Friday, December 03, 2004

சதுரங்கச் சிப்பாய்கள்

இதுதான் என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.

முதல் சிறுகதை வெளிவந்தபோது இருந்த அதே மனநிலையில் இருக்கிறேன்.

மிகுந்த சந்தோஷம் என்பதை விடவும் கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போதைய மனநிலையாக இருக்கிறது.

என்னுடைய பெரும்பாலான கதைகளுக்கு நான் தலைப்பு வைத்ததில்லை. அல்லது நான் வைத்த பெயரைவிடவும் பத்திரிகையில் வெளியாகும்போது வைக்கப்பட்ட தலைப்பு நன்றாகவே இருந்திருக்கிறது. ஒரே ஒரு கதைக்கு மட்டும் இது விதிவிலக்கு. தலைப்பு கிடைத்தபின்பு எத்தனையோ மாதங்கள் கழித்து அதற்கான கதை கிடைத்தது. இப்போது அதே தலைப்பு என்னுடைய தொகுப்புக்கும் பொருத்தமாக இருப்பது கூடுதல் சந்தோஷம்.இனி, இந்தத் தொகுப்புக்கு அசோகமித்திரன் அளித்த முன்னுரை.

ஒவ்வொரு முறையும் தொலைபேசியில் என்னிடம் கேட்டுக் கொண்டபின்தான் அந்த இளைஞர் என்னை வீட்டில் பார்க்க வருவார். இளைஞர் என்று கூறுவதைவிடப் பையன் என்று சொல்வது பொருத்தம். பத்துப் பன்னிரண்டு மைல்கள் சைக்கிளை மிதித்து என்னைப் பார்க்க வரும் பையனுக்கு வாழ்க்கை எவ்வளவு சலுகைகள் தந்திருக்கக்கூடும்? ஆனால் அந்த நிலையிலும் அவனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் அன்றும் இன்றும் அச்சு உலகில் செல்வாக்கு வகிப்பவன் என்று கூற முடியாது. ஆனால் அப்பையன் என்னிடம் வழி கேட்டுக் கொண்டு வருகிறான்!

முத்துராமன் இன்று பலருக்கு நன்கு அடையாளம் தெரியக்கூடியப் புனைகதை எழுத்தாளனாக மாற முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு. ஒவ்வொன்றாக அவருடைய சிறுகதைகள் பத்திரிகைகளிலும் மற்றும் இணையதளங்களிலும் வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. அவருடைய தொனி அடக்கமானது. புனைகதையில் அடக்கம் இன்னும் இந்தியரிடையே பழக்கப்படவில்லை. இதனால் இந்த நூறு, நூற்றிருபது ஆண்டுகளில் இந்தியாவில் பல எழுத்தாளர்கள் நல்ல புனைகதை எழுதியும் கவனம் கிடைக்காமல் மறைந்து போயிருக்கிறார்கள். முத்துராமன் இந்தியப் புனைகதையில் அடக்கமான தொனி நிலைபெற ஒரு காரணமாயிருப்பார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் பதின்மூன்று கதைகள் உள்ளன. அநேகமாக எல்லாமே வாழ்க்கைப் பாதையில் முன்னேற அடியெடுத்து வைக்க முயலும் மனிதர்களைப் பற்றியவை. எல்லாப் பாத்திரங்களுக்கும் சுய பரிசோதனையும் சுய விமரிசனமும் செய்து கொள்ளத் தெரிகிறது. குற்ற உணர்வும் பரிவும் கொள்ள இயலுகிறது. சூழ்நிலை மாற்றங்களைக் கண்டு கொள்ளத் தெரிகிறது. முன்னோருக்குப் பயனளிப்பதாகவும் துணையாயுமிருந்த பொருளைப் போற்றிப் பாதுகாக்கத் தெரிகிறது. ஒரு பாத்திரத்துக்கு எழுத்தாளனாக இருக்க விரும்புவது உத்தியோகம் கிடைக்கத் தகுதியாகிறது.

முத்துராமனின் கவலைகள் நிஜமானவை. அவை விசேஷச் சுயத் தோற்றம் கொள்ள வேண்டுமென கோஷமிடச் செய்வதில்லை. அப்படியே உருகிவழியவும் தூண்டுவதில்லை.

மனித வாழ்க்கையில் மிகச் சில தருணங்கள் தவிர மற்ற நேரமெல்லாம் எல்லாருமே சிறு சிறு கவலைகளிலும் சிறு சிறு அக்கறைகளிலும்தான் ஆழ்ந்திருக்கிறோம். முத்துராமனின் படைப்புகள் அதைத்தான் சொற்களில் வடித்துத் தருகின்றன.

இத் தொகுப்பிலுள்ள கதைகள் ஓர் எழுத்தாளனின் விரிந்து வரும் பார்வைக்கு அடையாளமாக உள்ளன. இந்த இளம் எழுத்தாளனிடம் தமிழ் வாசகர்கள் எதிர்பார்க்க நிறையவே இருக்கிறது.

இத்தொகுப்பு நல்லதொரு தொடக்கம். முன் கூறியபடியே முத்துராமனின் தொனி விசேஷமானது.

அசோகமித்திரன்
சென்னை,
16.10.2004

கிடைக்குமிடம்:
கிழக்கு பதிப்பகம்
16/37, கற்பகம்பாள் நகர்
மயிலாப்பூர்
சென்னை - 600 004

தொலைபேசி: 5200 9601

1 comment:

.:D:. said...

கிழக்கு பதிப்பக அட்டையெல்லாம் ஒரே டல்லா ஒரே மாதிரி இருக்கு. அடுத்த வெளியீடாவது கொஞ்சம் லே-அவுட் மாத்த சொல்லுங்க.

-டைனோ