்க்கையை எழுதும்போது இது மாறுபட்டது.

ஒருவரைப் பற்றி எழுத ஆரம்பிக்கும்போது இருக்கும் பிம்பத்துக்கும் புத்தகமாக எழுதி முடித்த பிறகு கிடைக்கும் பிம்பத்துக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருப்பது தெளிவாகப் புரிந்தன.

புத்தகத்துக்காக நிறைய தகவல்கள் திரட்டும்போதும், பகத் சிங் பற்றி நண்பர்கள் மத்தியில் பேசும்போதும் எதிர்பார்ப்புகள் பலமாக இருந்தன. ஆனால், புத்தகம் எழுதி முடித்த பிறகு பகத் சிங் மட்டுமல்லாது அந்த இயக்கத்தில் இருந்த பலரும் மனத்தில் நிறைந்திருந்தனர். குறிப்பாக அந்த இயக்கத்தின் தலைமையில் இருந்த சந்திரசேகர ஆசாத், காகோரி ரயில் கொள்ளைச் சம்பவத்தின் நாயகனாக இருந்த அஷ்ஃபகுல்லா கான், சாகும் வரை உண்ணாவிரதம் என்ற போராட்டத்தில் உயிர் நீத்த ஜதீந்திரநாத் தாஸ்.

பகத் சிங் வாழ்ந்த காலம் 23 வருடங்கள் மட்டுமே. இந்த 23 வருடத்தில் என்ன சாதித்திருக்க முடியும்? அதிலும் பள்ளிக்குச் செல்லும் பருவத்தில் சுதந்தரத்தைப் பற்றி என்ன தெரிந்து கொண்டிருக்க முடியும்?

அப்போதிருந்த சீக்கிய அமைப்புகள் வெள்ளையர்களுக்கு எதிராக எப்படிப் போராட்டம் நடத்தின? தன்னுடைய அப்பாவும் சித்தப்பாக்களும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி சிறைக்குப் போனார்கள். நான் ஏன் போகக்கூடாது, என்ற பகத் சிங்கின் கேள்வி. லாலா லஜபதி ராயுடன் இருந்து காங்கிரஸ் மூலமாகப் போராட்டம் நடத்தியது, அஹிம்ஸை வழியில் எத்தனை காலம்தான் போராடிக் கொண்டிருக்க முடியும்? ஒரே ஒரு அதிர்ச்சித் தாக்குதலையாவது நிகழ்த்திக் காட்ட வேண்டும் இந்த அரசாங்கத்துக்கு என்று இயக்கத்தில் சேர்ந்தது, கொள்கைகளைப் பரப்பியது, தலைமறைவாகத் திரிந்த காலங்கள் - எனப் பல சம்பவங்கள்.

பகத் சிங் இன்றும் இந்திய சரித்திரத்தின் பக்கங்களில் நிலைத்திருப்பதற்கான காரணம் புரிந்தது. நாடாளுமன்றத்தில் இரண்டு குண்டுகளை வீசி கேளாத செவிகள் கேட்கட்டும் என்று இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு கூக்குரல் விடுத்ததுதான் அந்தச் செயல் எனத் தோன்றியது.

புத்தகத்தில் பகத் சிங்கின் வாழ்க்கையை மட்டும் சொல்லிவிட்டுப் போவது என்பதும் இயலாத காரியம். ஆகவே, அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை விஷயங்களையும் இந்தப் புத்தகத்தில் சேர்த்தால்தான் சிறப்பாக இருக்குமென்று நினைத்தேன். அதன்படியே புத்தகம் வெளியானது. தற்போது விற்பனையில் பகத் சிங்: துப்பாக்கி விடு தூது.

Thursday, September 18, 2008

நான் ஏன் கொன்றேன்? - ஒரு போலீஸ்காரரின் வாக்குமூலம்

எப்போதாவதுதான் சில நல்ல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு அமையும். அதுவும் சில பல நாட்களோ மாதங்களோ நம்முடைய நினைவில் அந்தப் புத்தகம் நின்றுவிட்டால் இன்னும் விசேஷம். சமீபமாகப் படித்த ஒரு புத்தகம் என் நினைவில் நின்றுவிட்டது.



1970 பிப்ரவரி 18.

நான்கு போலீஸ்காரர்கள் ஒரு கைதியைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். உயர் அதிகாரி கேட்கிறார்: ”உங்களில் யார் இவனைச் சுட்டுக் கொல்லப் போகிறீர்கள்?”

மூன்று போலீஸ்காரர்கள் தயங்கித் தயங்கி கையைத் தூக்குகிறார்கள்.

கையைத் தூக்காமல் இருந்த போலீஸ்காரரிடம் அந்த அதிகாரி சொல்கிறார்: “இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும். அல்லது நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில் மேலும் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்.”

ஒரே ஒரு தோட்டா. முடிந்தது அந்தப் போராளியின் கதை. ஆனால், சுட்டுக் கொன்ற வலியை இருபத்தெட்டு ஆண்டுகளாகத் தனக்குள் வைத்துக் குமுறிக் கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிளின் சுய ஒப்புதல் வாக்குமூலம்தான் “நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி”.



அந்தப் போலீஸ்காரர் ராமச்சந்திரன் நாயர். ஆயுதப் படைப் பிரிவில் கேரளாவில் பணியிலிருந்தவர். கேரளாவில் போலீஸுக்குச் சங்கம் அமைக்க வேண்டும் என்று போராடியவர்களுள் இவரும் ஒருவர்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் உண்டு. அத்தனையும் வெளியே சொல்ல முடியுமா தெரியவில்லை. ராமச்சந்திரன் நாயர் சொல்லியிருக்கிறார்.

விளைவு, வர்க்கீஸைச் சுட்டுக் கொன்ற வழக்கில் ராமச்சந்திரன் முதல் குற்றவாளி.

0

ஒரு போலீஸ்காரரின் சுயசரிதையில் அப்படி என்ன இருந்துவிட முடியும்? உயர் அதிகாரிகளைப் பற்றிப் புகழ்ந்து எழுதியிருப்பார். தமக்கு வேண்டிய பல அரசு அதிகாரிகளைப் பற்றி ஆஹா ஓஹோவென்று சொல்லியிருப்பார்கள். வேண்டப்பட்ட அரசியல் தலைவர்களுக்குத் தாங்கள் செய்த 'சேவை'யை நினைவுபடுத்துவதாக எழுதுவார்கள்.

இவை எதுவுமே இந்தப் புத்தகத்தில் இல்லை. இது ராமச்சந்திரன் என்பவரின் வாழ்க்கை. இரட்டை வாழ்க்கை. ஒன்று போலீஸ் வாழ்க்கை. போலீஸ் என்ற அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட வாழ்க்கை. போலீஸாக இருந்துகொண்டு தாம் பொதுமக்களுக்குச் சேவை செய்த வாழ்க்கை. இரண்டும் கலந்த ஒரு மனிதனுக்குள் பல்லாண்டு காலமாக முன் நின்ற ஒரே கேள்வி, நான் எப்படி ஒருவனைக் கொன்றேன்? என்பதுதான்.

'இது உயர் அதிகாரியின் கட்டளை. ஆகவே, நான் சுட்டுக் கொன்றேன்' என்று இவர் சொல்லவில்லை.

தன்னுடைய உயர் அதிகாரி தவறு செய்கிறார் என்று தெரிகிறது. ஆனால், அதைச் சொன்னாலும் யாரும் கேட்கவில்லை. இந்த உண்மைகள் காவல்துறையோடு அமுங்கிவிடக் கூடாது என்று தனக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், விஷயம் வெளியே தெரியவில்லை.

எதற்கும் நேரம் வரவேண்டும் என்று சொல்வார்களே? அந்த நேரமும் வந்தது. மலையாள மனோரமாவில் ராமச்சந்திரனின் கடிதம் பிரசுரமானது. அந்தக் கடிதம் வர்க்கீஸைச் சுட்டுக் கொன்றதைப் பற்றி தோழர் வாசுவுக்கு வாக்குமூலம் கொடுத்த கடிதம்.

மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று அப்போதுதான் நம்பத் தொடங்கினார் ராமச்சந்திரன். சி.பி.ஐ., ராமச்சந்திரன் மேல் வழக்குப் போட்டது.

சிறை செல்லப் போகிறோம் என்றெல்லாம் ராமச்சந்திரன் கவலைப்படவில்லை. தன்னைச் சுடச் சொன்ன அதிகாரிகளுடன் தான் ஒரு நாளாவது சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று காத்திருந்தார். அவருடைய ஆசை நிறைவேறவில்லை. வழக்கின் முதல் குற்றவாளி இயற்கை மரணமடைந்தார்.

ஆம், ராமச்சந்திரன் இப்போது இல்லை.

0

புத்தகத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் மட்டும்:

சந்திரசேகரன், ஒரு போலீஸ்காரர். மேலதிகாரியின் வீட்டில் அவருக்கு வேலை. சந்திரசேகரனின் மனைவி ஒரு கிராம நிர்வாக அதிகாரி. தன் கணவரைப் பார்க்க அந்த ஊருக்கு வருகிறார். வேலை பார்க்கும் இடத்தைக் கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கே வந்துவிடுகிறார். வந்த இடத்தில் மேலதிகாரி வரவேற்று உட்கார வைக்கிறார். வந்தவருக்கு தேநீர் கொண்டு வரச் சொல்கிறார்.

உள்ளிருந்து தேநீர் வருகிறது. அந்தப் பெண் நிமிர்ந்து பார்க்கிறார். கரிப்பிடித்த காக்கி டிரவுசர். கை வைத்த பனியன். கையில் டிரே. சுடச் சுடத் தேநீர். தேநீருடன் நின்றவர் சந்திரசேகரன்.

”நீங்க இந்த வேலையை வீட்டிலேயே செய்யலாமே? குழந்தைகளைப் பாத்துகிட்டது போலவும் இருக்கும்” என்று சொல்லிவிட்டு சந்திரசேகரனின் மனைவி வெளியேறுகிறார்.

0

நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி - ராமச்சந்திரன் நாயர் / தமிழில்: குளச்சல் மு.யூசுப். வெளியீடு: மக்கள் கண்காணிப்பகம், மதுரை. விலை: ரூ. 120/-

Thursday, November 24, 2005

ரஜினியின் கால்பந்தாட்டம்

சினிமாவில் வரும் பாடல்களில் கேட்க வேண்டிய பாடல், பார்க்க வேண்டிய பாடல் என்று
இரண்டு இருப்பதாக நான் நினைக்கிறேன். இரண்டும் அவரவர் மனநிலையைப் பொருத்ததே.
மிகவும் அபூர்வமாகவே இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து அமையும். அப்படி அமைந்த பாடல்கள்
மிகவும் குறைவு என்று சொல்லலாம்.

"குறைவு என்று சொல்ல முடியாது நிறையவே இருக்கும்" என்று யாராவது சொன்னால் வேறு ஒரு வகையில் அதனைப் பட்டியலிட்டு விடலாம். அந்தப் பாடல்களை எடுத்த இயக்குநர்களைக் கொண்டு வரிசைப்படுத்தினால், ஒரு சில இயக்குநர்களின் படங்களில் வரும் பாடல்கள் மட்டுமே அப்படி அமைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

சமீபமாக அப்படிப் பார்த்த ஒரு பாடல். ஜானி படத்தில் "ஸெனோரீட்டா ஐ லவ் யூ" என்ற பாடல். மகேந்திரன் இந்தப் பாடலுக்கான காட்சி அமைப்பை ரஜினிகாந்த், தீபா - இருவரின் மோனோ ஆக்டிங்கில் படமாக்கியிருப்பார். இந்த உத்தியைத் தன்னுடைய பல படங்களில் செய்து பார்த்திருக்கிறார். குறிப்பாக உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி போன்ற படங்களில்.

ரஜினிகாந்தின் நடிப்பைப் பற்றி பல்வேறு விதமான கருத்துகள் இருக்கின்றன. ஆனால், இந்தப் பாடலில் அனைவராலும் ரஜினியை ரசிக்க முடியும். இந்த மோனோ ஆக்டிங் விஷயத்தை மகேந்திரனுடைய பல படங்களில் பார்க்க முடிந்தாலும் இந்தப் பாடல் மிகவும் ரசிக்கும்படி அமைந்திருக்கும். காரணம், அது ஓர் இளம் ஜோடியின் எதிர்காலக் கனவுகள் குறித்து இருப்பதால் இருக்கலாம்.

நன்றி: http://rajinifans.com/

ஒரு ஃபுட் பால் வீரனைப் போல் கால்பந்தை உருட்டி விளையாடி ஓங்கி உதைக்கப் போகும்
தருணத்தில் உதைக்காமல் (தீபாவின் முகத்தில் வந்த பயத்தைப் பார்த்துவிட்டு) கால்பந்தைக் கையில் எடுத்து வேறு பக்கமாக வீசுவார். அழும் குழந்தையைச் சிரிக்க வைக்க குழந்தையைத் தூக்கி விளையாட்டுக் காட்டும் போது தன்னுடைய கோட்டின் மேல் குழந்தை உச்சா பண்ணிவிட தீபாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு கைகளால் கோட்டைத் தட்டிக் கொள்வார். பூக்களை ரசித்துக் கொண்டு போகும்போதே சட்டென்று நின்று ஒரு பூவைப் பறித்து தீபாவின் தலையில் வைப்பார். இப்படி நிறைய காட்சிகள்.

ஆனால், ஒவ்வொன்றிலும் விசேஷம் அந்த மோனோஆக்டிங். பூப்பறிக்கும்போது பூக்கள் இருக்காது. உதைப்பதற்குக் கால்பந்து கிடையாது. குழந்தையும் இல்லை. இவையெல்லாம் இருப்பது போன்ற நடிப்பு அந்தப் பாடலைப் பார்க்கத் தூண்டும்.

இளையராஜாவின் இசையும், அசோக்குமாரின் ஒளிப்பதிவும், பாடலாக்கப்பட்ட விதமும் இன்னொரு முறை பார்க்கத் தூண்டும் என்பது நிச்சயம்.

இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்.

Wednesday, November 23, 2005

மறு வாசிப்பு

எப்போதோ படித்த கதைகளை மறுபடி படிக்கும்போது ஏற்படும் அனுபவம் மிகவும் அலாதியா
னது. சில கதைகளை மீண்டும் வாசிக்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர்கள் அதிகம் இருக்
கிறார்கள். எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத கதைகள், அவை. அந்த வகையில் என்னுடைய புத்தக அடுக்கிலும் சில புத்தகங்கள் உண்டு.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துப் படிக்கவென்று நான் வைத்திருக்கும் புத்தகங்கள்
பெரும்பாலும் சிறுகதைகள். இந்தப் புத்தகங்களையெல்லாம் குறைந்தது ஒரு முறையாவது
படித்திருக்கிறேன். ஆனால், மீண்டும் மீண்டும் படிப்பதில் ஒரு சந்தோஷமிருக்கிறது. இந்தச் சந்தோஷம் என்பது எழுதிய நேர்த்தியைப் பார்த்து வியந்து போவதில் இருக்கும். அந்தக் கதையின் வார்த்தைப் பிரயோகங்களினால் இருக்கலாம். அந்தக் கதாபாத்திரங்களைக் கண்டு பிரமித்திருக்கலாம். சில கதைகளை வாசிக்கும் அனுபவத்துக்காக மட்டுமே படிக்கலாம். (குறிப்பாக வண்ணதாசன் கதைகள்) அப்படி வாசிப்பதை ஒரு பயிற்சியாகக் கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால், ஒரு முறை படித்ததற்கும் அடுத்த முறை அதே கதையை வாசிப்பதற்கும் இடையில் குறைந்த இடைவெளியாவது இருக்கும். அது ஒரு வாரமாகவோ அல்லது ஒரு மாதமாகவோ இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம். இந்த இடைவெளிதான் அந்தக் கதைகளை மேலும் சுவாரசியமாக மாற்றுகின்றன என்று நினைக்கிறேன். அப்படிப் படிக்கக்கூடியவை பெரும்பாலும் சிறுகதைகளே என்பதற்கு நேரம் மட்டுமே காரணமல்ல. மிகவும் பிடித்துப் போன படைப்புகளே நம்மை அப்படி மீண்டும் மீண்டும் படிக்க வைக்கின்றன.

அப்படி அடிக்கடி வாசிக்கும் சிறுகதைகள் வண்ணநிலவனுடைய சில கதைகள். (எஸ்தர், காரை வீடு, விமோசனம், அவன் அவள் அவன், நட்சத்திரங்களுக்குக் கீழே, மெஹ்ருன்னிசா, யௌவன மயக்கம்) சா. கந்தசாமியின் சில கதைகள் (முத்துராஜா பிராது, நிறவேற்றுமை, தக்கையின் மீது நான்கு கண்கள்), வண்ணதாசனின் சில கதைகள் (ஞாபகம், தனுமை, போர்த்திக் கொள்ளுதல், அழுக்குப்படுகிற இடம், முழுக்கைச் சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும், நடேச கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும், உயரப்பறத்தல், நடுகை, இன்னும் நிறைய கதைகள்). பாவண்ணனின் சில கதைகள் (ஆறு, ஜெயம்மா.) பா.ராகவனின் சில கதைகள் (மாயக்கயிறு, கத்தி முனையில் துளிவிஷம், நாயகி, குதிரைகளின் கதை). ஆர்.வெங்கடேஷின் சில கதைகள் (பால் அட்டை, ஒற்றைப் பனை, மாஸ்டர், 40 கிலோமீட்டர், காலிப்ளவர்).

அசோகமித்திரனின் பல கதைகள், தி.ஜானகிராமனின் பல கதைகள்.

எப்போதாவது நாவல்களை மறுபடியும் படிக்கத் தோன்றும். கிடைக்கக்கூடிய நேரத்தைப் பொ
ருத்து, சில சமயங்களில் பாதி மட்டுமே படித்துவிட்டு வைத்துவிடும் பழக்கமும் உண்டு. குறிப்பிட்ட அத்தியாயத்துக்குச் சென்று அதை மட்டும் படித்துப் பார்ப்பதும் உண்டு (ஒற்றன் நாவலில் வரும் மகா ஒற்றன் என்ற அத்தியாயத்தை மட்டும் அடிக்கடி படிக்கும் பாராவின் சூட்சுமம் இது). மறுவாசிப்பு என்பதெல்லாம் சிறுகதைகளும் நாவல்களும் மட்டும்தான். இது தவிர வேறு புத்தகங்கள் அடிக்கடி படிப்பதென்றால் ஏதேனும் நேர்காணல்களாக இருக்கும்.

இப்படி சிறுகதைகளையே படித்துக் கொண்டிருந்தால் மற்ற விஷயங்களை எல்லாம் எப்போது
படிப்பது, என்பது தற்சமயம் எழுந்த கேள்வி. வேறு விஷயங்களைப் படிக்க ஆரம்பித்தால் பதில் கிடைக்கலாம். நிறையப் படிக்க வேண்டும் புனைவுகளுக்கு அப்பாலும்.

மறுவாசிப்பு என்பதைப் பற்றி அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.

"... என் எழுத்துகளை இரண்டாம் முறை படிப்பது அவசியமாகிவிடுகிறது. முதல் வாசிப்பில் பல தகவல்கள் கவனத்தில் இருந்து பிறழ்ந்து விடுகின்றன. பலவற்றுக்குச் சம்பந்தமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கதையைத் தெரிந்து கொண்டு இரண்டாம் முறை வாசிக்கும்போது, நிறைய விவரங்கள் தெளிவாகின்றன. ஆனால் நான் யாரையும் `இரண்டு முறை வாசியுங்கள்' என்று வற்புறுத்த முடியாது. முடிந்தால் வாசியுங்கள் என்றுதான் கூற முடியும்."

அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுதி - 1
கிழக்கு பதிப்பகம்

Tuesday, November 15, 2005

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்

தமிழில் சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட நாவல்கள் என்று குறிப்பிடும்படியான ஒரு சில மட்டுமே இருந்தாலும் கரைந்த நிழல்களை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் இதை விட இன்னமும் சிறப்பாக சினிமா உலகத்தைப் பற்றிச் சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது.

கரைந்த நிழல்கள் - பிம்பங்களாகத் திரையில் வரும் நிழல்களுக்குப் பின்னால் கரைந்து போகும் மனிதர்களைப் பற்றிய கதை. இந்த நாவல் வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.

சினிமா சம்பந்தப்பட்ட எவ்வளவோ விஷயங்கள் - அவுட்டோர் - இண்டோர் ஷூட்டிங் பிரச்னைகள், அதற்கான முன்னேற்பாடுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள், தீர்வு காணும் முயற்சிகள், நடிகையின் முட், படத் தயாரிப்பாளரின் வீழ்ச்சி, படத்தின் வெற்றி-தோல்வி, படவுலகக் கவர்ச்சியும் பளபளப்பும், ஸ்டுடியோ நிர்வாகம், புது யூனிட் கட்டுதல், விநியோகமும் விளம்பரமும், இன்னபிற சினிமா விஷயங்களும் நம் கண் முன்னே காட்சிகளாக விரிகிறது.

முதல் அத்தியாயத்திலேயே நிஜமான சினிமா உலகத்தைக் காட்டும்போது திரையில் இதுவரை பார்த்து வந்த பிம்பங்களின் கவர்ச்சி போய்விடுகிறது. பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.

அவுட்டோர் ஷ¥ட்டிங்குக்குச் செல்லும் நடராஜனிடம் ஆரம்பிக்கும் இந்த நாவல், படத் தயாரிப்பாளர்கள், புரொடக்ஷன் புரோகிராம் மேனேஜர்கள், டைரக்டர்கள், கேமர¡மேன், எடிட்டர், டான்ஸ் மாஸ்டர், அஸிஸ்டெண்ட்கள், நடனப் பெண்கள், மேக்கப்§மன், டாக்ஸி டிரைவர்கள், பட விநியோகஸ்தர்கள், ரிசப்ஷனிஸ்டுகள், கூர்க்காக்கள், வசனகர்த்தா - இப்படி அனைத்துத் தரப்பினரின் வேலைகளையும் சிக்கல்களையும் மிக அனாயாசமாக இந்த 160 பக்கங்களுக்குள் காட்சிப்படுத்தி விடுகிறார்.

இந்த நாவலை மீண்டும் ஒரு முறை படித்து முடித்தபோது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

"கரைந்த நிழல்கள் போன்ற நல்ல நாவல்கள் தமிழில் நல்ல சினிமாவை அளிக்க இருக்கின்றன. அதனைக் கையாள ஒரு டைரக்டர் முன் வரவேண்டும். வராத வரையில் நாவலுக்கோ, நாவலாசிரியருக்கோ குறைவு ஒன்ரும் கிடையாது என்பது நாவலுக்குப் பெருமை தரும் விஷயமாகவே உள்ளது"

கரைந்த நிழல்கள் விமரிசனத்தில் சா.கந்தசாமி

வெளியீடு: கிழக்கு பதிப்பகம் | ISBN: 81-8368-082-8 | விலை: ரூ.60

Friday, December 03, 2004

சதுரங்கச் சிப்பாய்கள்

இதுதான் என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.

முதல் சிறுகதை வெளிவந்தபோது இருந்த அதே மனநிலையில் இருக்கிறேன்.

மிகுந்த சந்தோஷம் என்பதை விடவும் கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போதைய மனநிலையாக இருக்கிறது.

என்னுடைய பெரும்பாலான கதைகளுக்கு நான் தலைப்பு வைத்ததில்லை. அல்லது நான் வைத்த பெயரைவிடவும் பத்திரிகையில் வெளியாகும்போது வைக்கப்பட்ட தலைப்பு நன்றாகவே இருந்திருக்கிறது. ஒரே ஒரு கதைக்கு மட்டும் இது விதிவிலக்கு. தலைப்பு கிடைத்தபின்பு எத்தனையோ மாதங்கள் கழித்து அதற்கான கதை கிடைத்தது. இப்போது அதே தலைப்பு என்னுடைய தொகுப்புக்கும் பொருத்தமாக இருப்பது கூடுதல் சந்தோஷம்.



இனி, இந்தத் தொகுப்புக்கு அசோகமித்திரன் அளித்த முன்னுரை.

ஒவ்வொரு முறையும் தொலைபேசியில் என்னிடம் கேட்டுக் கொண்டபின்தான் அந்த இளைஞர் என்னை வீட்டில் பார்க்க வருவார். இளைஞர் என்று கூறுவதைவிடப் பையன் என்று சொல்வது பொருத்தம். பத்துப் பன்னிரண்டு மைல்கள் சைக்கிளை மிதித்து என்னைப் பார்க்க வரும் பையனுக்கு வாழ்க்கை எவ்வளவு சலுகைகள் தந்திருக்கக்கூடும்? ஆனால் அந்த நிலையிலும் அவனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் அன்றும் இன்றும் அச்சு உலகில் செல்வாக்கு வகிப்பவன் என்று கூற முடியாது. ஆனால் அப்பையன் என்னிடம் வழி கேட்டுக் கொண்டு வருகிறான்!

முத்துராமன் இன்று பலருக்கு நன்கு அடையாளம் தெரியக்கூடியப் புனைகதை எழுத்தாளனாக மாற முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு. ஒவ்வொன்றாக அவருடைய சிறுகதைகள் பத்திரிகைகளிலும் மற்றும் இணையதளங்களிலும் வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. அவருடைய தொனி அடக்கமானது. புனைகதையில் அடக்கம் இன்னும் இந்தியரிடையே பழக்கப்படவில்லை. இதனால் இந்த நூறு, நூற்றிருபது ஆண்டுகளில் இந்தியாவில் பல எழுத்தாளர்கள் நல்ல புனைகதை எழுதியும் கவனம் கிடைக்காமல் மறைந்து போயிருக்கிறார்கள். முத்துராமன் இந்தியப் புனைகதையில் அடக்கமான தொனி நிலைபெற ஒரு காரணமாயிருப்பார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் பதின்மூன்று கதைகள் உள்ளன. அநேகமாக எல்லாமே வாழ்க்கைப் பாதையில் முன்னேற அடியெடுத்து வைக்க முயலும் மனிதர்களைப் பற்றியவை. எல்லாப் பாத்திரங்களுக்கும் சுய பரிசோதனையும் சுய விமரிசனமும் செய்து கொள்ளத் தெரிகிறது. குற்ற உணர்வும் பரிவும் கொள்ள இயலுகிறது. சூழ்நிலை மாற்றங்களைக் கண்டு கொள்ளத் தெரிகிறது. முன்னோருக்குப் பயனளிப்பதாகவும் துணையாயுமிருந்த பொருளைப் போற்றிப் பாதுகாக்கத் தெரிகிறது. ஒரு பாத்திரத்துக்கு எழுத்தாளனாக இருக்க விரும்புவது உத்தியோகம் கிடைக்கத் தகுதியாகிறது.

முத்துராமனின் கவலைகள் நிஜமானவை. அவை விசேஷச் சுயத் தோற்றம் கொள்ள வேண்டுமென கோஷமிடச் செய்வதில்லை. அப்படியே உருகிவழியவும் தூண்டுவதில்லை.

மனித வாழ்க்கையில் மிகச் சில தருணங்கள் தவிர மற்ற நேரமெல்லாம் எல்லாருமே சிறு சிறு கவலைகளிலும் சிறு சிறு அக்கறைகளிலும்தான் ஆழ்ந்திருக்கிறோம். முத்துராமனின் படைப்புகள் அதைத்தான் சொற்களில் வடித்துத் தருகின்றன.

இத் தொகுப்பிலுள்ள கதைகள் ஓர் எழுத்தாளனின் விரிந்து வரும் பார்வைக்கு அடையாளமாக உள்ளன. இந்த இளம் எழுத்தாளனிடம் தமிழ் வாசகர்கள் எதிர்பார்க்க நிறையவே இருக்கிறது.

இத்தொகுப்பு நல்லதொரு தொடக்கம். முன் கூறியபடியே முத்துராமனின் தொனி விசேஷமானது.

அசோகமித்திரன்
சென்னை,
16.10.2004

கிடைக்குமிடம்:
கிழக்கு பதிப்பகம்
16/37, கற்பகம்பாள் நகர்
மயிலாப்பூர்
சென்னை - 600 004

தொலைபேசி: 5200 9601

Saturday, June 19, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 10 (ஆளுமை)

ஆளுமை என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் personality என்றுதான் சொல்கிறார்கள். அது சரியான வார்த்தைதான். ஆனால், personality என்பதை பெரும்பாலானவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் வேறொன்றாக இருக்கும்.

ஆளுமை என்பது ஒருவரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடியது.

ஒருவன் தனது தனித்தன்மை வாய்ந்த நடத்தையால் தன்னை சூழ்நிலைக்கு ஏற்ப அமைத்துக் கொள்தே ஆளுமை எனப்படுகிறது.

இந்த ஆளுமையைப் பற்றி உளவியல் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

ஒருவனுடைய நுண்ணறிவு, சுபாவம், திறமை மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றின் நிலையே ஆளுமையாகும்.
- Warren

ஒரு தனி மனிதனின் தனித்தன்மையான நடத்தையினையும் சிந்தனையையும் முடிவு செய்கின்ற அவனுடைய உள, உடல் அமைப்பே ஆளுமை எனப்படுகிறது.
- Alfred

ஒரு தனிமனிதனுக்குரிய உள செயல்பாடுகளும் உளநிலைகளும் கொண்ட மொத்த அமைப்பே ஆளுமை.
- Lindon

சரி, இவர்களுக்கெல்லாம் முன் வந்த உளவியலின் தந்தை என்று போற்றப்படக்கூடிய ·பிராய்டு சொன்னதைப் பார்ப்போம்.

·பிராய்டு மனதை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். இது ஒரு வசதிக்காக என்றும் சொல்லிவிடுகிறார். அவர் பிரித்து வைத்தவை, Id, Ego மற்றும் Super Ego. இந்த மூன்று வகையான உள அமைப்புகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் இயக்க ஆற்றலே ஆளுமை.

Id

நிச்சயம் இதை ஐடி என்று படிக்க வேண்டாம். இது மெயில் ஐடி இல்லை. இதை இட் என்றே சொல்கிறார். ஆங்கிலத்திலேயே இதற்கு இணையான வார்த்தை ஒன்று இருக்கிறது. Instinct. இட் என்பது உணர்வுந்தல். ஒரு மனிதனின் ஆதார சக்தி, தேவை, உந்துதல் எல்லாமே இதுதான். தன்னை அறியாமலே உணர்ச்சி ஆவேசம் கொள்ளும் நிலைமையைத்தான் இட் குறிக்கிறது.

இது தனது சுய தேவையினை பூர்த்தி செய்து கொள்ளுதல். பகுத்தறிவற்ற தன்மை, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுதல். இந்த உணர்வுந்தல் என்பது இன்பக்கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. இன்பத்தை நாடும் அனைத்து வகை உந்துதல்களுக்கும் கட்டுப்பாடின்றி தாராளமாக வெளிப்படுத்தப்படுகின்றது.

இட்-டின் முதன்மையான நோக்கம் உடனடி இன்பம்தான். பிறப்பின்போது குழந்தையிடம் அடிப்படை ஆளுமையாக இருப்பது இட் மட்டும்தான். இட்-டுக்கு நீதி தெறியெல்லாம் தெரியாது. எப்போதும் இன்பம்தான் இதற்கு ஒரே குறி. சொல்லப்போனால் மனத்தின் குரங்குத்தனமெல்லாம் இதிலிருந்துதான் வருகிறது.

இந்த உணர்வுந்தலில் இருந்தே Ego-வும் Super Ego-வும் பிற்காலத்தில் வளர்ச்சி அடைவதாகச் சொல்கிறார்.

Ego

மனசாட்சி போன்றது இந்த Ego. வெளியுலகத்துடன் மிகவும் கவனமாக செயல்படக்கூடியது. ஒரு காரியத்தை செய்யும்போது அந்த வேலையைச் செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று தர்க்க ரீதியாக சிந்திக்கக்கூடியது இந்த Ego.

Id அளிக்கும் சக்தியினை Ego சரியான வகையில் செயல்படுத்துவதால் மனித நடத்தையினை நெறிப்படுத்தும் செயலராக அமைந்தது Ego.

நாகரிக உணர்வின் அவசியத்தால் உண்டாக்கிய பண்பாட்டுணர்ச்சிதான் இந்த Ego. உடல் வேட்கைகளுக்கும் சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கும் இடையில் மனித நடத்தையை சமனப்படுத்தி வைப்பதுதான் இதன் வேலை. புத்திசாலித்தனம், ஒழுங்கு என்று சொல்லப்படும் வார்த்தைகள் பண்பாட்டுணர்ச்சியின் தன்மையே. அதிக இன்பம் குறைந்த துன்பம் என்ற நிலைப்பாட்டில் செயல்படுவதே இதன் செயல்முறை.

உண்மை நியதியின் அடிப்படையில் அறிவுப்பூர்வமாக செயலாற்றி, பல் உணர்வுத் தூண்டல்கள் மற்றும் அழிவுச் செயல்களைக் கட்டுப்படுத்தும் ஆளுமையின் ஒரு பகுதியே இந்த Ego. காரண-காரியத்தின் அடிப்படையில் செயல்படுவதே Ego.

Super Ego

இதை மனசாட்சி என்று சொல்லலாம். முன்னோர்கள் பெற்றோர்களிடமிருந்து கற்றுக் கொண்ட சரி; தப்பு, தர்ம; நியாய சட்டங்கள் எல்லாம் இதில் அடங்கும். இது நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு போலிஸ்காரன். இதை அதி தன்முனைப்பு என்று சொல்லலாம்.

நெறிமுறையுடன் அமைந்த உயர்ந்த நிலை செயல்பாடே இந்த Super ego. ஒருவரின் நடத்தை சரியானதா தவறானதா என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்ப அவருடைய நடத்தையை சீர்படுத்தும் பணி Super ego-வுடையது.

Id என்பது இன்பத்தை நாடுவதிலும், Ego என்பது உண்மைநிலையினை ஆராய்வதிலும், Super ego என்பது சரியான செயல்பாட்டினை நாடுவதிலும் ஈடுபட்டு செயல்படுகின்றன. இந்த Super ego-வ்ன் முக்கிய பணிகள் மூன்று.

1. சமூகத்துக்குப் புறம்பான செயல்களில் Id ஈடுபடும்போது அதனைத் தடுப்பது
2. உண்மை நிலைக்கு பதில் நியாயமான குறிக்கோள்கள் செயல்பட Ego-வினைத் தூண்டுவது
3. எந்த ஒரு காரியத்தையும் சரியாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் வகையில் செயல்படுவது.

இப்படி மூன்று பகுதிகளாகப் பிரித்தாலும், ·பிராய்டு சொல்லும் ஆளுமை பருவ வளர்ச்சி என்பது முக்கியமானது.

ஒரு குழந்தை முதல் ஐந்து வருடத்துக்குள் பலவிதமான நிலைகளைக் கடக்கிறது. இந்த நிலைகள்தான் ஒருவரின் பின்னாளைய ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. இந்தக் கட்டங்களில் ஏதாவது தேக்கம் ஏற்பட்டால் அது ஆளுமைக் கோளாறைத் தோற்றுவிக்கும் என்று சொல்கிறார் ·பிராய்டு.

இந்த நிலைகளை அவர் பின்வருமாறு பிரித்தார்.

The oral stage
The anal stage
The phalic stage
The genital stage

இந்த நிலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்.

Friday, June 11, 2004

·ப்ரான்க் ஒ' கானரின் கதை

வாங்க, நேரா இங்கதான் வர்றீங்களா! அப்ப ஒரு வேலை செய்யலாம். இப்ப நேரா தமிழோவியத்துக்குப் போய் அங்க இருக்கும் இந்த வார உங்களுக்குள்ளே சில புதிர்கள் கட்டுரையைப் படிச்சுட்டு இங்க வருவோம். அதுதான் சரியானதாக இருக்கும். அப்புறம் இங்க வந்து ·ப்ரான்க் ஓ கானர் கதையைப் படிக்கலாம்.



·பிராங்க் ஓ கானர்
__________________

·ப்ராங்க் ஓ கானர் 1903-ஆம் ஆண்டு, அயர்லாந்தின் கார்க் நகரத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். அயர்லாந்தின் சுதந்திரத்துக்காக அவர் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். புகழ்பெற்ற ஆபி தியேட்டரின் டைரக்டராக சிலகாலம் இருந்தார். நாடகங்களும் விமர்சனங்களும் அவர் எழுதியிருப்பினும், சிறுகதைகளே அவருடைய புகழுக்கு வழிகோலின. "நியூயார்க்கர்' பத்திரிகையில் அவர் அடிக்கடி எழுதுவதுண்டு. 1952-இல் அவர் தம் சிறுகதைகள் அனைத்தையும் திரட்டி ஒரு தொகுப்பாக வெளியிட்டார். அவருடைய எழுத்தில் உயிரோட்டமும் நகைச்சுவையுணர்வும் தூக்கலான அம்சங்கள்.



என் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் - தமிழில்: திலகவதி
_____________________________________


போர் நடந்து கொண்டிருந்த காலம் முழுவதும் அப்பா ராணுவத்தில் இருந்தார். முதலில் நடந்த போரை சொல்லுகிறேன். எனக்கு ஐந்து வயதாகிறவரை நான் அவரை அதிகம் பார்த்ததில்லை. நான் அவரை பார்த்த சில சமயங்களும் எனக்குத் தெளிவாக நினைவில்லை. சில வேளைகளில், நான் கண் விழிக்கும்போது காக்கி உடை அணிந்த ஒரு பெரிய உருவம் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். சில சமயங்களில், அதிகாலையில், முன் கதவு அறைந்து சார்த்தப்படும் சத்தமும். லாடம் அடித்த அப்பாவின் பூட்ஸ் சந்தில் ஒலியெழுப்புவதும் கேட்கும். அப்பா வருவதும் போவதும் இப்படித்தான். கிறிஸ்துமஸ் தாத்தா போல அவர் வருவதும் போவதும் புதிராகவே இருக்கும்.

நான் விடியற்காலையில் அம்மாவுக்கும் அவருக்கும் நடுவில் பெரிய படுக்கையின் மீது ஏறிப் படுத்துக் கொள்ளும்போது, அசௌகர்யத்தால் நான் நசுங்கிப் போனபோதும்கூட, உண்மையில் அவர் வருகை எனக்குப் பிடித்திருந்தது. அவர் புகைக்கும்போது அவரைச் சுற்றி ஒருவிதமான இனிய வாடை வீசும். வியக்கத்தக்க விதத்தில் என் ஆவலைக் கிளறும் படியாக அவர் சவரம் செய்து கொள்வார். மாதிரி டாங்கிகள், குண்டுப் பெட்டிகளால் கைப்பிடி போடப்பட்ட கூர்க்காக் கத்திகள், ஜெர்மன் ஹெல்மெட்டுகள், பேட்ஜ்கள், மடக்குக் கத்திகள், இன்னும் பலவிதமான ராணுவக் கருவிகள் என்று ஏராளமான பொருட்களை அவர் விட்டுவிட்டுச் செல்வார். சமயத்தில் உதவும் என்று, அவற்றை, பீரோவின் மேல் இருந்த நீண்ட பெட்டியில் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக வைப்பார். அப்பா, அந்தப் பொருட்களின் உபயோகம் பற்றி வளவளவென்று பேசுவார், எல்லாப் பொருட்களும் சமயத்தில் உபயோகப்பட வேண்டும். அவர் அந்தப் பக்கம் மறைந்ததும் அம்மா, என்னை ஒரு நாற்காலியை இழுத்துப் போடச் சொல்லி அதில் ஏறி அவருடைய புதையலைக் கலைத்துப் போடுவாள். அவரைப்போல, அவள், அவற்றை அத்தனை உயர்வாக மதித்ததாகத் தெரியவில்லை.

என் வாழ்க்கையின் மிக அமைதியான காலம். யுத்த காலம்தான். என் அறையின் ஜன்னல் தென்கிழக்கு திசையை நோக்கியிருந்தது. என் அம்மா அதற்கு திரைச்சீலை போட்டிருந்தாள். ஆனாலும் அது பெரிய தடையாக இருக்கவில்லை.

கீழ்வானம் வெளுக்கத் தொடங்கும்போது நான் தினமும் விழித்தெழுவேன். முந்திய தினத்தின் பொறுப்புகளெல்லாம் கரைந்து போக நானே இன்னொரு சூரியனைப் போல குதூகலமாகவும், ஆனந்தமாகவும் உணர்வேன். அப்போது இருந்ததுபோல வாழ்க்கை அத்தனை எளிமையாகவும், தெளிவாகவும், எப்பேர்ப்பட்ட விஷயங்களும், செய்யக் கூடியவையாகவும் வேறு எப்போதும் இருந்ததில்லை. நான் அவற்றை திருமதி.இடது என்றும் திருமதி.வலது என்றும் அழைத்தேன். திருமதி வலது, அன்றாட பிரச்சினைகளைக் குறித்து, அவை, தமக்குள் விவாதித்துக் கொள்வது போன்ற நாடகங்கள் நடத்தும், திருமதி.இடது, அப்படியில்லை. ஆகவே, பெரும்பாலான சமயங்களில் தலையசைத்து தன் அங்கீகாரத்தை தெரிவிப்பதுடன் நிறுத்திக் கொண்டுவிடும்.

நானும் அம்மாவும் அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும் என்று விவாதிப்போம். கிறிஸ்துமஸ் தாத்தா என்ன பரிசுகள் தரவேண்டும் என்றும், வீட்டை எப்படி அலங்கரிப்பது என்றும் விவாதிப்போம். எடுத்துக்காட்டாக, குழந்தையைப் பற்றிய அந்த விஷயம். அதைப் பொறுத்த அளவில் அம்மாவுக்கும் எனக்கும் உடன்பாடு ஏற்படவேயில்லை. அந்தப் பகுதியிலேயே, சின்னக் குழந்தை இல்லாத வீடு எங்களுடையதுதான். அதற்கு அதிகம் செலவாகும். ஆகையால், அப்பா வரும்வரை அது சாத்தியமில்லை என்பாள் அம்மா.

இது அவளுடைய அறியாமையையே காட்டியது. தெருக்கோடியில் இருந்த ஜீனிஸ் வீட்டிலும் சின்னக் குழந்தை இருந்தது, அவர்கள் அவ்வளவு வசதியானவர்கள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருவேளை அது மலிவான குழந்தையாக இருக்கும். உண்மையில் நல்லதொரு குழந்தையை அம்மா விரும்பினாள். அம்மாவுக்கு எல்லாமே விசேஷமாக இருக்க வேண்டும். ஆனால், ஜீனிஸ் வீட்டுக் குழந்தை போன்ற ஒரு குழந்தையேகூட எங்களுக்குப் பொருத்தமான ஒன்றாக இருந்திருக்கும்.

அன்றைய தினத்துக்கான திட்டங்களை வகுத்துக் கொண்டுவிட்ட பிறகு, நான், எழுந்துபோய் என் அறைச் சன்னலின் கீழ் நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன். ஜன்னல் கண்ணாடியை உயர்த்தி, என் தலையை வெளியே நீட்டினேன். பக்கத்து வீட்டுத் தோட்டத்தைப் பார்த்தாற்போல் இருந்தது எங்கள் ஜன்னல். எதிரில் தெரிந்த குன்றுகளை அடுத்திருந்த பள்ளத்தாக்கும், சிவப்புச் செங்கல்லால் கட்டப்பட்ட வீடுகளும் இன்னமும் இருளிலேயே இருந்தன. எங்கள் வீட்டுப் பக்கம் இருந்த வீடுகளின் மேல் வெளிச்சம் பட்டுக்கொண்டிருந்தது. விநோதமான நீண்ட நிழல்களுடன், அவை, பரிச்சயம் இல்லாத இடங்கள் போலவும், தீட்டப்பட்ட சித்திரங்கள் போலவும் காணப்பட்டன.

அதன்பிறகு, நான் என் அம்மாவின் அறைக்குப் போய் பெரிய மெத்தையின் மேல் ஏறிக்கொண்டேன். அம்மா விழித்ததும் என் திட்டங்களைச் சொன்னேன். நான் அதுவரை கவனிக்கவில்லையெனினும் குளிரினால் விறைத்துப் போய்விட்டிருந்தேன். விறைப்பு நீங்கி, என்மேல் படிந்திருந்த பனித் துகள்கள் உருகும் வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்படியே அம்மாவின் பக்கத்தில் படுத்தபடி தூங்கிப் போனேன். பிறகு, அம்மா கீழே காலை உணவு தயாரிக்கிற சத்தம் கேட்டுத்தான் எழுந்தேன்.

காலை உணவுக்குப் பிறகு நாங்கள் டவுனில் இருந்த புனித அகஸ்தீன் தேவாலய பூசைக்குப் போனோம். அப்பாவுக்காக ஜெபம் செய்துவிட்டு, கடை கண்ணிகளுக்குப் போனோம். பிற்பகலில் சீதோஷ்ண நிலை சரியாக இருந்தால் அப்படியே காலாற நடப்போம். அல்லது கான்வெண்டுக்குப் போய் அம்மாவின் அருமைச் சிநேகிதியான புனித தொமினிக் மதரை சந்திப்போம். அம்மா, அவர்களை, அப்பாவுக்காக ஜெபிக்கச் சொல்வாள். அப்பா, போர் முடிந்ததும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் படுக்கைக்குப் போவதற்கு முன்னால் நான் கடவுளை வேண்டிக் கொள்வேன். உண்மையில் நான் எதற்காக பிரார்த்திக்கிறேன் என்பதை அப்போது நான் அறிந்து கொள்ளாதவனாகவே இருந்தேன்.

ஒருநாள் காலை, நான், பெரிய மெத்தையில் படுப்பதற்காக நான் கட்டிலில் ஏறியபோது, தன்னுடைய வழக்கமான கிறிஸ்துமஸ் தாத்தா பாணியில் அப்பா வந்துவிட்டிருந்ததைப் பார்த்தேன். அது நிச்சயமாக அவரேதான். ஆனால், வழக்கமான சீருடை அணிந்து கொள்ளாமல், அவர், அருமையான நீல சூட்டை அணிந்திருந்தார். அம்மாவுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. அப்படி மகிழ்வதற்கு அதில் என்ன இருந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஏனென்றால், சீருடையணியாத அப்பா அப்படியொன்றும் சுவாரஸ்யமானவராக எனக்குப் படவில்லை. ஆனால், அவள்தான் மகிழ்ச்சி பொங்க "கடவுள் நம் ஜெபங்களுக்கு செவி சாய்த்தார்' என்றாள். அப்புறம், அப்பாவைப் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு வந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக நாங்கள் தேவாலயத்துக்குப் போனோம்.

வேதனை என்னவென்றால், அன்றைய தினமே, அப்பா சாப்பாட்டுக்கு வரும்போது, பூட்சைக் கழற்றிவிட்டு, செருப்புகளையும், ஜலதோஷம் வந்துவிடாமல் தடுப்பதற்காக ஒரு பழைய அழுக்குத் தொப்பியையும் அணிந்துகொண்டு கால் மேல் கால் போட்டபடி, கவலையுடன் காட்சியளித்த அம்மாவிடம் முக்கியமான ஏதோ ஒன்றைப் பற்றிப் பேச ஆரம்பித்ததுதான். கவலை கொண்ட முகத்தோற்றம் அம்மாவின் அழகைக் குலைத்துவிடுவதால், அவள் கவலைப்படுவது எனக்குப் பிடிக்காது. எனவே, நான் அவர் பேச்சில் குறிக்கிட்டேன்.

"லேறி! ஒரு நிமிஷம் பொறு!'' என்று அம்மா மென்மையாகச் சொன்னாள்.

சலிப்பு ஏற்படுத்தும் விருந்தாளிகள் வரும்போதுதான் அவள் அப்படிச் சொல்வது வழக்கம் என்பதால், நான் அதைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே போனேன்.

அம்மா பொறுமை இழந்தவளாக, "பேசாமல் இரு லேறி. நான் டாடியிடம் பேசிக்கொண்டிருப்பது உன் காதில் விழவில்லையா?'' என்று சொன்னாள்.

"டாடியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது'' என்னும் விபரீத வார்த்தைகளை முதன்முதலாக நான் அப்போதுதான் கேட்டேன். கடவுள் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிற விதம் இதுவானால், அவர் பிரார்த்தனைகளைக் கேட்பதில் அக்கறை கொண்டவராய் இருந்திருக்க முடியாது என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

எத்தனை அலட்சியத்தை என்னால் திரட்ட முடியுமோ, அத்தனை அலட்சியத்தையும் திரட்டி, "நீ எதற்கு டாடியுடன் பேசுகிறாய்'' என்று பெரிதாக பாவ்லா பண்ணியபடி கேட்டேன்.

"ஏனென்றால் எனக்கும் டாடிக்கும் பேசிக் கொள்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. இப்போது மீண்டும் குறுக்கே பேசாதே.''

பிற்பகலில் அம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்பா என்னை வெளியே அழைத்துச் சென்றார். வழக்கம்போல ஊருக்குள் போகாமல் நாங்கள் டவுனுக்குப் போனோம். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் என் இயல்பின்படி நான் இதையும் ஒரு நல்ல விஷயம் என்றே எண்ணினேன். ஆனால், அது ஒன்றும் அப்படி இருக்கவில்லை. டவுனுக்குள் எப்படி நடந்து போவது என்பது பற்றி எனக்கும் என் அப்பாவுக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன. டிராம்கள், கப்பல்கள், குதிரைகள் ஆகியவற்றில் அவருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. தன்னை ஒத்த பேர்வழிகளிடம் பேசுவதில் மட்டுமே அவருக்கு ஆர்வம் இருந்தது. நான் நிற்க விரும்பிய போதெல்லாம், அவர், என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தபடி இருந்தார். ஆனால், அவர் நிற்க விரும்பியபோது மட்டும், நான், நின்றேயாக வேண்டியிருந்தது. சுவரின் மீது எப்போதாவது சாய்ந்தால், அது, அங்கு அவர் நீண்ட நேரம் நிற்கப் போகிறார் என்பதற்கு அடையாளம் என்று நான் அறிந்து கொண்டேன். இரண்டாவது முறையாக அவர் அப்படிச் செய்ததைக் கண்டதும் எனக்குக் கோபம் வந்தது. அவர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவார் போலத் தோன்றியது. நான், அவருடைய கோட்டையும் கால் சட்டையையும் பிடித்து இழுத்தேன். நான் பிடிவாதம் பிடிக்கும்போது சீற்றங்கொண்டு "லேறி ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அறை வாங்குவாய்'' என்று சொல்லும் அம்மாவைப் போலில்லாமல், என்னைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிடக்கூடிய அபூர்வ திறமை அப்பாவுக்கு இருந்தது. நான் அழுதால்கூட அவர் கொஞ்சமும் எரிச்சல் அடையவில்லை. உண்மையிலேயே அவருடன் வெளியே போவது ஒரு மலையுடன் போவதுபோல இருந்தது. நான் இழுத்ததையும் குத்தியதையும் அவர் ஒன்று முழுமையாகப் புறக்கணித்தார் அல்லது இளித்தபடி ஏதோ ஒரு சிகரத்தின் மேலிருந்து வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் போன்ற சுயநலக்காரரை நான் பார்த்ததே இல்லை.

தேநீர் வேளையில் "டாடியுடன் பேசுவது' மறுபடியும் ஆரம்பித்தது. அவர் கையில் வைத்திருந்த செய்தித்தாளை சில நிமிடங்களுக்கு ஒருமுறை கீழே வைத்துவிட்டு புதிதாக அம்மாவிடம் எதையெதையோ சொல்லிக் கொண்டிருந்ததில் நிலைமை மேலும் சிக்கலானது. இது ஒரு தப்பாட்டம் என்று எனக்குத் தோன்றியது. ஆணுக்கு ஆண் என்ற முறையில் அவருடன் போட்டி போட்டு அம்மாவின் கவனத்தைக் கவர நான் தயாராக இருந்தேன். ஆனால், மற்றவர்கள் எல்லோரும் அவருக்குச் சாதகமாக காரியங்களைச் செய்து தரும்போது, எனக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரியவில்லை. பேச்சை திசை திருப்ப பலமுறை முயன்று நான் தோற்றுப் போனேன்.

"லேறி! டாடி படிக்கும்போது நீ அமைதியாக இருக்க வேண்டும்'' என்று அம்மா பொறுமையிழந்தவளாகச் சொன்னாள். உண்மையிலே அவளுக்கு என்னுடன் பேசுவதைவிட அப்பாவுடன் பேசுவது பிடித்திருக்கலாம். அல்லது. உண்மையை ஒத்துக்கொள்ளத் தயங்குமளவுக்கு அவளை அவர் ஏதோ ஒருவிதமான பயத்தில் வைத்திருக்க வேண்டும்.

அன்று இரவு அம்மா எனக்கு போர்வை போர்த்திவிட்டபோது, "மம்மி. நான் மறுபடியும் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டால் அப்பா யுத்தத்துக்குப் போய்விடுவாரா?'' என்று கேட்டேன்.
அம்மா ஒரு கணம் யோசிப்பது போலத் தோன்றியது. "இல்லை, கண்ணே! அவர் போகமாட்டார்'' என்று புன்னகையுடன் அம்மா சொன்னாள்.

"ஏன் மம்மி அவர் போகமாட்டார்?''

"ஏனென்றால், இப்போது ஒரு யுத்தமும் நடக்கவில்லை.''

"அது சரி. ஆனால் கடவுள் விரும்பினால் இன்னொரு யுத்தத்தை உண்டாக்க முடியாதா?'' என்றேன் நான்.

"கடவுள் அதை விரும்பமாட்டார் கண்ணே. யுத்தத்தை கடவுள் உண்டாக்குவதில்லை. கெட்ட மனிதர்கள்தான் அதை உண்டாக்குகிறார்கள்.''

"ஓ'' என்றேன் நான்.

எனக்கு அது ஏமாற்று வேலையாக தெரிந்தது. கடவுள் நான் நினைத்ததைப் போன்றவரல்ல கடவுள் என்று எண்ணத் தொடங்கினேன்.

மறுநாள் காலை வழக்கம்போல அதே நேரத்துக்கு எழுந்தேன். பொங்கி வழியும் ஷாம்பெய்ன் பாட்டிலைப் போல உற்சாகத்துடன் இருந்தேன். என் பாதங்களை வெளியே நீட்டி திருமதி.வலது தன்னுடைய சொந்த அப்பாவால் அனுபவித்த தொல்லைகளையும், பிறகு அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்ததையும் பற்றிய நீண்ட உரையாடலைக் கற்பனையில் நிகழ்த்தினேன். முதியோர் இல்லம் என்றால் என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும், அது அப்பாவுக்குப் பொருத்தமான இடம் என்று எனக்குப் பட்டது. பிறகு, நான், என் நாற்காலியை எடுத்துப்போட்டு உட்கார்ந்து தலையை வெளியே நீட்டினேன். கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்ட குற்ற மனப்பான்மையுடன் பொழுது விடிந்து கொண்டிருந்தது. கதைகளுடனும் திட்டங்களுடனும் தலை வெடித்துக் கொண்டிருக்க, நான் தட்டுத் தடுமாறி அடுத்த அறைக் கதவை அணுகி அரை இருளில் பெரிய மெத்தையில் விழுந்தேன். அம்மாவுக்கு பக்கத்தில் இடமில்லாதலால், நான், அவளுக்கும் அப்பாவுக்கும் இடையே புக வேண்டியதாயிற்று. நான், அப்பாவைப் பற்றி சற்று நேரம் மறந்துபோய் பல நிமிடங்கள் அப்படியே நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவரை என்ன செய்வது என்று என் மூளையைப் போட்டுக் கசக்கிக் கொண்டேன். அவர் படுக்கையில் தன்னுடைய பங்குக்கும் மேற்பட்ட அளவு இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது எனக்கு அசௌகர்யமாக இருந்தது. ஆகவே, முனகி நெளியுமளவுக்கு அவருக்குப் பல உதைகள் கொடுத்தேன். அவர் ஒரு வழியாக நகர்ந்து எனக்கு இடம் கொடுத்தார். அம்மா எழுந்து என்னைத் தடவிக் கொடுத்தாள். நான், வாயில் கட்டை விரலைப் போட்டபடி படுக்கையின் கதகதப்பில் சௌகரியமாகப் படுத்தேன்.

"மம்மி'' என்று திருப்தியுடனும், சத்தமாகவும் ராகம் இழுத்தேன்.

"ஷ்... டாடியை எழுப்பி விடாதே கண்ணே'' என்று அவள் கிசுகிசுத்தாள். இது "டாடியுடன் பேசுவதை" விட பயங்கரமான மிரட்டலாக, புதியதோர் மாற்றமாக இருந்தது. அதிகாலை நேர மந்திராலோசனை இல்லாத தினத்தை என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

"ஏன்?'' என்று நான் கடுமையாகக் கேட்டேன்.

"ஏனென்றால், டாடி பாவம். களைத்துப் போயிருக்கிறார்''. இது சரியான காரணமாக எனக்குப் படவில்லை.
"டாடி பாவம்'' என்கிற அவளுடைய நெகிழ்ச்சியான விளக்கம் எனக்கு எரிச்சல் ஊட்டியது. இந்த மாதிரியான தேனொழுகும் பேச்சு எனக்குப் பிடிப்பதில்லை. அது போலியானது என்று எனக்கு எப்போதும் தோன்றும்.

"ஓ'' என்று அலட்சியமாகச் சொன்னேன்.

"மம்மி, இன்றைக்கு நாம் எங்கே போக வேண்டும் தெரியுமா?'' என்று வெற்றி தொனிக்கும் குரலில் கேட்டேன்.

"இல்லை கண்ணே'' என்று அவள் பெருமூச்சு விட்டாள்.

"கிளென்னுக்குப் போய் என் புது வலையில் மீன்களைப் பிடிக்க வேண்டும். பிறகு ·பாக்ஸ் அண்டு ஹௌண்ட்சுக்குப் போய்...''

"டாடியை எழுப்பி விடாதே'' என்று கோபத்துடன் சீறியபடி என் வாய்க்குக் குறுக்கே அம்மா தன் கையை வைத்தாள்.

ஆனால், அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது. அவர் விழித்துக் கொண்டுவிட்டார். அதாவது, கிட்டத்தட்ட விழித்துக் கொண்டார். அவர் முனகிக் கொண்டு தீப்பெட்டியை நோக்கி கைகளை நீட்டினார். பிறகு நம்ப முடியாதவராகக் கடிகாரத்தைப் பார்த்தாள்.

அம்மா தாழ்ந்த ரகசியக் குரலில், "டீ வேண்டுமா அன்பே'' என்றாள். அவள் அப்படிப் பேசி இதற்கு முன்னார் நான் கேட்டதேயில்லை. அவள் கிட்டத்தட்ட பயந்து போனது போல இருந்தது.

"டீயா? இப்போது நேரம் என்ன என்று உனக்குத் தெரியுமா?'' எகத்தாளமாக அவர் கேட்டார்.
இத்தகைய குறுக்கீடுகளால் நான் நினைத்தது மறந்து போய் விடக்கூடும் என்று பயந்தவனாக, "அதற்குப் பிறகு நாம் ராத்கூனி சாலைக்குப் போக வேண்டும்'' என்று நான் சத்தமாகச் சொன்னேன்.

"லேறி! நீ இப்போது உடனே போய்த் தூங்க வேண்டும்'' என்று அம்மா நறுக்கென்று சொன்னாள்.
நான் சிணுங்கி அழுதேன். அவர்கள் இருவரும் நடந்து கொண்டவிதம் காரணமாக, என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. என்னுடைய காலை நேரத் திட்டங்களை அழிப்பது ஒரு குடும்பத்தை அப்படியே புதைப்பது போல் இருந்தது.

அப்பா ஒன்றும் பேசவில்லை. பைப்பை பற்ற வைத்து புகையை இழுத்தபடி அம்மாவையோ என்னையோ பொருட்படுத்தாமல் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த நிழல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு கிறுக்கு என்று எனக்குத் தெரியும். ஒவ்வொரு தடவையும் நான் வாயைத் திறந்ததும் அம்மா எரிச்சல் அடைந்து என்னை அடக்கினாள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இது நியாயமே இல்லை என்று எனக்குப் பட்டது. அதில் ஏதோ கெட்ட எண்ணம் இருப்பதாகக்கூடத் தோன்றியது. ஒவ்வொரு தடவையும் இரண்டு படுக்கைகள் விரிப்பது விணானது என்று நான் சொன்னபோதெல்லாம், அதுதான் ஆரோக்கியமான விஷயம் என்று சொல்லி வந்த அம்மா, இப்போது இந்த மனிதனுடன், இந்த அந்நியனுடன் ஆரோக்கியம் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல் ஒரே படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறாள்!

அவர், சீக்கிரம் எழுந்து டீ போட்டார். அம்மாவுக்கு ஒரு கோப்பை டீ தந்தார். ஆனால் எனக்குத் தரவில்லை.

"மம்மி! எனக்கு டீ வேண்டும்'' என்று நான் கத்தினேன்.

"சரி, கண்ணே, நீ அம்மாவின் கோப்பையிலிருந்தே குடி'' என்று அவள் பொறுமையாகச் சொன்னாள்.
விஷயம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அப்பா அல்லது நான் இருவரில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

அம்மாவின் கோப்பையிலிருந்து டீ குடிக்க எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்னுடைய சொந்த வீட்டில் பிறர்க்குச் சமமாக நடத்தப்பட வேண்டுமென்று விரும்பினேன். எனவே, அம்மாவைப் பழிவாங்குவதற்காகவே அம்மாவுக்கு எதுவும் மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் நானே குடித்துவிட்டேன். அம்மா அதையும் அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.

ஆனால், அன்று இரவு எனக்கு படுக்கை விரித்தபோது, "லேறி! நீ எனக்கு ஒரு உறுதிமொழி தர வேண்டும்'' என்று அவள் மென்மையாகக் கேட்டாள்.

"என்ன அது?'' என்று நான் கேட்டேன்.

"காலையில் வந்து பரிதாபத்துக்குரிய டாடியை நீ தொல்லை செய்யக்கூடாது. சரியா?''

மறுபடியும், "பரிதாபத்துக்குரிய டாடி'. அந்த சகிக்க முடியாத மனிதன் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் நான் சந்தேகிக்கத் தொடங்கினேன்.

"ஏன்'' என்று கேட்டேன்.

"ஏனென்றால், பரிதாபத்துக்குரிய டாடி, கவலையும் களைப்புமாக இருப்பதால் சரியாகவே தூங்குவதில்லை.''

"அவர் ஏன் தூங்குவதில்லை மம்மி?''

"சரி, உனக்குத் தெரியும் இல்லையா? அவர் யுத்தத்துக்குப் போயிருந்தபோது அம்மாவுக்கு தபால் ஆபஸில் இருந்து பணம் வருமே?''

"மிஸ் மக்கார்த்தியிடமிருந்தா?''

"ரொம்ப சரி. ஆனால் இப்போது மிஸ்.மக்கார்த்தியிடம் பணம் இல்லை. ஆகவே, டாடி போய்த்தான் அதைச் சம்பாதிக்க வேண்டும். அவரால் அது முடியவில்லை என்றால், என்ன ஆகும் தெரியுமா?''

"தெரியாது சொல்லு'' என்றேன்.

"வெள்ளிக்கிழமைகளில் பிச்சை எடுக்கிற அந்த ஏழைக் கிழவியைப் போல நாமும் பிச்சையெடுக்க வேண்டியதுதான். அது நமக்குப் பிடிக்காது இல்லையா?''

"இல்லை. நமக்குப் பிடிக்காது'' என்று நான் ஒப்புக் கொண்டேன்.

"எனவே, "நான் இனிமேல் டாடியை எழுப்பித் தொல்லை தரமாட்டேன்' என்று சத்தியம் செய்.''

"சத்தியம்.''

நான் மனப்பூர்வமாகத்தான் இப்படிச் சொன்னேன். பணத்தின் மகிமை எனக்குத் தெரியும். வெள்ளிக் கிழமைகளில் பிச்சை எடுக்கும் கிழவியைப் போல பிச்சை எடுக்க எனக்குப் பிடிக்காது. அம்மா, படுக்கையைச் சுற்றி என் பொம்மைகளை வளையம் போல் வைத்தாள். ஆகவே, நான் தரையில் எந்தப் பக்கத்தில் கால் வைத்தாலும், அவற்றில் ஏதாவதொன்றின் மீது இடறி விழுந்தேயாக வேண்டும்.

காலையில் எழுந்தபோது நான் செய்து கொடுத்திருந்த சத்தியம் எனக்கு நினைவில் இருந்தது. எழுந்து தரையில் உட்கார்ந்தபடி மணிக்கணக்கில் விளையாடினேன். பிறகு, என் நாற்கலியில் உட்கார்ந்து ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு மணிக்கணக்கான நேரத்தை செலவழித்தேன். அப்பா விழித்து எழுந்து விட்டிருந்தால் நன்றாயிருக்கும் என்று எனக்குத் தோன்றியது. யாராவது எனக்கு ஒரு கோப்பைத் தேநீர் தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குச் சலிப்பாக இருந்தது. ரொம்பவும் குளிராக இருந்தது. என்னுடைய பெரிய சிறகுப் படுக்கையின் கதகதப்புக்காகவும் மென்மைக்காகவும் நான் ஏங்கினேன்.

கடைசியாக, என்னால் பொறுக்க முடியாமல் போய்விட்டது. நான், அடுத்த அறைக்குப் போனேன். அம்மாவுக்குப் பக்கத்தில் இடம் இல்லாததால், நான், அவள் மேல் ஏறிக் குதித்தேன். அவள் அதிர்ச்சியடைந்தவளாகக் கண்விழித்தாள்.

என் கைகளை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, "லேறி! நீ நேற்று என்னவென்று சத்தியம் செய்து கொடுத்தாய்'' என்று ரகசியமாகக் கேட்டாள்.

"நான் அதன்படிதான் நடந்து கொண்டேன் மம்மி. நான் எவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன்'' என்று கையும் களவுமாகப் பிடிபட்டவனைப் போல அழுதேன்.

"ஓ! கண்ணே! நீ தொலைந்தாய்'', என்று அவள் கவலையோடு சொன்னாள். என்னைத் தடவிக் கொடுத்தாள்.
"சரி. நான் உன்னை இங்கே இருக்கவிட்டால், நீ பேசாமல் இருப்பாய் என்று எனக்குச் சத்தியம் செய்து தருவாயா'' என்றாள்.

"மம்மி! எனக்கு உன்னிடம் பேசியாக வேண்டுமே'' என்று நான் அழுதேன்.

"அதெல்லாம் கூடாது. தூங்க வேண்டும். புரிகிறதா?'' என்று நான் அறிந்திராத கண்டிப்புடன் அவள் சொன்னாள்.

எனக்கு மிக நன்றாகவே புரிந்தது. எனக்குப் பேச வேண்டும். அவளுக்குத் தூங்க வேண்டும். மொத்தத்தில் அந்த வீடு யாருடையது?

நானும் அதே மாதிரி கண்டிப்புடன் சொன்னேன். "மம்மி! டாடி தனியாக வேறு படுக்கையில் படுப்பதுதான் ஆரோக்கியமானது என்று நான் நினைக்கிறேன்'' என்றேன்.

இது அவளைத் தடுமாறச் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், சற்று நேரத்துக்கு அவள் எதுவும் சொல்லவில்லை. அந்த அநீதி என்னை உறுத்தியது. முன்னுக்குப்பின் முரணாகவும், அநியாயமானதாகவும் இருந்த அவளுடைய வாய் வார்த்தைகளாலேயே நான் அவளைத் தண்டித்தேன். அவள் பதில் சொல்லக்கூட முயற்சி செய்யவில்லை. எரிச்சலுடன் நான் அப்பாவுக்கு ஒரு உதைவிட்டேன். அவள் அதைக் கவனிக்கவில்லை. ஆனால், அவர் முனகியபடி திடுக்கிட்டு கண் விழித்தார்.

அம்மாவைப் பார்க்காமல், யாரோ ஒருவரை உற்றுப் பார்ப்பவர் போல கதவைப் பார்த்துக்கொண்டே, நடுக்கம் தெரியும் குரலில், "மணி என்ன?'' என்றார்.

"இன்னும் நேரம் ஆகவில்லை. குழந்தைதான். நீங்கள் தூங்குங்கள்'' என்று அவள் ஆதரவாகச் சொன்னாள். பிறகு படுக்கையில் இருந்து எழுந்தபடி என்னைப் பார்த்து, "பார் லேறி. நீ டாடியை எழுப்பிவிட்டாய். நீ இப்போது உடனே வெளியே போயாக வேண்டும்'' என்று சொன்னாள்.

அமைதியாகச் சொன்ன போதிலும், அவள் இந்த முறை மிக உறுதியாக இருக்கிறாள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் போராடாமலிருந்துவிட்டால், என்னுடைய உரிமைகளையும் சலுகைகளையும் இழந்துவிடுவேன் என்பது தெரிந்தது. அவள் என்னைத் தூக்கியபோது, நான் அப்பாவைப் பற்றிக் கவலைப்படாமல், செத்துப் போனவர்கூட எழுந்துவிடும்படி பயங்கரமாக வீறிட்டலறினேன். அப்பா முனகினார்.

"கேடுகெட்ட பயல். அவன் தூங்குவதே இல்லையா?''

"அன்பே! அது அவன் வழக்கம்'' என்று அவள் அமைதியாகச் சொன்னபோதிலும், அவள் எரிச்சல் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் அறிய முடிந்தது.

"சரி, அவன் இங்கேயிருந்து இப்போது உடனே வெளியேற வேண்டும்'' என்று அப்பா கத்தினார். போர்வைகளை எல்லாம் சேர்த்துச் சுருட்டியபடி சுவர்ப்புறம் திரும்பிப் படுத்தார். சிறிய கன்னங்கரிய வெறுப்பு மிழும் இரண்டு கண்கள் மட்டும் தெரியும்படி தலையை மட்டும் திருப்பிப் பார்த்தார். மிக மோசமான மனிதராகத் தெரிந்தார்.

படுக்கை அறைக் கதவைத் திறப்பதற்காக அம்மா என்னை இறக்கி விட்டாள். உடனே, நான் என்னை விடுவித்துக் கொண்டு தூரத்து மூலைக்கு ஓட்டமாக ஓடிப்போய் வீறிட்டலறினேன். அப்பா எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டார்.

கரகரப்பான குரலில். "குட்டி நாயே! வாயை மூடு'' என்றார்.

நான், அதிர்ச்சி அடைந்து கத்துவதை நிறுத்தினேன். அப்படியான தொனியில் யாரும் எப்போதும் என்னிடம் பேசியதே இல்லை. ஆத்திரத்தில் கோணிய அவருடைய முகத்தை, நான் நம்ப முடியாதவனாகப் பார்த்தேன். இந்தப் பூதம் பத்திரமாகத் திரும்பி வரவேண்டும் என்று நான் செய்த பிரார்த்தனைகளுக்குப் பதிலாக கடவுள் எனக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்பதை நான் அப்போதுதான் நன்றாகப் புரிந்து கொண்டேன்.

"நீ வாயை மூடு'' என்று நான் அலறினேன்.

"என்ன சொன்னாய்?'' என்று படுக்கையைவிட்டுப் பாய்ந்து எழுந்தபடி அப்பா கத்தினார்.

"மிக், மிக், குழந்தைக்கும் உங்களுக்கும் இன்னும் நன்றாகப் பழக்கமாகவில்லை என்பது உங்களுக்கு தெரியவில்லையா?'' என்று அம்மா கத்தினாள்.

"நல்ல நடத்தையைவிட நல்ல தீனியே அவனுக்கு தரப்பட்டிருப்பது தெரிகிறது. முதுகில் இரண்டு அடி போட்டால் எல்லாம் சரியாகிவிடும்'' என்று கைகளைப் பயங்கரமாக ஆட்டிக் கொண்டு அவர் சொன்னார்.
இதுவரை அவர் போட்ட கூச்சல் எல்லாம், என்னைப் பற்றி அவர் இப்போது சொன்ன அசிங்கமான வார்த்தைகளுக்கு முன் ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. அவை என் ரத்தத்தைக் கொதிக்க வைத்தன.

"உன்னையே நீ அடித்துக்கொள். நீயே உன்னை அடித்துக்கொள். வாயை மூடு. உன் வாயை மூடு'' என்று வெறி பிடித்தவன் போலக் கத்தினேன்.

அவர், பொறுமை இழந்து என்னை அடிக்க வந்தார். அம்மா பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். தெளிவற்ற மனநிலையில் அவர் கொடுத்த அடியானது வெறுமனே லேசாகத் தட்டியதுபோல் இருந்தாலும், கள்ளமற்ற என்னுடைய பிரார்த்தனையின் விளைவாக யுத்தத்திலிருந்து வீடு திரும்பி, தந்திரமாக எங்கள் பெரிய படுக்கையில் இடம் பிடித்துக் கொண்டுவிட்ட அந்த அந்நியனிடம்&முற்றிலும் அந்நியமான ஒருவனிடம்&அடிவாங்குவது என்பது என்னைத் தடுமாறச் செய்தது. நான் அலறி அலறிக் கூச்சலிட்டபடி இங்கும் அங்கும் ஓடினேன். சின்ன மிலிட்டரி சட்டையை மட்டும் போட்டிருந்த அப்பா, உடலெங்கும் ரோமத்துடுன் அருவருப்பாகக் காட்சியளித்தபடி, கொலை செய்யக் கிளம்பிய மலைபோல என்னைக் குனிந்து பார்த்து முறைத்தார். அவருக்கு பொறாமையாகக்கூட இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. எங்கள் இருவருக்கும் நடுவே, அம்மா மனம் நொறுங்கிப் போனவளாக, நைட் டிரஸில் நின்றாள். அவள் மனம் சங்கடப்பட்டால் பரவாயில்லை என்றே எனக்குத் தோன்றியது. அவளுக்கு அவ்வளவும் தேவைதான் என்றுகூடப் பட்டது.

அன்று காலை முதல் என் வாழ்க்கை நரகமானது. அப்பாவும் நானும் பரம விரோதிகளாகிவிட்டோம். நான் அம்மாவுடன் இருக்கும் நேரத்தை அவரும, அவர் இருக்கும் நேரத்தை நானும பறித்துக் கொள்வதில் பல பூசல்களில் ஈடுபட்டோம். அம்மா, என் படுக்கையில் உட்கார்ந்து கதை சொல்லும்போது, அவர் யுத்தத்துக்கு போவதற்கு முன்னால் வைத்துவிட்டுப் போன பூட்சுகளை தேடத் தொடங்குவார். அவர் அம்மாவுடன் பேசும்போது அதை நான் கண்டு கொள்ளவில்லை என்று காட்டுவதற்காகவே என் விளையாட்டுச் சாமான்களை வைத்துக் கொண்டு சத்தம் போட்டு விளையாடுவேன். ஒருநாள் மாலை அவர் வேலை முடித்து வீடு திரும்பியதும் அவருடைய பெட்டியிலிருந்த பேட்ஜ்களையும், கூர்க்கா கத்திகளையும், மடக்குத் தடிகளையும் வைத்துக் கொண்டு, நான் விளையாடுவதைப் பார்த்துவிட்டுப் பயங்கரமாகச் சண்டை போட்டார், அம்மா எழுந்து வந்து அந்தப் பெட்டியை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போனாள்.

"லேறி! டாடியாகத் தராதபோது, நீ அவருடைய விளையாட்டுப் பொருட்களை எடுத்து விளையாடக்கூடாது அவர் உன் விளையாட்டுப் பொருட்களைத் தொடுவதில்லை அல்லவா?'' என்று கடுமையாகச் சொன்னாள்.
அவள், தன்னை அடித்து விட்டதுபோல ஏனோ அப்பா அவளைப் பார்த்து முகத்தை சுளித்துவிட்டு வேறுபுறம் திருப்பிக் கொண்டார்.

"அவை ஒன்றும் விளையாட்டுப் பொருட்களல்ல. அவற்றில் சில மிக அபூர்வமானவை; கிடைப்பதற்கரியவை'' என்று உறுமியபடி, அவர், பெட்டியை எடுத்து, அதற்கு உள்ளே இருந்து நான் எதையாவது எடுத்துக் கொண்டு விட்டேனோ என்று சோதனை போட்டார்.

ஆனால், காலம் செல்லச் செல்ல, அவர் என்னையும் அம்மாவையும் பிரித்து வைப்பதற்கு என்னென்ன செய்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அம்மாவுக்கு, அவர் மேல் அத்தனை ஈர்ப்பு வரும்படி அவர் என்ன செய்கிறார் என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியாதது மோசமான நிலையாயிற்று. அவர் எல்லா விதத்திலும் என்னைவிட மட்டமாகத்தான் இருந்தார். சாதாரணமாகத்தான் பேசினார். டீ குடிக்கும்போது சப்தம் எழுப்பினார். ஒரு சமயம் அவளுக்கு செய்தித்தாளில்தான் ஆர்வமோ என்று எண்ணிக் கொண்டு நானாக துணுக்குச் செய்திகளைத் திரட்டி துண்டுத் தாளில் எழுதி அவளுக்குப் படித்துக் காட்டினேன். அப்புறம், ஒருவேளை அவர் புகைபிடிப்பதனாலோ என்று நினைத்துக் கொண்டேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அது பிடித்திருந்தது. அவரிடம் பிடிபடும்வரை அவருடைய பைப்பை எடுத்துக் கொண்டு திரிந்தேன். டீயைக்கூட சப்தம் எழுப்பியபடி குடித்தேன். அம்மா, என்னிடம் மட்டும, "அது அருவருப்பாயிருக்கிறது' என்றாள். ஆகவே, ஒன்றாகத் தூங்கும் ஆரோக்கியமற்ற அந்த வழக்கத்தில்தான் ஏதோ மர்மம் இருக்கிறது என்று உணர்ந்தேன். அதைப் புலனாய்ந்து அறிவதற்காக அவர்களுடைய படுக்கையறைக்குள் நுழைந்து, அவர்களைக் கண்டுகொள்ளாதது போல எனக்கு நானே பேசிக்கொண்டு அவர்களைக் கண்காணித்தேன். எனக்குத் தெரிந்தவரை ஏதும் நடக்கவில்லை. பெரியவர்களாக வளர்ந்து மோதிரம் மாற்றிக் கொள்வதில் விஷயம் முழுவதும் அடங்கியிருந்ததாகத் தெரிந்தது. நான் காத்திருக்க வேண்டும் என்பதும் புரிந்தது.

அதே வேளையில், நான், காத்துக் கொண்டிருக்கிறேனே தவிர, சரண் அடைந்து விடவில்லை என்று அவருக்குத் தெரிவிக்க விரும்பினேன். ஒருநாள் என் முன்னால் அம்மாவுடன் சகித்துக்கொள்ள முடியாதபடி அவர் அரட்டையடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு நன்றாகக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

"மம்மி! நான் வளர்ந்து பெரியவன் ஆனதும் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?'' என்றேன்.

"இல்லை கண்ணே, என்ன?'' என்றாள் அவள்.

"நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்'' என்றேன் அமைதியாக.

அப்பா, அட்டகாசமாகச் சிரித்துவிட்டு அமைதியானார்.

அது வெறும் நடிப்புத்தான் என்று எனக்குத் தெரியும். அம்மா சந்தோஷப்பட்டாள். ஒரு காலத்தில், அப்பாவின் பிடியிலிருந்து, தான் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற எண்ணம் அவளுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்க வேண்டும். புன்னகை செய்தபடி, "அது நன்றாகத்தான் இருக்கும் இல்லையா?'' என்றாள்.

"ரொம்ப அருமையாக இருக்கும். ஏனென்றால், நமக்கு ஏகப்பட்ட குழந்தைகள் பிறக்கப் போகின்றன'' என்றேன்.

"அது சரி கண்ணே. விரைவில் நம் வீட்டுக்கு ஒரு குழந்தை கிடைக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.
பிறகு உனக்கு விளையாடத் துணை கிடைக்கும்'' என்று அவள் இனிமையாகச் சொன்னாள்.

அப்பாவின் விருப்பப்படி எல்லாம் நடப்பது போல அவள் காட்டிக் கொண்டாலும் என் ஆசைகளையும் அவள் மதித்தாள் என்பதை அறிந்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தவிர, ஜீனிஸ் வீட்டாருக்கும் பாடம் புகட்டியது போல இருக்கும்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. முதலாவது அம்மா எப்போதும் வேலையாயிருந்தாள்.

ஆகப்போகிற அதிகச் செலவை அவள் எப்படி சமாளிக்கப் போகிறாளோ என்றிருந்தது எனக்கு. அப்பா மாலை நேரத்தில் வீடு திரும்புவதற்கு தாமதம் ஆனாலும் அதனால் எனக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. என்னை வெளியே அழைத்துப் போவதை அம்மா நிறுத்திவிட்டாள் எடுத்ததெற்கெல்லாம் அடித்தாள். நெருப்பாகக் கனன்றாள். குழந்தையைப் பற்றிய பேச்சை நான் எடுத்திருக்கவே கூடாது என்று நினைத்தேன். என்னுடைய அழிவை நானே தேடிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.

உண்மையிலேயே அழிவு காலம்தான். ஏராளமான ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே குழந்தை பிறந்தது. அலட்டிக் கொள்ளாமல் எதையும் அவன் செய்வதே இல்லை. முதல் கணத்திலிருந்து எனக்கு அவனைப் பிடிக்கவில்லை.

அவன் சிக்கலான குழந்தை. என்னைப் பொறுத்த அளவில் அவன் சிக்கலாகவே இருந்தான். எப்போதும் எல்லோர் கவனத்தையும் கோரியபடி இருந்தான்.

அவனைப் பொறுத்த அளவில், அம்மா, முட்டாளாக நடந்து கொண்டாள். அவன் எப்போதும் வேண்டுமென்றே பண்ணிக் கொள்கிறான் என்பதை அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அவன் விளையாட்டுக்குத் துணை வர முடியாத உதவாக்கரையாக இருந்தான். நாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருந்தான். அவனை எழுப்பி விடக்கூடாது என்பதற்காக நான் பதுங்கிப் பதுங்கி நடக்க வேண்டியதாக இருந்தது. அப்பாவை எழுப்பி விடுவது இப்போது பிரச்னையாக இல்லை. "குட்டியை எழுப்பி விடாதே' என்பதே வீட்டில் எப்போதும் கேட்கும் கோஷமானது.

ஏன் சரியாகக் குறிப்பிட்ட வேளையில் குழந்தை தூங்கக் கூடாது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, அம்மா அந்தப் பக்கம் திரும்பியதும் நான் அவனை எழுப்பிவிட்டு விடுவேன். சில சமயங்களில், அவனை விழித்திருக்கச் செய்ய, நான், அவனை நன்றாகக் கிள்ளியும் விடுவேன். அம்மா, ஒரு நாள் என்னைக் கையும் களவுமாகப் பிடித்து ஈவிரக்கம் இல்லாமல் அடித்தாள்.

ஒருநாள் அப்பா வேலை முடிந்து வீடு திரும்பியபொழுது நான் முன்புறத் தோட்டத்தில் ரயில் வண்டி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தேன்.

அவரைக் கவனிக்காதது போல இருந்தபடி, எனக்கு நானே பேசிக் கொள்பவன்போல சத்தமாக, "இன்னொரு கேடு கெட்ட குழந்தை இந்த வீட்டுக்கு வந்தால் நான் எங்கேயாவது போய்விடப் போகிறேன்'' என்றேன்.
அப்பா அசைவில்லாமல் நின்று என்னைத் திரும்பிப் பார்த்தார்.

"என்ன சொன்னாய்?'' என்று கடுமையாகக் கேட்டார்.

என்னுடைய நடுக்கத்தை மறைத்துக் கொண்டு, "நான் எனக்குள்ளே ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். அது என் சொந்த ரகசியம்'' என்று நான் பதில் அளித்தேன்.

அவர் ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பிப் போனார். ஒரு கடுமையான எச்சரிக்கையாக நான் விடுத்த செய்தியின் விளைவு முற்றிலும் வேறாக இருந்தது.

அப்பா, என்னிடம் இனிமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மா, குட்டியைப் பற்றி மிகவும் அலட்டிக் கொண்டாள். சாப்பாட்டு வேளையில்கூட அவள் மருண்டவளாக எழுந்து போய் தொட்டிலில் இருந்த குழந்தையைப் பார்த்து, முட்டாள்தனமாகப் புன்னகை செய்து, அப்பாவையும் அதே போலச் செய்யச் சொல்வாள்.

அவர், குட்டியிடம் நல்லதனமாக நடந்து கொள்பவர் என்றாலும், சில சமயங்களில் அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியாமல் குழம்புவார். இரவுகளில் குட்டி அழுவதைப் பற்றி அப்பா புகார் செய்தார். உடனே, அம்மா கோபித்துக் கொண்டு, ஏதாவது விஷயம் இல்லை என்றால் அவன் அழுவதே இல்லை என்கிற அண்டப் புளுகைச் சொன்னாள். அவள் எவ்வளவு தூரத்துக்கு விவரம் இல்லாமல் இருக்கிறாள் என்பதை நினைத்தால், உண்மையாகவே எனக்கு வருத்தமாக இருந்தது. அப்பா கவர்ச்சியானவர் இல்லை. ஆனால், கூர்மையான புத்தி உடையவர். அவர் குட்டியைப் புரிந்து கொண்டார். நானும் அவரைப் புரிந்துகொண்டேன் என்பதையும் உணர்ந்துகொண்டார்.

ஒரு இரவு நான் திடுக்கிட்டு எழுந்தேன். படுக்கையில் என் பக்கத்தில் யாரோ இருந்தார்கள். அம்மாவாக இருக்குமோ? சுயபுத்தி வரப்பெற்று நல்ல காலமாக அப்பாவை விட்டுவிட்டு என்னிடம் வந்துவிட்டாளோ என்று ஒரு கணம் எனக்குத் தோன்றியது.

அடுத்தகணம், குட்டி, பக்கத்து அறையில் இருந்து அழுவதும் அம்ம் அவனை ஆசுவாசப் படுத்துவதும் கேட்டது. இது அப்பா. கண்களைத் திறந்தபடி பெருமூச்சு விட்டுக் கொண்டு வெறி கொண்டதுபோல அவர் படுத்திருந்தார்.

"நீயும் தூங்கவில்லையா?'' என்று உறுமினார்.

"அட! வா. கைகளை என்மேல் போட்டுக்கொண்டு தூங்கு. சரியா'' என்றேன்.

அவரும் ஒருவிதமாக அப்படியே செய்தார். எச்சரிக்கையோடு என்று நீங்கள் அதை விவரிப்பீர்கள். அவர் எலும்பும் தோலுமாக இருந்தார் என்றாலும் நான் மட்டும் தனியாகப் படுத்திருப்பதற்கு இது பரவாயில்லை.
கிறிஸ்துமஸின்போது அவர் தாமாகவே முன்வந்து உண்மையிலேயே அருமையான ஒரு ரயில் பொம்மையை எனக்கு வாங்கித் தந்தார்.
000

- "கடைத்தெருவின் ஞானி" தொகுப்பிலிருந்து

Friday, May 28, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 9 (சமூக ஊக்கம்)

இந்த ஊக்குவித்தல் என்பது ஒரு சுழற்சிதான்.

அதாவது முதலில் உந்துதல் ஏற்படுகிறது. உந்துதல் ஏற்பட்டு குறிக்கோளை நோக்கிச் செலுத்தப்படுவது. குறிக்கோளை அடைவது. குறிக்கோளை அடைந்த பின் உந்துநிலை குறைக்கப்பட்டு, குறிக்கோளை அடைந்ததற்கான மனநிறைவடைதல். மீண்டும் உந்துநிலை தொடங்கி, நடத்தை குறிக்கோளை நோக்கிச் செலுத்தப்படுகிறது.

சரி, மக்கள் பொதுவாக சிலவிதமான ஊக்க நிலைகளுக்கு உந்தப்படுகின்றனர்.

அதிகாரம், ஆதிக்கம், சாதனை ஆகிய மூன்று நிலைகளை அடைய உந்துதல்கள் மூலம் மக்கள் அவர்களுடைய குறிக்கோளை நோக்கி உந்தப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட மனிதச் செயல்களின் விளைவாக ஏற்படும் சிக்கலான ஊக்கநிலைகள் அல்லது தேவைகள், சமூக ஊக்கிகள் எனப்படுகின்றன. குடும்பம், மற்ற மனிதர்கள், சமூகக் குழுக்களின் மூலமாக இந்த ஊக்க நிலைகள் ஏற்படுவதால் அவை சமூக ஊக்கிகள் எனப்படுகின்றன.

இந்த சமூக ஊக்கிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

அடையும் தேவை உள்ளவர்கள்
துணை நாடும் தேவை உள்ளவர்கள்
அதிகாரத் தேவை உள்ளவர்கள்

இவர்களின் குணநலன்களையும் இந்த அட்டவணையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.




























குணநலன்கள் சாதனை தேவை துணைநாடும் தேவை அதிகாரத் தேவை
பொதுவானவை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் நட்பை ஏற்படுத்துவதிக் கொள்வதில், நட்பைப் பாதுகாத்துக் கொள்வதில், சரி செய்வதில் அக்கறை ஆதிக்கம் அல்லது செல்வாக்கு பெறுவதில் மற்றும் புகழ் பெறுவதில் ஆர்வம் காட்டுதல்
எழுச்சி ஏற்படுத்தும் நிலை மிதமான அளவில் சவாலாக உள்ள வேலை நண்பர்களுடன் இருக்கும் சந்தர்ப்பங்கள் செல்வாக்கு ஏற்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை
தொடர்புடைய செயல்கள் கடினமான சவாலாக அமையும் வேலையை தேர்ந்தெடுத்து சிறப்பாகச் செயல்படுதல் நண்பர்களின் ஒப்புதலைப் பெற விழைதல், புதியவர்களின் மறுப்பை வெறுத்தல், கனிவானவர்களிடம் நற்பெயர் பெறுதல் கௌரவமான அனுபவங்களை சேகரித்தல், மற்றவர்களை சமாதானப்படுத்துதல், குழுக்களை வழிநடத்திச் செல்லுதல், போட்டிகளில் ஈடுபடுதல்


சரி, மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையின் மூலம் ஒரு சிலரின் குணநலன்களை அறிந்து கொள்ள முடியும்.

முக்கியமான ஊக்க நிலைகளாகச் சொல்லப்படுபவை, சாதனைத் தேவையும் அதிகாரத் தேவையும்தான்.

சாதனைத் தொடர்புடைய நடத்தைகள் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெந்ற்றி பெற்ற மனிதர்களிடம் காணப்படுகிறது. அவர்கள் தம் செயலில் வெற்றி பெறும்போது தங்களுடைய குறிக்கோளையும் உயர்த்திக் கொள்கின்றனர். அதே போல சாதனைத் தேவையுடையவர்கள் தமது செயல்களை மற்ற சாதனையாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் குணமுடையவர்கள்.

அதிகாரத் தேவை கொண்டோர் பெரும்பாலும் செல்வாக்கு பெறுவதும், கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், சமயங்களில் மகிழ்ச்சியூட்டுவதும், மாற்றங்கள் பல செய்வதும், தலைமைப் பொறுப்பை ஏற்பதும் அவர்களின் குறிக்கோள்களாக இருக்கின்றன. இந்த அதிகாரத் தேவையின் வலிமை ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுகிறது.

பொதுவாக மனிதர்களின் அடிப்படைத் தேவைகளை சில அடிப்படைத் தேவைகள் மற்றும் உயர்நிலைத் தேவைகள் என வகைப்படுத்தலாம்.

மாஸ்லோவ் என்னும் உளவியலாளர் இந்தத் தேவைகளின் படிநிலையமைப்பைக் கொடுத்திருக்கிறார்.

தேவைகளின் படிநிலையமைப்பு (A. மாஸ்லோ - 1954)




தன்னிலை வெளிப்படுத்தும் தேவை
தன்மதிப்புத் தேவை
அன்பு மற்றும் சமூகத் தேவை
பாதுகாப்புத் தேவை
உடலியல் தேவை




இங்கு கொடுக்கப்பட்ட கடைசி மூன்றும் அடிப்படைத் தேவை. அடுத்த இரண்டும் உயர்நிலைத் தேவை. உடலியல் தேவையிலிருந்து தன்னிலை வெளிப்படுத்தும் தேவை வரை வரிசையாக பூர்த்தி செய்யப்படுகின்றன.

உடலியல் சார்ந்த ஊக்குவித்தல் என்பது பசி, தாகம், பாலுணர்வு, தூக்கம், வலியைத் தவிர்த்தல், பிராணவாயுத் தேவை ஆகியன் உடலியல் தேவைகளாகும்.

உடலியல் தேவை பூர்த்தியாகும் நிலையில் அடுத்த நாளுக்கான பாதுகாப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. பாதுகாப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படின் அன்பு காட்டவும் சமூக உறவும் மேம்படுகிறது. இதுவரையானது உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவை.

தன்மதிப்புத் தேவையும் தன்னிலை வெளிப்படுத்துதலும் வளர்ச்சிக்கான தேவைகளாகும்.

தன்மதிப்புத் தேவை என்பதில் கௌரவம், வெற்றி, சுயமதிப்பு ஆகியன.

தன்னிலை வெளிப்படுத்தும் தேவை என்பது தனக்கு மனநிறைவை அளிக்கக்கூடிய அல்லது தம்முடைய திறமை முற்றிலும் வெளிப்படக்கூடிய செயல் தன்னிலை வெளிப்படுத்தும் தேவை. அதாவது, இலக்கியம், அறிவியல், சமுதாயத்தில் தலைமைப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல், அரசியல் போன்றவற்றில் தனது திறமையை வெளிப்படுத்துதல்.

சரி, இந்த ஊக்கம் தேவை எல்லாமே தனி நபர் ஆளுமையைச் சார்ந்ததுதான். அடுத்த வாரங்களில் சில ஆளுமைகளைப் பார்க்கலாம்.

Saturday, May 22, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 8 (ஊக்கம்)

ஊக்குவித்தல் என்ற பெயரே லத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான். லத்தீன் மொழியில் அடைதல் என்னும் பொருளைக் கொண்ட ஒரு சொல்லிலிருந்து கிடைத்த வார்த்தைதான் ஊக்குவித்தல். ஒருவரை ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட கட்டாயப்படுத்தும் ஒருவகை உந்துசக்தியே ஊக்குவித்தல்.

ஒருவருடைய ஆர்வத்தைத் தூண்டி அவருடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி முழு மூச்சுடன் செயல்படுத்தத் தூண்டுவதே ஊக்குவித்தல் எனப்படுகிறது. மனிதனின் உள்ளார்ந்த தேவைகள், விருப்பங்கள், ஆசைகள் மற்றும் துடிப்புகள் ஆகியன ஊக்கிகள் எனப்படுகின்றன.

சரி, ஊக்கம் அப்படின்னா என்ன?

ஒரு குறிக்கோளை நோக்கி உங்களை இயங்கச் செய்வதுதான் ஊக்கம்.

"கிளாஸ்ல நீ ·பர்ஸ்ட் ரேங்க் வாங்கு. நீ ஆசைப்பட்ட மாதிரியே உனக்கு நான் ஒரு சைக்கிள் வாங்கித் தருகிறேன்" என்று அப்பா சொல்லியிருப்பாரே, இது ஊக்கம்.

"இந்த மாசம் 150 கம்ப்யூட்டர் ஆர்டர் கொண்டு வா, உனக்கு ஐந்தாயிரம் ரூபாய் இன்செண்டிவ் தருகிறேன்." என்று மேனேஜர் சொல்லியிருப்பாரே, இதுவும் ஊக்கம்.

அதாவது நீங்கள் முதல் ரேங்க் வாங்கவேண்டும் என்னும் நோக்கத்தை உங்கள் ஆசிரியர் ஊக்குவிக்கிறார். அதிகமான அளவில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தை உங்கள் மேனேஜர் ஊக்குவிக்கிறர். அதாவது உங்களை மகிழ்விப்பதன் மூலம் உங்கள் திறமைகளை ஊக்குவிக்கிறார்கள்.

சரியாகச் சொன்னால் உங்கள் திறமைகளைக் கொண்டு குறிக்கோளை அடையும் செயலை அவர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள்.

இது மட்டும்தான் ஊக்கம் என்று சொல்ல முடியுமா?

"நாளைக்கு இந்த மனப்பாடப்பகுதியை மனப்பாடம் செஞ்சுட்டு வந்து ஒப்பிக்கணும், அப்படி ஒப்பிக்காதவங்க எல்லாரையும் கிளாஸ¤க்கு வெளில முட்டி போட வைப்பேன்" என்று தமிழ் வாத்தியார் சொல்லியிருப்பார்.

அதே மேனேஜர் இந்த மாசம் நீ 150 விக்கலைன்னா இந்த வருஷம் இன்க்ரிமெண்ட்டை கட் பண்ணிடுவேன்." என்று மிரட்டியிருப்பார்.

இதுவும் ஊக்கம்தான்.

இது எப்படி ஊக்கமாகும்?

வாத்தியார் சொன்னது போல அடுத்த நாள் மனப்பாடம் செய்து ஒப்பிக்காவிட்டால் கிளாஸ¤க்கு வெளியே முட்டி போடவேண்டியிருக்கும். அத்தனை மாணவ மாணவிகளின் முன்பும் முட்டி போட வேண்டும் என்ற பயத்தினால் நீங்கள் அந்த மனப்பாடப்பகுதியைப் படித்து முடிப்பீர்கள். ஆக, ஆசிரியரின் நோக்கம் நிறைவேறியது. நீங்கள் அந்த மனப்பாடப்பகுதியைப் படிக்கவேண்டும் என்பது அவர் நோக்கம். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற அவர் கையாண்ட விதம் இந்த ஊக்கம்.

விற்பனை நிலைமையைச் சீரமைக்க உங்கள் மேனேஜர் நடந்து கொண்ட விதம். இதுவும் ஊக்கம்தான்.

இது எதிர்மறையான ஊக்கம்.

முதலில் சொல்லப்பட்டது வெகுமதி அல்லது பரிசினை அளிப்பது. இது உடன்பாடான ஊக்கம். இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருப்பது தண்டனை எனப்படும் எதிர்மறை ஊக்கியாகும்.

ஆனால், இரண்டுமே உங்களை குறிக்கோளை நோக்கிச் செலுத்தும் ஊக்கமாகும். இரண்டின் மூலமும் நீங்கள் உங்கள் குறிக்கோளை அடையமுடியும்.

இந்த ஊக்கம் என்பது உங்களுக்குள் ஏற்படும் ஒரு உந்து நிலையில்தான் ஆரம்பமாகின்றது. உந்து நிலையில் ஆரம்பித்து உங்களை குறிக்கோளை நோக்கிச் செலுத்துகிறது.

முதலில் சொல்லப்பட்ட வெகுமதி அல்லது பரிசு கொடுப்பதனால் தனிமனிதனின் ஒழுக்கம், நடத்தை, கற்றல் போன்றவை மேம்படுத்தப்படும்.

இரண்டாவதாக இருக்கும் தண்டனை என்னும் ஊக்கியினால் ஏற்படுவது பயம், அந்தஸ்து, தனிமனித கௌரவம் பாதித்தல் ஆகியவையே.

ஆக, இந்த இரண்டு ஊக்கிகளின் மூலமாகவும் உங்கள் குறிக்கோளை அடைய முடியும்.

இரண்டு விதங்களிலும் சில நிறைகள் இருக்கின்றன. சில குறைகள் இருக்கின்றன.

வெகுமதிகள் மற்றும் பரிசுகள் தருவது எப்போதும் மகிழ்ச்சியைத் தரும். பரிசு பெற்றவரை மேலும் ஆர்வத்தோடு செயல்பட ஊக்குவிக்கும். வெகுமதிகள் மகிழ்ச்சியைத் தருவதால் அக்கறை மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கும். வெகுமதிகள் திறமை வாய்ந்தவர்களை மேலும் முன்னேற்றம் அடையச் செய்யும். ஆனால், வெகுமதிகள் எல்லோரையும் ஊக்குவிப்பதில்லை. சமதிறமை உள்ளவர்களை மட்டுமே ஊக்குவிக்கின்றன. வெகுமதிகள் கிடைக்காதபோது ஏமாற்றத்தை அளிக்கும். வெகுமதிகள் பெரும்பாலும் சுமூகமான போட்டியை உண்டாக்குவதில்லை.

தண்டனைகள், எப்போதும் வருத்தத்தோடும் வலியோடும் இணைந்திருப்பதால் தவறு செய்வது மிகவும் குறையும். தண்டனை பெறுபவர்கள் நடத்தையை மட்டுமின்றி மற்றவர்களின் நடத்தையையும் கட்டுப்படுத்துகின்றன. விரும்பத்தகாத நடத்தைகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் நல்ல பலனைத் தரும்.

ஆனால், இந்த தண்டனை என்னும் ஊக்கியின் மூலம் குறிக்கோளை அடைவதை நாம் தவிர்க்க வேண்டும். தண்டனைகள் அளிப்பதன் மூலம் மகிழ்ச்சியற்ற உணர்வை உண்டாக்குவதோடு தோல்வியோடும் இணைக்கப்பட்டுள்ளன. தண்டனைகள் அளிப்பதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தண்டனைகள் குறித்து பயப்படாமல் போகும் பட்சத்தில் அல்லது தண்டனைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிட்டாலோ தண்டனைகள் வழங்குவதில் பலனில்லாமல் போய்விடும். தண்டனை வழங்கியவர்கள் மீதும், சமூகத்தின் மீதும் மனவருத்தத்தை அளிக்கும்.

சரி, இந்த இரண்டு ஊக்கிகளில் எது சிறந்த பலனைத் தரும்?

இரண்டுமே பலனைத் தரலாம் அல்லது எதிர்பார்த்த பலனைத் தராமலும் போகலாம். காரணம் வெகுமதியோ தண்டனையோ, அதனை வழங்குபவரின் ஆளுமையும், அதனைப் பெறுவோரின் ஆளுமையையும் பொறுத்தே பலனைத் தரும்.

எப்படி கவனம் என்பது உங்கள் தேவைகளைக் கொண்டு அமைகிறதோ அதே போல ஊக்கமும் பெரும்பாலும் உங்கள் தேவைகளைக் கொண்டே அமைகிறது.

அடிப்படைத் தேவைகளையும் சமூக ஊக்கிகளையும் தமிழோவியத்தில் பார்க்கலாம்.

Saturday, May 15, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 7 (கவனம்)




பிரபலமான ஓவியர் ஒருவருடைய ஓவியத்தைத் திருடிக் கொண்டு போனவனைப் பிடித்து ஜெயிலில் அடைத்து வைத்திருந்தார்கள். அவனுக்கு சாப்பாடு எதுவும் தர வேண்டாம் என்று உத்தரவு. நான்கு நாட்களுக்குப் பிறகு அவனிடம் அந்த அழகான ஓவியத்தைக் கொண்டு போய் காட்டினார்கள். "எப்படி இருக்கிறது" என்று கேட்டார்கள்.

நான்கு நாள் பட்டினி இருந்தவன் கண்ணுக்குத் தென்பட்டது அந்த ஓவியத்தின் ஒரு ஓரத்திலிருந்த திராட்சை மட்டுமே. அதைச் சுட்டிக் காட்டி "இந்தத் திராட்சை மிகவும் சுவையாக இருக்கும்" என்றான். அந்த நேரத்தில் அவனுக்குத் தேவை அந்த திராட்சை மட்டுமே. அவன் கவனத்தில் அந்த திராட்சை மட்டுமே தென்படுகிறது.

கவனம் என்பது உங்கள் தேவைகளைக் கொண்டே அமைகிறது.

இந்த கவனம் இருக்கிறதே, இது ஆளாளுக்கு மாறுபடும். ஒவ்வொருத்தர் கவனமும் அவரவர் விருப்பப்பட்ட பொருளிலே அல்லது செயலிலே இருக்கும். ஒருவருடைய ஆர்வத்தைப் பொறுத்தே இந்த கவனமும் மாறுபடுகிறது.

ஒரு தெருப் பெயரைச் சொல்லி பத்து பேரிடம் வழி கேட்டுப் பாருங்கள். பத்து பேரும் பத்து விதமான அடையாளங்களைச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் அதிகம் விரும்பும் இடமாக அல்லது அவர்களுக்கு அதிகம் பழக்கமாக உள்ள இடங்களைக் கொண்டுதான் உங்களை வழிநடத்துவார்கள்.

உங்கள் அம்மாவைக் கேட்டுப் பாருங்கள். பிள்ளையார் கோவிலுக்கு அடுத்த தெரு என்று சொல்லுவார்கள். அதே இடத்தை உங்கள் தங்கையிடம் கேட்டுப் பாருங்கள். "நீ வழக்கமா சிகரெட் புடிச்சுகிட்டு நிப்பியே ஒரு டீக்கடை, அதைத் தாண்டி அடுத்த ரைட்ல இருக்கு" என்று வரும் பதில். உங்கள் நண்பனைக் கேட்க, அதே தெருவில் இருக்கும் ஒரு ஒயின் ஷாப் பெயரிலிருந்து வழி சொல்ல ஆரம்பிப்பார். இதுவே உங்கள் அப்பாவிடம் அந்தத் தெருவைப் பற்றி கேட்டுப் பாருங்கள். "நம்ம PWD வரதாச்சாரி வீட்டுக்கு அடுத்த தெரு" என்று சொல்வார். உங்கள் அண்ணியிடமிருந்து "பரஸ் ஜுவெல்லரி இருக்கே அதுக்கு எதிர்த்த மாதிரி இருக்கிறதுதான் அந்தத் தெரு" என்பதாக பதில் வரும்.

அவர்கள் அந்தத் தெருவை கவனித்து வைத்திருப்பது அப்படி.

சரி, அதே தெருவை இவ்வளவு விளக்கங்களுக்குப் பிறகு நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டிருப்பீர்கள்? "நிர்மலா டேபிள் டென்னிஸ் போவாளே, அந்த கிரவுண்டுக்கு அடுத்த தெருதானே?" இப்படியாக ஒரே தெரு எத்தனை விதமான கவனத்துக்குள்ளாகிறது.

சரி, இந்த கவனம் என்பது அவரவர் தேவையைப் பொறுத்தும் சூழ்நிலையைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

நீங்கள் போக வேண்டிய அவசரம். அதற்குத் தடங்கலாக விழுந்த சிக்னல். அடுத்த வண்டிகள் வரும்முன் போய்விடலாம் என்று நினைத்த அவசரம். போலிஸ்காரர் வந்துவிடுவாரோ என்ற பயம். இதெல்லாம் சேர்ந்து சைக்கிள்காரனை இடித்து விட்டீர்கள். ஒரே நேரத்தில் உங்கள் கவனத்தைப் பல விஷயங்களிலும் செலுத்த முயலும் இந்தச் செயலுக்கு கவனப் பகுப்பு என்று சொல்வார்கள். இந்த கவனப் பகுப்பு முறை பெரும்பாலும் நடைமுறைக்கு ஒத்து வருவதில்லை.

பிறகு எப்படி நண்பர்களுடன் பேசிக் கொண்டே சுற்றிலும் பார்த்துக் கொண்டே நடந்து போகின்றோம். சிகரெட் புகைத்துக் கொண்டே கைத்தடியைச் சுழற்றிக் கொண்டே போகின்றோம். இவையனைத்தும் ஒரே நேரத்தில் எப்படி சாத்தியம்?

இந்த கவனப் பிளவை உட்வொர்த் என்பவர் "ஒரே நேரத்தில் இரண்டு தனித்தனியான நடவடிக்கைகளில் கவனத்தைக் குவியும்படி செய்தல்" என்கிறார். இரண்டு விஷயங்களில் ஒன்று தானாகவே நடைபெறும். ஒரு விஷயம் மட்டுமே உளச் செயலாக இருக்கும். மற்றொன்று உடல் சார்ந்த செயலாக தன்னாலேயே நடைபெறும். நண்பர்களுடன் பேசுதல் உளச் செயல். நடந்து போகுதல் உடற்செயல்.

இப்படி இருக்க, கவனப்பிரிவு என ஒன்று உண்டு. கவனத்தை சமமாகப் பிரிக்க முடியாது. சமமாகப் பிரித்து இரண்டு வேலைகளைச் செய்ய வைக்க முடியாது.

நீங்கள் உங்கள் நண்பரின் பைக்கில் அவர் பின்னால் உட்கார்ந்து போயிருப்பீர்கள். அப்போது நண்பர் வண்டியோட்டிக் கொண்டே உங்களிடம் பேசிக் கொண்டு வருவார். ஆனால், திடீரென "என்ன சொன்னே" என்று உங்களைக் கேட்பார். அப்போது உங்கள் நண்பரின் கவனம் உங்கள் பேச்சில் இல்லை. வண்டியோட்டுவதில்தான் இருந்திருக்கிறது. அதற்கு முன் வரை அவர் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் வந்தார். பேச்சும் வண்டியோட்டுவதுமாக கவனம் மாறிக் கொண்டே இருக்கிறது.

இப்படி மாறிக் கொண்டே இருப்பதுதான் கவனம். அதாவது கேமராவின் ஷட்டர் ஸ்பீட் போல.

ஷட்டர் ஸ்பீட் வேகத்துக்கு இப்படி மாறிக் கொண்டிருக்கும் கவனத்தின் வீச்சு என்னவாக இருக்கும்? என்று உளவியலாளர்கள் கண்டுபிடித்து வைத்துள்ளார்கள். ஒருவர் எந்த அளவு கவனம் செலுத்தி செய்தியைச் சரியாக மனதில் பதிவு செய்ய முடியும் என்பதைக் கொண்டு அவருடைய கவன வீச்சினைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவருடைய கவனிக்கும் ஆற்றலில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதை கவனவீச்சின் அளவை சோதனை செய்யும்போது தெரிந்து கொள்ளலாம்.

இயல்பான ஒரு மனிதனின் கவனவீச்சு எழுத்துக்களைப் பொறுத்தவரை மூன்று என்கிறார்கள். எண்களைப் பொறுத்தவரை நான்கு. பரிசோதனைகள் பல செய்த பிறகு கண்டுபிடித்த தீர்வுகள் இவை.

அதனைக் கொண்டே வாகனங்களுக்கு எண்களை அளிக்கிறார்கள். மோட்டார் வண்டிகள் அனைத்தும் இதனடிப்படையிலேயே TMX 2541 என்று மூன்று எழுத்துக்களும் நான்கு எண்களும் வைத்திருந்தார்கள். தற்போது வாங்கும் வண்டிகளுக்கு ஒவ்வொரு TN 01 X 5498 என்று கொடுக்கிறார்கள்.

இந்த எழுத்துக்களும் எண்களும் அதிகமாகும் பட்சத்தில் கவன வீச்சு பாதிக்கப்படும்.

பொருள் தரமுடியாத ஒரு வடிவத்தைப் பார்ப்பதை விட பொருள்தரக்கூடிய வடிவத்துக்கு கவனவீச்சு அதிகமாக இருக்கும். TN என்பது தமிழ்நாடு என்பதையும், 01 எனப்படுவது அந்த வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் எண் பதிவான RTO - வைக் குறிப்பதாகும். இதே போல சில வண்டிகளில் தமிழில் எண்களை எழுதியிருப்பார்கள். அந்த எண்களை கவனத்தில் கொள்வதென்பது சற்று சிரமமான விஷயம். முதலில் சொல்லப்பட்ட TN 01 X 5498 என்பதை கவனித்த வேகத்துக்கு இதை கவனிக்க முடியாது.

கவனம் என்பது எல்லா வயதினரிடமும் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால், அந்தந்த வயதுக்குத் தக்க அந்த நேரத்து சூழ்நிலைக்கேற்ப கவனம் மாறுபடக்கூடியது. இப்படி மாறக்கூடிய கவனம் என்பது ஒருவரின் ஆர்வத்தைப் பொறுத்து அமைகிறது. மிகுந்த ஆர்வத்தோடும் கவனத்தோடும் இருக்கும் ஒருவருக்கு மிகச் சரியான ஊக்கம் கிடைக்குமானால் அவர் வாழ்நாளில் மிகச் சிறந்த பயனை அடையலாம்.

மிகச் சிறந்த பயனை அடைவதற்கான ஊக்கம் உங்களுக்கு தமிழோவியத்தில் வழங்கப்பட்டிருக்கிறது

Tuesday, May 11, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 6 (கவனம்)



நாம ஒரு விஷயத்தைப் பார்க்கிறதுக்கும் கவனிக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது. எப்பவாவது கவனிச்சிருக்கீங்களா?

கவனம் என்பதன் அடிப்படையே புலனுறுப்புகள் மூலமாக வரும் செய்திகளை வடிகட்டும் செயல்தான்.

இப்பொழுது வண்டியோட்டிக் கொண்டு போகிறீர்கள். உங்கள் கவனம் சாலையில்தான் இருக்கும். சாலையில் மட்டும்தான் என்று உங்களால் சொல்ல முடியுமா? பின்னால் வரும் வண்டியைப் பார்க்க ரியர்வியூ மிரர் மீது கவனம் மாறும். பின்னால் வரும் வண்டியின் சத்தத்தை வைத்து அது வரும் வேகத்தைப் புரிந்து கொள்ள முடியும். உரசிக் கொண்டு போகும் வண்டிகளுக்கு டாட்டா காட்டிவிட்டு மிக ஜாக்கிரதையாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள்.

இதெல்லாம் விட முக்கியமான இன்னொரு விஷயம் டிரா·பிக் போலிஸ். அவர் எங்கே இருக்கிறார்? இருக்கிறாரா இல்லையா? ரோடு காலியாகத்தானே இருக்கிறது. நில் என்று எச்சரிக்கும் சிவப்பு சமிக்ஞையை புறந்தள்ளிவிட்டுப் போய்விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே குறுக்கே வரும் ஒரு சைக்கிள்காரன் மீது வண்டி லேசாக மோதி இடித்து நின்றுவிட, அப்போது சரியாக வந்துவிடுவார் போலிஸ்காரர். அதுவரை எங்கே இருந்தார் என்று யாருக்கும் தெரியாது. இதற்காகவே காத்திருந்தது போல வந்து வண்டியை ஓரம்கட்டச் சொல்லுவார்.

சரி, அப்போது நீங்கள் யார் மீது குற்றம் சொல்வீர்கள். அந்த சைக்கிள்காரன் மீதுதானே. ரொம்பச் சரி. அப்புறம் வருவோம் இதே விஷயத்துக்கு.

கவனம் என்பது ஒரு முக்கியமான விஷயம். நாம் ஒரு சமயம் ஒரு விஷயத்தின் மீது மட்டுமே முழுதாக கவனம் செலுத்தமுடியும். ஒரு சமயம் ஒரு தூண்டலைத்தான் முழுமையாக கவனிக்க முடியும். இவ்வாறு பல தூண்டல்களிலிருந்து ஒரே ஒரு தூண்டலை மட்டுமே தேர்ந்தெடுத்து அதன் மீது அதிக அக்கறை செலுத்தி ஆய்வு செய்தலே கவனம் என்று சொல்லப்படுகிறது. (இதை நம்ம உளவியலாளர்கள் புலனாய்வு செய்தல் என்று சொல்கிறார்கள்)

இரண்டு செய்திகளை ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது. ஒரு விஷயம் மட்டுமே கவனிக்கப்படும். மற்றொன்று புறக்கணிக்கப்படும்.

இந்த கவனத்திற்கு இரண்டு விதமான காரணிகள் உண்டு. அவை, புறவயக் காரணிகள் மற்றும் அகவயக் காரணிகள்

புறவயக் காரணிகள் என்று சொல்லப்படுவன செறிவு அல்லது அளவு, புதுமை அல்லது வேற்றுமை, செய்ததே செய்தல், அசைவு அகவயக் காரணிகள் என்று சொல்லப்படுபவை பசி; தாகம்; பாலுணர்வு, இரண்டாவதாகத் தயார் நிலை, மூன்றாவதாக ஆர்வம், முன் அனுபவம், புலன்காட்சி முனைவு ஆகியன.

புறவயக் காரணிகள் என்று சொல்லப்படுபவை பெரும்பாலும் மக்களை ஈர்ப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. விளம்பரத் துறையினரால் மட்டுமே பயன்படுத்தப்படுபவை புறவயக் காரணிகள். மக்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே அவர்களின் வேலையாக இருப்பதனால் புறவயக் காரணிகள் மூலம் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

அகவயக் காரணிகள் இருக்கிறதே அதுதான் மிகவும் சக்திவாய்ந்தது. மனிதர்களை மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிடக்கூடியது. மிக எளிதாக கவனக்குலைவு ஏற்படுவது முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பசி; தாகம்; பாலுணர்வு போன்ற அகவயக் கூறுகளால்தான்.

அடுத்ததாகச் சொல்லப்பட்ட தயார் நிலை இருக்கிறதே. இது ஒரு சிக்னலுக்காகக் காத்திருத்தல் போன்றது. துப்பாக்கி வெடித்ததும் சீறிப்பாயும் ஒட்டப்பந்தயக்காரனைப் போல. குழந்தை அழும் குரலைக் கேட்டவுடன் பாலூட்டத் தொடங்கும் தாயின் விழிப்பு நிலை போன்றது.

மூன்றாவதாகச் சொல்லப்பட்ட விஷயம் ஆர்வம். நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு புத்தகக் கண்காட்சியின் உள்ளே போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இலக்கியம் பிடிக்கும். உங்கள் நண்பருக்கு கம்ப்யூட்டர் மட்டுமே பிடிக்கும். இருவருமாக சுற்றி வரும்போது இருவரின் கவனமும் மாறுபடும். நீங்கள் இலக்கியப் புத்தகங்கள் முன்பு நின்று தேட ஆரம்பித்துவிடுவீர்கள். உங்கள் நண்பர் உங்களுடன் வந்ததையே மறந்து எதிர் வரிசையில் கம்ப்யூட்டர் புத்தகங்களில் மேய்ந்து கொண்டிருப்பார். இந்த கவனம் ஆர்வத்தினால் வருவது. உங்களை அதிகம் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறதோ அதன் மீதே நீங்கள் கவனம் செலுத்துவீர்கள்.

முன் அனுபவம் என்பது உங்களிடம் இருக்கும் முன் அனுபவத்தைக் கொண்டு நீங்கள் செலுத்தும் கவனம்.

கடைசியாக புலன் காட்சி முனைவு என்று சொல்லப்படுவதும் தயார் நிலையே.

சரி, வண்டி அந்த சைக்கிள்காரனை இடித்துத் தள்ளியபோது உங்கள் கவனம் எங்கேயிருந்தது? வண்டியைச் சரியாகத்தான் ஓட்டிக் கொண்டு வந்தீர்கள். சிக்னலையும் பார்த்துவிட்டீர்கள். இதில் உங்கள் கவனத்தில் குறுக்கிட்டது அந்தப் போலிஸ்காரரின் நினைப்புத்தான். போலிஸ்காரரின் நினைப்பு மட்டுமா? இல்லை. சிக்னலும்தான். சிக்னலைப் புறக்கணிக்கும் உங்கள் அவசரமும்தான். இதெல்லாம் உங்கள் கவனத்தைக் குலைத்துவிடுகின்றன.

இத்தனைக்கும் நடுவே நீங்கள் சைக்கிள்காரனை கவனிக்க முடியாமல் போய்விட்டது. அவ்வளவுதான். வேறொன்றுமில்லை. அதற்கு கவனப் பகுப்பு என்று சொல்லுவார்கள்.

சில சமயங்களில் இரண்டிற்கும் மேற்பட்ட விஷயங்களில் நாம் கவனம் செலுத்த முற்படும்போது நம் கவனம் குறித்த நேரத்தில் ஒரே ஒரு வடிவத்தில் மட்டுமே அல்லது செயலில் மட்டுமே இருக்கும். கவனப் பிளவு என ஒரு சங்கதி உண்டு. அது ஒரே நேரத்தில் இரண்டு தனித்தனி வேலைகளைச் செய்வதாகும். அதாவது, நண்பர்களுடன் பேசிக் கொண்டே ரோட்டில் நடந்து போகும்போது புகைபிடித்துக் கொண்டு, சுற்றிலும் பார்த்துக் கொண்டு, கைத்தடி இருப்பின் அதைச் சுற்ரிக் கொண்டு போக முடிகிறதே. இது ஒரே சமயத்தில் இரண்டு வேலைகள் செய்வதுதானே? எப்படி முடியும் இது?

மிகுந்த கவனம் இந்த வாரத் தமிழோவியத்தில்

Friday, May 07, 2004

யான் பெற்ற இன்பம் (மெயில்) பெறுக இவ்வையகம்



To: Bill Gates

Sub: Letter from Banta Singh - Some bugs in my computer

Time:

Dear Mr Bill Gates,

This letter is from Banta Singh from Punjab. We have bought a computer for our home and we find some problems which I want to bring to your notice.

After connecting to internet we plan to open e-mail account and whenever we fill the form in Hotmail in password column only ****** comes, but in the rest of the fields whatever we typed comes, but we face this problem only
in password field. We checked with hardware vendor Santa Singh and he said that there is no problem in keyboard. Because of this we open the e-mail account with password ***** but I request you to check this as ourselves we do not know what is the password.

We are unable to enter anything after we click the shut down button. There is a button 'start' but there is no stop button.We request you to check this.

We find there is 'Run' in the menu. One of my friend clicked 'run' has ran upto Amritsar. So, we request you to change that to sit so that we can click that by sitting.

One doubt is that any 're-scooter' available in system? As I find only 're-cycle', but I own a scooter at my home.

Also there is 'find' button but it is not working properly. My wife lost the door key and we tried a lot for tracing the key with this 'find', but unable to trace. Is it a bug??

Thanks,
Banta Singh

Monday, May 03, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 5 (நுண்ணறிவு)



வாங்க, உங்க ஐக்யூ எவ்வளவுன்னு பாத்துட்டீங்களா? அதுக்கான விளக்கத்தைத் தெரிஞ்சுகிட்டீங்களா? இப்ப உங்களைப் பத்தி நீங்களே தெரிஞ்சுகிட்டிருப்பீங்க.

இந்த நுண்ணறிவுத் திறன் ஒவ்வொரு தனியாளுக்கும் மாறுபடும். நுண்ணறிவைத் தெரிந்து கொள்ள பலவிதமான சோதனைகள் இருக்கின்றன. இந்தச் சோதனைகள் பெரும்பாலும் வயதின் அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன.

பெரும்பாலானவர்களின் நுண்ணறிவு சராசரி நிலையிலும் (90 - 110), சராசரியைவிட சற்று உயர்வானநிலையிலும் (111 - 120) இருக்கிறது. மிகவும் உயர்வான நிலையில் (120 - 130) நுண்ணறிவை உடையவர்கள் மிகவும் குறைவு.

நுண்ணறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்ள நமது உளவியலாளர்கள் குறிப்பிடும் சில நுண்ணறிவு சார்ந்த விஷயங்களைப் பார்க்க வேண்டும்.

இந்த நுண்ணறிவு விஷயத்தை ஸ்பியர்மேன் என்பவர் இரண்டு வகையாகப் பிரிக்கிறார். (மற்ற உளவியலாளர்கள் இன்னும் பல வகைகளாகப் பிரிக்கின்றனர்)

1. பொதுவான திறன்
2. சிறப்புத் திறன்


அவர் சொன்னதைக் கொஞ்சம் எளிமையா சொல்லமுடியும்.

முதலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எல்லோரிடமும் பெரும்பாலும் காணப்படும் பொதுவான திறன்கள். இது ஒரு பெரிய லிஸ்ட். இதனைக் கொண்டுதான் நம்ம உளவியலாளர்கள் நுண்ணறிவுச் சோதனை நடத்துகின்றனர்.

பொதுவான திறன்கள் ஒவ்வொரு தனிநபரிடமும் மாறுபடுகிறது. எந்த அளவுக்கு இந்த பொதுத்திறன்கள் ஒருவரிடம் அமைந்துள்ளனவோ அதைப் பொறுத்தே அந்த நபர் வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும்.

இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் சிறப்புத் திறன் என்பது ஒரு குறிப்பிட்ட செயல்களில் மட்டும் அல்லது சூழ்நிலையில் மட்டும் செயல்படுத்தப்படுவது. இந்த சிறப்புத் திறன் என்பது ஒருவரால் தன்னுடைய வாழ்நாளில் கற்றுக் கொள்ளப்படுவது.

சரி, இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதே? அதுதான் முக்கியமான விஷயம்.

இந்த பொதுவான திறன்களை ஒரு குறிப்பிட்ட செயலுக்காக நீங்கள் செய்யும்போது அது சிறப்புத் திறனாக மாறுகிறது. அவ்வளவுதான். ஒரு குறிப்பிட்ட செயலில் அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையில் பொதுவான திறன்களைச் செலுத்தும்போது அது சிறப்புத் திறனாக மாறுகிறது.

நுண்ணறிவுக்கு பொதுவான திறன்கள்தான் அடிப்படை. இந்த நுண்ணறிவு, இளைய பருவத்தில் இருக்கும் ஒருவரின் ஊக்கத்தினைப் பொறுத்து மாறுபடும். இலக்கினை அடையும் ஊக்கத்தைப் பொறுத்து நுண்ணறிவில் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படுகின்றன.

இந்த பொதுவான திறன்கள் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி கொண்டது.

சரி, இந்த பொதுவான திறன்கள் பற்றி நிறையவே சொல்லியாகிவிட்டது. பொதுவான திறன் அப்படின்னா என்ன? இதோ உங்களுக்காக அந்தப் பட்டியல்.

1. சிந்திக்கிற திறன் 2. பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன் 3. பகுத்தறிந்து புரிந்து கொள்ளும் திறன் 4. காரண காரியங்களை ஆராயும் திறன் 5. மிக விரைவாக கற்றுக் கொள்ளும் திறன் 6. கற்றதை நினைவில் வைத்திருக்கும் திறன் மற்றும் நினைவு கூறும் திறன் 7. தக அமைத்துக் கொள்ளும் திறன் 8. அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளும் திறன். 9. தனக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலையும், குறிப்புகளையும் புரிந்து கொண்டு செயல்படும் திறன். 10. செய்திகளையும் விஷயங்களையும் அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தும் திறன்

சரி, இதெல்லாம் நுண்ணறிவுச் சோதனைகளில் இருக்கக்கூடிய பொதுவான உளத்திறன்கள். இதெல்லாம் எல்லோரிடமும் இருக்கக்கூடியது. ஆனால், நுண்ணறிவை எப்படி வளர்த்துக் கொள்வது?

அதற்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமான சில திறன்களைக் கொண்டே இந்த நுண்ணறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளலாம். அதில் முக்கியமான சில:

1. கவனம்
2. ஊக்கம்

இவற்றைப் பற்றி அடுத்து வரும் வாரங்களில் பார்க்கலாம்.

உங்கள் செயல்திறனுக்கு இந்த வாரம் ஒரு விஷயம்: ரொம்ப சிம்பிள்

அலாரம் அடித்ததும் பதறியடித்து எழுந்திருப்பீர்கள் இல்லையா? சரி, அலாரத்தை நிறுத்திவிட்டு உடனே எழுந்துவிடாதீர்கள். படுக்கையிலிருந்து எப்போது எழுந்தாலும் வேகமாக எழுந்திருக்காதீர்கள். கண் விழித்தவுடன் வேகமாக எழுந்திருக்காதீர்கள். அலாரத்தை நிறுத்திவிட்டு மெதுவாக எழுந்து படுக்கையிலேயே உட்காந்து கொள்ளுங்கள். கண்களை மட்டும் மூடிவிடாதீர்கள். மறுபடியும் தூங்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

படுக்கையில் உட்கார்ந்தபடியே அன்று முழுவதும் செய்ய வேண்டிய வேலைகளை ஒவ்வொன்றாக மனதில் கொண்டு வாருங்கள். காலையிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலான வேலைகளை ஒவ்வொன்றாக யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வேலைக்கும் ஒன்று, இரண்டு என்று கணக்கு வைத்துக் கொள்ளூங்கள். முதலில் செய்ய வேண்டிய வேலை, அடுத்ததாக செய்ய வேண்டிய வேலை என்று வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலும் அன்றைய நாளில் அதே வரிசையில் வேலைகளைச் செய்யுங்கள்.

உங்களை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய வேலைகளை மட்டுமே இப்படி மனதில் வரிசைப்படுத்துங்கள். அடுத்தவரை நம்பி செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் வரிசைப்படுத்த வேண்டாம். அது உங்களுடைய அடுத்த வேலைகளை பாதிக்கும்.

அடுத்தவரை நம்பி செய்யவேண்டிய வேலையாக இருப்பின் அதற்கு ஒரு நேரம் குறித்துக் கொள்ளுங்கள். இன்று மதியம் மூன்று மணிக்குள் நண்பரிடமிருந்து இந்த வேலையைச் செய்து வாங்கிவிட வேண்டும். அப்படி வாங்க முடியாமல் போகும்படியானால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள்.

பத்து நிமிடத்திற்குள் இப்படி வரிசைப்படுத்திவிட்டு அன்றைய வேலைகளைத் தொடங்குங்கள். ஒவ்வொரு நாளும் இப்படி திட்டமிட்டு ஆரம்பிப்பதால் நாளடைவில் திட்டமிடுவதும், திட்டமிட்டதை செயல்படுத்துவதும் உங்கள் செயல்திறனை அதிகப்படுத்தும். நாளடைவில் உங்களுக்கு அலாரமே தேவையிருக்காது.

ஆனால், இந்த தகவல் அலாரத்தை அழுத்திவிட்டு மறுபடியும் தூங்கச் செல்பவர்களுக்காக அல்ல.

Friday, April 30, 2004

ஒரு குட்டிக் கதை



சமீபமாக எனக்கு வந்த சில மின்னஞ்சல்களிலிருந்து ஒன்றை மட்டும் இங்கு தருகின்றேன்.

நண்பர் ஒருவர் ஒரு ஓட்டலுக்குச் சென்று தங்குவதற்காக ஒரு ரூம் புக் செய்கிறார். ரூம் பாய் சகிதமாக அறைக்குள் நுழைந்தவருக்கு ஒரே ஆச்சரியம். அவருடைய அறையில் ஒரு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருக்கிறது. பிரபலமான அந்த ஓட்டலைப் பற்றி தன்னுடைய நாட்டிலிருந்து போய் வந்தவர்கள் சொல்ல அவர் கேள்விப்பட்டிருக்கிறார். பெரிய வசதிகளெல்லாம் கொண்ட ஓட்டல் அது. கம்ப்யூட்டரைக் கண்டதும் அவருக்கு ஊரிலிருக்கும் தன் மனைவிக்கு மெயில் அனுப்பலாம் என்று தோன்றுகிறது.

ஆச்சரியத்தில் மூழ்கிப் போனவராக கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்தபடி அவருடைய மனைவிக்கு ஒரு மெயில் அனுப்புகிறார். சந்தோஷம் தாங்கவில்லை அவருக்கு. சந்தோஷத்தில் அவர் செய்த ஒரே ஒரு தவறு அவருடைய மனைவியின் மெயில் ஐடியை டைப் செய்யும்போது ஒரே ஒரு எழுத்துப்பிழை நேர்ந்ததை கவனிக்காததுதான்.

எழுத்துப்பிழையால் மாறிப்போன அந்த மெயில் வேறு ஒரு பெண்ணிடம் வந்து சேர்கிறது. மெயிலை ரிசீவ் செய்த பெண் அப்போதுதான் தன் கணவனின் சடலத்தைத் தகனம் செய்துவிட்டு வந்திருந்தாள். உறவினர்களிடமிருந்து தகவல்கள் எதிர்பார்த்து மெயில் பார்ப்பதற்காக உட்கார்ந்தவளுக்கு முதலில் கண்ணில்படுகிறது அந்த மெயில்.

அந்த மடல் இப்படியாக ஆரம்பித்தது,

To: My Loving Wife

Subject: I've Reached

Date: ......

என்னிடமிருந்து வரும் இந்த மடலைக் கண்டு நீ ஆச்சரியப்படுவாய் என்று எனக்குத் தெரியும். இங்கு கம்ப்யூட்டரெல்லாம் வைத்திருக்கிறார்கள். நமக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் மெயில் அனுப்பும் வசதி கூட இருக்கிறது. நான் இங்கு வந்து சேர்ந்ததும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டேன். நாளை உன்னுடைய வரவுக்காக இங்கு எல்லாம் தயாராக இருக்கிறது. உன்னுடைய வருகையை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உன்னுடைய பயணம் சுகமாக அமைய வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
உன் அன்பான கணவன்

Monday, April 19, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 4 (சிக்கலான கற்றல்)



அட என்னங்க இது, கத்துக்கிறதே சிக்கல். அப்புறம் என்ன சிக்கலான கற்றல்?

இது ஒன்றும் இடியாப்பச் சிக்கல் இல்லை. பெயர்தான் சிக்கல். மற்றபடி மிகவும் சாதாரண விஷயங்கள்தாம். நாம் தினமும் சந்திக்கும் எவ்வளவோ சிக்கல்களுக்கு மத்தியில் இதெல்லாம் ஒன்றும் இல்லை.

உளவியலாளர்கள் வைத்த பெயர் சிக்கலான கற்றல். எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்த உங்களுக்கு தடையாகவோ அல்லது சிரமமாகவோ இருக்குமானால் அது சிக்கலான கற்றல்.

ஒண்ணும் பெரிய விஷயமில்லைங்க. சிக்கலான சில விஷயங்களைத் தீர்ப்பதற்கு ஒரு எளிமையான வழி இருக்கிறது. அதைக் கடைசியில் பார்க்கலாம்.

சிக்கலான கற்றலை நம் உளவியலாளர்கள் வழக்கம் போல ஒரு சில வகைகளாகப் பிரித்து வைத்துவிட்டார்கள். அவர்கள் பிரித்து வைத்த கணக்குப்படி ஏகப்பட்ட பிரிவுகள். அதனையடுத்து பல உட்பிரிவுகள்; அதற்குப் பிறகு சில உப பிரிவுகள் - இப்படி நிறைய இருக்கின்றன. ஆனால், எல்லாவிதமான கற்றலுக்கும் அடிப்படை ஒன்றுதான்.

அது உங்களிடம் இருக்கும் ஆர்வம். தெரிந்து கொள்ளும் ஆர்வம்; "அட, இது புதுசா இருக்கே" என்று திகைக்க வைக்கும் ஆர்வம்; புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

இப்படித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

பொதுவாக கற்றல் என்பதே குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களிடம்தான் இப்படிப்பட்ட ஆர்வத்தைப் பார்க்க முடியும். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெரியவர்களால் பதில் சொல்லி மாளாது. ஏனென்றால், அவர்களுக்குப் புரியாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. நாம் செய்யும் எல்லா விஷயங்கள் குறித்தும் அவர்களுக்கு நிறைய சந்தேகங்கள், கேள்விகள் இருந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் அவர்களிடம் அடுத்த எதிர்கேள்வி தயாராக இருக்கும்.

"இந்த வயசில என்ன கேள்வி கேக்குது பாரேன்!" என்று நினைக்க வேண்டாம். இந்த ஆர்வம் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான். இந்த ஆர்வமெல்லாம் ஐந்து வயது முதல் ஏழு வயதிற்குள்ளாக கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போய்விடுகின்றன. அதற்கு மேல் அவர்களின் கவனமெல்லாம் வேறுபுறமாக மாறிவிடும். அதன் பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களுக்குக் கவலையில்லை.

ஆனால், சில குழந்தைகள் டீன் ஏஜ் பருவம் வரை ஆர்வத்துடன் இருப்பார்கள். இன்ன விஷயம் என்றில்லாமல் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களிடம் இருக்கும். பெரும்பாலான விஷயங்களை மிக எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

இது எப்படி சாத்தியம் என்பவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம், IQ என்று ஒரு விஷயமிருக்கிறது. போன வாரத்தில் கூட நுண்ணறிவு என்று ஒரு விஷயம் பார்த்தோமே; சமயத்துக்குத் தகுந்த மாதிரி யோசிக்க வைக்கும் சமயோசித புத்தி. அதுதான்.

இந்த நுண்ணறிவுத் திறன்தான் குழந்தைகளை ஆர்வத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அந்தக் குழந்தைகளின் நுண்ணறிவு (Intelligence quotient) அதிகமாக இருக்கும்.

நுண்ணறிவு மிக்க ஒருவர் எந்த ஒரு செயலையும் மிக எளிதாக, ஆர்வத்துடன் சிறப்பாகச் செய்யமுடியும். நுண்ணறிவு குறைந்த ஒருவர் புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லாதவராக இருப்பார். அவருக்கு ஒரு புதிய விஷயத்தைத் தெரிந்து கொள்வது மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கும்.

இந்த நுண்ணறிவு எல்லோருக்கும் அளவில் மாறுபடும். இந்த மாற்றம்தான் கற்றுக் கொள்வதில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுகிறது. உங்கள் நடவடிக்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. நுண்ணறிவுச் சோதனை மூலம் ஒருவரது நுண்ணறிவினை அளவிட முடியும்.

சரி, உங்கள் நுண்ணறிவுத் திறன் அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவுதானே. உங்களுடைய நுண்ணறிவுத் திறனைக் கணக்கிட்டுப் பார்க்க ஆன்லைனில் சில இணையதளங்கள் இருக்கின்றன. உங்களுக்காக ஒரே ஒரு இணையதள முகவரி http://www.iqtest.com/ உங்கள் நுண்ணறிவுத் திறனைச் சோதித்துப் பார்த்துவிட்டு வாருங்கள். அடுத்த வாரத்தில் அது குறித்த பல விஷயங்களைப் பார்க்கலாம்.


சரி, சிக்கலான கற்றலை அணுக எளிமையான ஒரு விஷயம்.
__________________________________________________

கடந்த வாரங்களில் குறிப்பிட்ட பட்டியல்களிலிருந்து இது வேறு மாதிரியான பட்டியல். கடிதம் எழுதுவது போல விளக்கமாக இந்தப் பட்டியலை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வசதியாக இருக்கும்.

தினமும் பத்து நிமிடங்கள் ஒதுக்கிவிடுங்கள். படுக்கைக்குப் போகும் முன் எழுதிவிடுங்கள். அதுதான் மிகவும் முக்கியம்.

சரி, என்ன விஷயம் என்று பார்க்கலாம். உங்களுக்கான பிரச்னையை ஒரு கடிதமாக அல்லது சின்னக் கட்டுரையாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் எழுதிக் கொள்ளுங்கள். "அடடா, அவசரப்பட்டுவிட்டோமே, இப்படிச் செய்திருக்கலாமே?" என்று தோன்றுகிறதா? அதையும் எழுதிவிடுங்கள். குறைந்தது இரண்டு விஷயம் கண்டிப்பாக அதில் இருக்க வேண்டும். ஒன்று உங்கள் பிரச்னை. இரண்டாவதாக அதற்கு உங்கள் தீர்வு. அடுத்ததாக நீங்கள் அந்தத் தீர்வை மாற்றி வேறு விதமாக இருக்கலாமே என்று நினைத்தது. மூன்றாவதாக இருக்கும் இந்த விஷயம் சில சமயங்களில் மட்டுமே இடம் பெறும். அதனால் என்ன? பரவாயில்லை. ஆனால், தினமும் இப்படி எழுதி வைத்துக் கொள்வதைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

வாரக் கடைசியில் அந்தக் கடிதங்களை (கட்டுரைகளை) எடுத்துப் படித்துப் பாருங்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு படிக்கும்போது உங்களுக்கு வேறு விதமான தீர்வு கிடைக்கலாம். அப்படி வேறு விதமான தீர்வு கிடைத்தால் அதையும் எழுதி, அந்தக் கடிதத்தை மீண்டும் அடுத்த வாரம் படிப்பதற்காக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, ஒரு வாரம் கழித்து அந்தக் கடிதத்தைப் படிக்கும்போது நீங்கள் எழுதியிருக்கும் தீர்வு சரி என்றே தோன்றுகிறதா? அப்படியானால் அந்தக் கடிதத்தை எடுத்து வேறு ஏதாவது ஓரிடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

மறுபடியும் அடுத்த வரும் தினங்களில் எழுதுவதைத் தொடருங்கள். அடுத்த வாரக் கடைசியில் படித்துப் பாருங்கள். போன வாரக் கடிதங்கள் இருக்குமானால் அதையும் படித்துப் பாருங்கள். உங்கள் தீர்வு சரி என்று தோன்றும் வரை அந்தக் கடிதங்களை அடுத்தடுத்த வாரங்களுக்கு சேர்த்து வைத்திடுங்கள். சரி என்று தோன்றிய கடிதத்தை வேறு இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.

இப்படி பத்திரப்படுத்திய கடிதங்களை சில மாதங்களுக்குப் பிறகு - வீட்டை சுத்தம் செய்யும்போது இந்தக் கடிதங்களெல்லாம் உங்களிடம் கிடைக்கும் - எடுத்துப் பாருங்கள். அப்போதும் நீங்கள் செய்தது சரி என்று தோன்றினால் அதற்கு மேல் அந்தக் கடிதத்தை நீங்கள் வைத்திருப்பதில் உபயோகமில்லை. தூக்கியெறிந்துவிடுங்கள்.

ஏனென்றால், அந்தக் கடிதத்தில் இருக்கும் விஷயம், அதற்கான தீர்வு - இவையெல்லாம் உங்கள் மனதில் பதிவாகியிருக்கும். அதே போன்ற பிரச்னை உங்களுக்கு மறுபடி வரும்போது இந்த சங்கதி நிச்சயம் உங்கள் ஞாபகத்துக்கு வரும். உங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும்.

ஆனால், நீங்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று, தினமும் இந்தக் கடிதத்தை சிரமம் பாராமல் எழுதவேண்டியதுதான்.

Saturday, April 10, 2004

உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 3 (கற்றல்)



கற்றுக் கொள்வது என்று சொன்னதும் உங்களுக்கு ஞாபகம் வந்த விஷயம் எது?

(பாருங்க, இந்த ஞாபகம் திரும்பத் திரும்ப வந்துவிடுகிறது. பட்டியல் போடாதவர்களுக்காக இன்னொரு விஷயம் இந்தக் கட்டுரையின் கடைசியில் இருக்கிறது.)

1. ஒண்ணாங்கிளாஸில் கூட்டல், கழித்தல் சொல்லிக் கொடுத்த செண்பகம் டீச்சரிடம் கற்றுக் கொண்டது.

2. பத்தாவது படிக்கும்போது வீட்டுக்கு வந்து இங்கிலிஷ் சொல்லிக் கொடுத்த ரம்யாவிடம் future-tense கற்றுக் கொண்டது.

3. வாக்கிங் வந்த புர·பொஸர் மித்ராவை காலேஜ் வாசலில் வழிமறித்து, டெலிபதி விஷயங்களைக் கற்றுக் கொண்டது.

சரி, இது மட்டும்தானா கற்றுக் கொண்டது? இங்கே கீழே கொடுத்திருக்கும் சில விஷயங்களையும் பாருங்கள்.

1. முதல் முதலாக நீங்கள் டைம் பார்க்க கற்றுக் கொண்டது.
2. இரண்டு பக்கமும் வண்டி வருகிறதா என்று பார்த்துவிட்டு ரோட்டைக் கிராஸ் செய்யக் கற்றுக் கொண்டது.
3. சட்டையை அழகாக, இறுக்கமாக டக்-இன் செய்து கழுத்தைச் சுற்றி டை அணியக் கற்றுக் கொண்டது.

இப்படி நீங்கள் கற்றுக் கொண்டது நிறையவே இருக்கும். இதெல்லாம் கூட கற்றல்தான். என்ன இதையெல்லாம் நீங்கள் உங்கள் வழக்கமாக்கிக் கொண்டீர்கள். ஆனால், கற்றலை சில பிரிவுகளாகப் பிரித்து வைத்துவிட்டார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.

சரி, அது என்னங்க கற்றல்? அப்படின்னு கேட்டீங்கன்னா அதுதான் கற்றலுக்கு ஆரம்பம். ஆமாங்க, கேட்டுத் தெரிந்து கொள்கிறீர்களே அதுதான் கற்றல். புதிது, புதிதாக நாம் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதே கற்றல். இந்தக் கற்றல் இருக்கிறதே, இதற்கு வயசு வித்தியாசமெல்லாம் கிடையாது. பிறந்ததிலிருந்து கடைசி வரைக்கும் இந்தக் கற்றல் நமக்குள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். நாம் எல்லோருமே ஏதாவது பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டுதானிருக்கிறோம்.

முதலில், இந்தக் கற்றலைப் பற்றி ஆய்வாளர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

1. கற்றல் என்பது மனிதர்களின் நடத்தையில் ஏற்படக்கூடிய நிலையான மாற்றத்தைக் குறிக்கிறது.

2. கற்றல் என்பது தொடர்புகளின் அடிப்படையில் எழும் ஒரு செயல். நீங்கள் பிறக்கும்போது உங்களிடம் இல்லாத விஷயங்களை, வளர்ச்சியின்போது பெறப்படுகின்ற செயல்கள் அனைத்தும் கற்றலின் அடிப்படையிலேயே அமைகிறது.

ரொம்ப குழப்பமா இருக்கா? அது ஒண்ணுமில்லைங்க. ரொம்ப சாதாரண விஷயம்.

தூண்டப்படும் உணர்வினால் உங்களுக்குள் ஏற்படும் மாறுதலே கற்றல் எனப்படுகிறது.

சரி, அதெல்லாம் இருக்கட்டும். கற்றல் என்பது உங்களுக்குள் எப்பொழுது நிகழ்கிறது? உங்களுக்குள் ஏற்படும் ஒரு தூண்டலின் மூலமாக உங்களிடம் ஏற்பட்ட மாறுதலை நீங்கள் புரிந்துகொண்ட வகையில் (கற்றுக் கொண்ட வகையில்) அந்தத் தூண்டலுக்கு மறுவினை தருகிறீர்கள்.

ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். ஒரு சின்ன உதாரணம்: நெட்வொர்க் வழியாக பிரிண்ட்டரில் நீங்கள் நாலு விதமான பிரிண்ட் கொடுக்கிறீர்கள். அதே நேரத்தில் உங்கள் எம்.டி ஒரே ஒரு பக்கம் பிரிண்ட் கொடுத்திருக்கிறார். நீங்கள் கொடுத்த பிரிண்ட்டில் முதல் பிரிண்ட் போய்க் கொண்டிருக்கிறது. அடுத்த மூன்று பிரிண்டுகளுக்குப் பிறகு எம்.டியுடையது கடைசியாக இருக்கிறது. நீங்கள் கொடுத்திருக்கும் அந்த மூன்று பிரிண்ட்டுகளும் முடிய கால் மணி நேரம் ஆகும்.

அதுவரை அவர் காத்துக் கொண்டிருப்பதில் நியாயமில்லை. அவரே வந்து "ஒரு பக்கம்தான் மிஸ்டர்.______" என்று சொல்கிறார்.

உடனே என்ன செய்கிறீர்கள்? நீங்கள் கொடுத்த பிரிண்ட்டுகளை நிறுத்திவைத்து (pause printing), எம்.டி கொடுத்திருந்த பிரிண்ட்டை முதலில் அனுமதிக்கிறீர்கள். அவரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு "நன்றி மிஸ்டர்._______" என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.

ஆக, எம்.டியிடமிருந்த வந்த வார்த்தைகள் தூண்டல். உடனே உங்களுடைய பிரிண்ட் ஜாபை நிறுத்திவிட்டு, அவருடைய பிரிண்ட்டை எடுத்துக் கொடுத்தீர்கள் பாருங்கள், இது அவருடைய தூண்டலுக்கு நீங்கள் ஏற்படுத்திய துலங்கல். இந்த இரு வினைகளுக்கிடையே ஒரு மாற்றம் நிகழ்ந்தது பாருங்கள், அதுதான் கற்றல். இந்தக் கற்றலின் அடிப்படையில், அடுத்த முறை நீங்கள் பிரிண்ட் கொடுக்கும்போது பிரிண்ட் க்யூவைப் பார்த்துவிட்டுக் கொடுப்பீர்கள். அல்லது அடுத்த முறை உங்கள் எம்.டி பிரிண்ட் கொடுத்தால் நீங்களாகவே உங்களின் பிரிண்ட் ஜாபை நிறுத்திவிட்டு அவருடையதை முதலில் அனுமதிப்பீர்கள்.

இது போல தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொண்டுதானிருக்கிறோம்.

ஆனால், இந்தத் தூண்டல் மட்டுமே கற்றுக் கொடுக்கிறதா என்றால் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். சில எளிய நடத்தைகள் மட்டுமே இந்த முறையில் அமையும். ஆனால், சிக்கலான கற்றல்கள் (Complex Learning) இந்தத் தூண்டல், துலங்கல் அடிப்படையில் அமைவதில்லை. இந்த சிக்கலான கற்றலுக்கு சில அடிப்படையான திறன்கள் தேவை. முக்கியமாக நுண்ணறிவு. அதாவது சமயோசித புத்தி.

சிக்கலான கற்றல் என்பதே சூழ்நிலையைப் பொறுத்து சரியாக முடிவு செய்வதுதான். சிக்கலான சூழலில் என்னவிதமான முடிவு எடுக்க வேண்டும்? எப்படிச் செயல்பட வேண்டும்? என்பதே சிக்கலான கற்றல். இதனை அனுபவத்தின் மூலமாக மட்டுமே பெற முடியும்.

சரி, மீண்டும் அதே பிரிண்ட் விஷயத்துக்கு வருவோம். பேங்கில் ஒரு ஸ்டாப் பேமெண்ட் லெட்டர் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் எம்.டி அவருடைய லேப்டாப்பிலிருக்கும் அட்ரஸ் லிஸ்ட்டை லேபிள்களாக மாற்றி பிரிண்ட் எடுத்துக் கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் எதைச் செய்வீர்கள். பேங்க் விஷயத்தைத்தான் பார்க்க வேண்டும், அதுவே முதலில். எம்.டியின் விஷயத்தை பேங்க் போய்விட்டு வந்து எடுத்துக் கொடுக்கலாம். அதற்கான கால அவகாசம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், பேங்கில் அந்த லெட்டரைக் கொடுக்கவில்லையெனில் நீங்கள் நிறுத்த வேண்டிய 12 லட்சம் பேமெண்ட் கிளியராகிவிடும். உங்கள் கம்பெனியிலிருந்து பணம் போய்விடும். அதனால் உங்கள் வேலையும் போய்விடக்கூடிய நிலை ஏற்படும்.

சமயத்துக்குத் தகுந்தாற் போல் யோசித்துச் செயல்படுவதே சமயோசித புத்தி. அந்த நேரத்தில் நீங்கள் பேங்க் போய்விட்டு வந்து எம்.டி கொடுத்த வேலைகளைச் செய்வதே சமயோசிதமான முடிவாகும்.

ஆனால், சிக்கலான கற்றலுக்கு இது மட்டுமே விளக்கமாகிவிடாது. இன்னும் நிறையவே இருக்கிறது. சில சிக்கலான விஷயங்களை எளிமையாக அணுகுவதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தமிழோவியத்துக்குப் போவதுதான். அங்கேதான் அந்த எளிமையான விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன்.

சரி, மறக்காமல் விஷயத்துக்கு வருகிறேன்.

நினைவுத்திறனுக்காகப் போடச் சொன்ன பட்டியலைப் போடாதவர்களுக்கு வேறு மாதிரியான பட்டியல்.

இதுவும் பட்டியல்தான். ஆனால், விஷயமே வேறு வகையானது. நேர் மாறானது. முன்பு சொன்ன பட்டியல் முறை, செய்து முடித்த வேலைகளை அல்லது செயல்களை ஞாபகப்படுத்தி பட்டியலாக்குவது. இது வேற மாதிரியானது. ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத்தவுடனே ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்வது. ஒவ்வொரு காரியமாக முடித்துக் கொண்டே வருவது. அன்றைய நாளில் முடிக்க முடியாத விஷயங்களை அடுத்த நாளில் முதல் காரியமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையிலிருந்தே அந்த திட்டமிடலுக்குத் தக்க உங்கள் பணிகளைச் செய்யலாம்.

இதனால், நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்தப் பட்டியலைப் பார்க்கும்போதும் நீங்கள் அன்று செய்த விஷயங்களைப் பார்ப்பதன் மூலமாக உங்களின் நினைவுத் திறன் மேம்படும். என்ன முக்கியமாக ஒரு விஷயத்தை நீங்கள் நிச்சயம் செய்தாக வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் அந்தப் பட்டியலைப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கப் போகும் முன்பாக அந்தப் பட்டியலை அடுத்த நாளுக்காக திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.

நாளடைவில் இந்தப் பட்டியல் போடும் முறை பழகிவிடும். அப்புறம் உங்களைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்க வேண்டியிருக்கும். ஏனென்றால், இப்படிப் பட்டியல் போட்ட நிறைய பேரை இன்று அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.