Saturday, March 14, 2009
பேசும் படம் - சில குறிப்புகள்
தமிழில் திரைப்படங்களைப் பற்றிய புத்தகங்கள் மிகவும் குறைவுதான். இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. சினிமா புத்தகங்கள் விற்பனையில் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. மற்றொன்று, சினிமாவைத் தெரிந்துகொள்ள புத்தகம் தேவையில்லை.
இரண்டும் உண்மையாக இருக்கலாம். ஆனால், எப்போதாவது சில நல்ல புத்தககங்கள் வருவதுண்டு. திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய ‘பேசும் படம்’ அந்த வகையில் ஒன்று. இதன் தலைப்பின் கீழ் இன்னொரு விளக்கம், ‘கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்’.
திரைக்கதை - சில குறிப்புகள் என்றுதான் தொடங்குகிறது முதல் கட்டுரை.
‘ஒரு மோசமான திரைக்கதையை, நல்ல இயக்குனரால்கூட சிறந்த திரைப்படமாக எடுக்க முடியாது.’ என்ற அகிரா குரோசாவாவின் சொல்லோடு ஆரம்பித்து, தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் எப்படி கதை சொல்கிறது? எந்த விதமான உத்தியைக் கையாள்கின்றன? வெற்றிப்பட இயக்குனர்கள் திரைக்கதையை எப்படி அமைக்கிறார்கள்? என்று வெற்றி பெற்ற படங்கள் முதல் தோல்வியடைந்த படங்கள் வரை பல உதாரணங்களோடு சினிமாவின் விஸ்தீரணங்களைத் தொட்டுச் செல்கிறது கட்டுரை.
சென்ஸாரில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் சிலர் இது ஏ, இது யு என்று திரைப்படங்களுக்கு சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள். ஆனால், பெரியவர்களுக்கான திரைப்படங்களைத்தான் குழந்தைகளும் பார்க்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளின் பொழுதுபோக்குக்கான ஆரோக்கியமான சூழல் நம்மிடையே இல்லையே. கவர்ச்சிப் பாடல் தொலைக்காட்சியில் வந்ததும் குழந்தை இடுப்பை வளைத்து வளைத்து ஆட ஆரம்பித்துவிடுகிறது. இதை விடுத்தால் விளையாடுவதற்கு பொம்மைத் துப்பாக்கிகளும், துரத்தி மோதுவதற்கு கார்களும் என்று வன்முறையோடுதான் வளர்க்க வேண்டியிருக்கிறது என்ற ஆதங்கமும் கவலையும் அடுத்த தலைமுறையின் மீதான அக்கறையைப் பேசுகிறது ஒரு கட்டுரை.
‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘பிதாமகன்’, ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ மற்றும் ‘காதல்’ படங்களின் விமர்சனங்கள். நான்கும் வெவ்வேறு வகை.
நல்ல வேளையாக இந்த நான்கு படத்தையும் நான் ஏற்கெனவே பார்த்திருந்தேன். இப்போது விமர்சனமாகப் படிக்கும்போது முதல் காட்சியிலிருந்து கடைசி வரை முழுப் படத்தையும் பார்த்தது போல் ஒரு திருப்தி வருகிறது. கன்னத்தில் முத்தமிட்டால் காட்சிகளைச் சொல்லும்போதே விமர்சனத்தையும் முன்வைக்கிறார் செழியன். கதையின் நாயகன் ஒரு கதாசிரியன் எனும் விஷயம் திரைப்படத்தின் கதைக்கு எந்த அளவில் உதவுகிறது என்பதில் தொடங்கி வசனகர்த்தாவின் அபத்தங்கள், அத்துமீறல்கள், இயல்பான இடங்களில் கூட அபஸ்வரமாக ஒலிக்கும் பின்னணி இசை, கடைசிக் காட்சியில் மிக இயல்பாக இல்லாமல் தன் தாயைச் சந்திக்கும் காட்சியில் வளர்ப்புத் தாயின் செயற்கைத்தனம், அந்த நேரத்தில் இருபது கேள்விகள் தேவையா? என்று விமர்சனம் வளர்ந்து கொண்டே போகிறது.
‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ எழுதப்பட்ட விதம் வேறு வகை. முதலில் கதை. ‘நல்ல திரைப்படம் முதல் காட்சியிலிருந்தே கதை சொல்லத் தொடங்கிவிடுகிறது’ என்று மீண்டும் திரைப்படத்தை ஒரு தேர்ந்த ரசிகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. வசனங்கள் இல்லாத காட்சிகளின் உணர்வுகளை வார்த்தைகளில் நிரப்பித் தருகிறார்.
இந்தப் படத்தைப் பற்றி அவர் எழுதியிருப்பதில் ஒரு சில வரிகளை இங்கே சொல்லலாம்.
‘இயக்குனரின் மேதைமையும், படத்தொகுப்பாளரின் ஆளுமையும் வெளிப்படும் இடங்களென ஓட்டப்பந்தயத்தைச் சொல்லலாம். பந்தயம் துவங்கியதிலிருந்து முடியும் வரையிலான கேமராவின் இயக்கத்தை, ஒலியை, படத் தொகுப்பை, சலிப்படையவிடாமல் அதே நிலையில் வெகு நேரம் விறுவிறுப்புக் குறையாமல் தொகுக்க வேண்டிய கட்டாயத்திலும், அதன் வெற்றியைக் காணமுடியும். படத்தின் இயல்பு நிலைக்கு மாறாக மெதுவியக்கம் (slow motion) கொண்டு அலி ஓடத் துவங்குகிற போதும் காட்சியின் வேகத்திற்கு எதிரான நுட்பத்தைக் கையாள்கிற, அந்நேரத்தில் மூச்சிரைக்கிற சப்தத்தைப் பிரதானப்படுத்துவதன் மூலம் காட்சியின் நுட்பத்தை மேன்மைப்படுத்துகிற விதமும் கவனிக்கத் தகுந்தது.’
‘காதல்’ திரைப்பட விமர்சனம் இன்னொரு வகை. நம்முடைய திரைப்படங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதைப் பல்வேறு காட்சிகள் மூலம் சொல்கிறார் செழியன்.
இப்படி காட்சிகளையும் அதன் பின்னணியையும் துல்லியமாக விவரிப்பதன் மூலமும் சாதாரண திரைப்பட ரசிகன் கவனிக்கத் தவறும் பல விஷயங்களை நுணுக்கமாக ரசிக்க வேண்டிய விஷயங்களையும் மிகவும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறது இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தின் மிக முக்கியமான கட்டுரை ‘இளையராஜா: அங்கீகரிப்பதன் மூலம் புறக்கணிக்கப்பட்ட கலைஞன்’. இசையமைப்பாளராக எல்லோரும் ரசித்திருந்தாலும் செழியன் நம் முன் வைக்கும் கேள்வி நியாயமானது.
‘மார்கழிக் குளிரில் குளிர்பதன வசதி செய்யப்பட்ட அரங்குகளில் பாடப்படும் கீர்த்தனைகள் ஏற்கெனவே எழுதப்பட்டவை. ராகம், தாளம், முதலான அனைத்துச் சங்கதிகளும் தீர்மானிக்கப்பட்டவை. காலங்காலமாகப் பிரதியெடுக்கும் வேலைதான் இங்கே நடக்கிறது. இப்படிப் பிரதியெடுக்கும் சங்கீதப் பாடகனின் காந்தாரத்தையும் பஞ்சமத்தையும் சிலாகிக்கிற இசை விமர்சகர்கள், உண்மையான இசை முயற்சிகளை திரைப்படத்தில் நிகழ்த்தும் இளையராஜாவை ஏன் கண்டு கொள்வதில்லை. ஏன் விமர்சனம் செய்வதில்லை?
இந்த இடத்தில் ழான் பால் சார்த்தர் சொன்னதைக் குறிப்பிடுகிறார் செழியன்.
‘ஒரு கலைஞனை எந்த விமர்சனமுமற்று ஏற்றுக் கொள்வதுதான் அவனது படைப்புக்கு நாம் தருகிற கொலைத் தண்டனை.’
ஆக, வெறுமனே சில வார்த்தைகளால் புகழ்ந்துவிட்டுப் போவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம் என்பதுபோல, அடுத்தடுத்து வருகிறது இளையராஜாவின் மேதைமையைப் பற்றிய விமர்சனங்கள். செழியன் இசைப் பயிற்சி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா பாடல்களுக்கு அமைக்கும் இசையைப் பற்றியும், எந்தக் காட்சிக்கு எந்த வகையான வாத்தியக் கருவிகள் உபயோகிக்கிறார் என்று தொடங்கி, பின்னணி இசையின் முக்கியத்துவம் என்று இசையாகப் பாவும் இந்தக் கட்டுரை முடியும்போது ஒரு வாசகம், ‘தமிழ் சினிமாவின் ஒப்பனை முகங்களுக்குப் பின்னால், ஓர் அசலான கலைஞனின் படைப்பு கவனிக்கப்படாமல் போவது எத்தனை துரதிர்ஷ்டவசமானது!’
இசை பற்றிய விமர்சனத்துக்குச் சற்றும் குறையாத இன்னொரு கட்டுரை, ‘ஓர் உதவி ஒளிப்பதிவாளரின் குறிப்புகளிலிருந்து’. செழியன் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தபோது அவர் கற்றுக் கொண்ட விஷயங்களிலிருந்து சிலவற்றை நமக்கும் சொல்கிறார். ஒரு பாடல் காட்சி எடுப்பதற்குள் எத்தனை எத்தனை விஷயங்கள் கவனிக்க வேண்டியிருக்கிறது!
‘அலைபாயுதே’ படத்தில் ‘ஸ்னேகிதனே...’ என்ற பாடல் பதிவான முறையையும், அதே படத்தில் ‘யாரோ யாரோடி’ என்ற இன்னொரு பாடலையும் பதிவாக்கப்பட்ட அனுபவங்கள். இரண்டு பாடலை எடுத்து முடிப்பதற்குள் இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்குமான கருத்து வேறுபாடுகள், படமாக்கும்போது வானில் மேகங்கள் சூரியனை மறைக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தது.
தியேட்டரில் படம் பார்த்துவிட்டு படம் எடுத்தவனை கிழிகிழியென்று கிழிக்கும் ஒருவனுக்காக ஒவ்வொரு காட்சிக்காகவும் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு ஒரே ஓர் உதாரணம்:
‘ஸ்னேகிதனே; பாடல் காட்சி. மேகம் சூரியனை மறைக்கிறதா என்று செழியன் பார்த்துக் கொண்டிருக்கிறார். தொலைவில் வந்து கொண்டிருந்த மேகம் சூரியனைக் கடக்கப் போகிறது. காட்சி கேமராவில் பதிவாகிக் கொண்டிருக்கிறது. நீண்ட ஒத்திகைக்குப் பின் எடுக்கப்படும் காட்சி. செழியன், தன் தவறினால் காட்சிப் பதிவு தடைபடுமோ என்று கவலைப்படுகிறார். அவர் நினைத்தது போலவே மேகம் சூரியனை மறைக்கிறது. மேகத்தின் நிழல் காட்சியை மறைக்கிறது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உதவியாளர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு புன்முறுவல் பூக்கிறார். ‘மேகம் மூடியது எனக்குத் தெரியும். அந்தப் பாடலின் கடைசி வரியில் ‘கர்வம் அழிந்ததடி’ என்று வரும். மேகத்தின் நிழல் காட்சியை மறைப்பதும் அந்தக் கர்வம் அழிவதுமான வார்த்தையும் அர்த்தமும் இயைந்து போகிற அழகை உணர்ந்தேன்’ என்கிறார். மீண்டும் அந்தக் காட்சிக்காக மேகம் சூரியனை மூட வேண்டுமே என அனைவரும் காத்திருக்கிறார்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டு.
திரைப்படங்களில் ஒளிந்து கிடக்கும் கலை நுணுக்கங்களை சாதாரண ரசிகனுக்கும் புரியும் வகையில் சொல்லும் இந்தப் புத்தகத்தில் ஒளிப்பதிவாளரின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் இன்னொரு கட்டுரையும் உண்டு. செய்தியாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் சில செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் எவ்வளவு வக்கிரமாகவும், ஒரு சில எவ்வளவு நாசூக்காகவும் செய்தியைப் புரிய வைக்கின்றன என்பதை ஓர் ஒளிப்பதிவாளராக நின்று விமர்சனம் செய்கிறார் செழியன்.
திரை நட்சத்திரங்களுக்காகப் படம் எடுக்க வேண்டிய சூழல் நேர்ந்துவிட்டதைப் பற்றிய வருத்தங்களையும் பதிவு செய்கிறார் செழியன். திரைப்படத்தின் எல்லா விஷயங்களைப் பற்றியும் கவலையோடும் அக்கறையோடும் அணுகும் கட்டுரைகள். ஆனந்த விகடனில் ‘உலக சினிமா’ எழுதிய செழியனின் மிக முக்கியமான இன்னொரு புத்தகம், ‘பேசும் படம்’.
பேசும் படம் (கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்) - செழியன் - காலச்சுவடு பதிப்பகம். விலை: ரூ.135
Saturday, February 14, 2009
ஏழாம் உலகமும் நான் கடவுளும்
‘நான் கடவுள்’ இரண்டு கதை. பிச்சைக்காரர்கள் உலகம். சாமியார் உலகம். இரண்டையும் சரிசமமாக நிறுத்த முயற்சித்திருக்கும் ஒரு முயற்சியே இத்திரைப்படம். ‘ஏழாம் உலகம்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஆனால், நாவலின் உக்கிரமோ, அருவறுப்புகளோ இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.
நாவல் காட்டும் உலகம் வேறு. திரைப்படம் காட்டும் உலகம் வேறு. இருவேரு படைப்புகளும் அதனதன் அளவில் சிறப்பாக இருந்தாலும், நாவலில் இருந்து திரைப்படமாக்கும் வித்தை சரியாகக் கனிந்து வரவில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
நாவல் காட்டும் உலகம் மிகவும் ஆழமானது. பிரம்மாண்டமானதும் கூட. முக்கியமாக நாவலுக்கும் திரைப்படத்துக்கும் உள்ள மிகப் பெரும் வித்தியாசம் நாவல் பிச்சைக்காரர்களால் ஆனது. திரைப்படம் கடவுளைத் தேடும் சாமியார்களால் ஆனது. நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியைச் செய்யாமல், கூடுதலாக அதன் இன்னொரு பரிமாணமான சாமியார்களின் உலகத்தோடு அதை ஒப்பிட்டிருப்பது சிறப்பானது.
நாவலில் வரும் பிச்சைக்காரன் ஒருவன் சொல்லும் டயலாக்: அலகு குத்திக் கொண்டு, முகம் முழுவதும் மஞ்சள் அப்பிக் கொண்டு பழனி மலை முருகனை தரிசிக்க மேலே செல்லும் பக்தர் கூட்டத்தைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன் சொல்வான். “நாம இவனுகள்ட்ட பிச்ச எடுக்கம். இவுனுக அங்க மேல உள்ள பிச்சைக்கார ஆண்டிக்கிட்ட பிச்ச எடுக்கானுக.”
பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை அப்படியே நாவலில் இருப்பது போல படமாக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம், பாலா ஆவணப்படமாக எடுக்க விரும்பவில்லை என்பதுதான். அதனை ஈடுகட்டும் வகையில் சாமியார்கள் திணிக்கப்பட்டதுதான் கடவுள். ‘நான் கடவுள்’ பிச்சை எடுக்கும் உருப்படிகளை வாங்கி விற்று பிச்சை எடுப்பவர்களின் பணத்தை மொத்தமாக அண்டாவில் வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் சிலர் பழிவாங்கப்பட வேண்டும். அதற்கு ஒருவன் வருவான். அவன்தான் கடவுள். இதே விஷயம் நாவலில் வேறு வகையில் கையாளப்பட்டிருக்கிறது. கடவுள் என்ற பிம்பமே கேலிக்குரியதாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.
‘ஏழாம் உலகம்’ ஜெயமோகனின் வழக்கமான நாவல் வடிவத்திலிருந்து மாறுபட்டது. எடுத்துக் கொண்ட களம் பற்றிய விவரணை ஏதும் இல்லாமலே நாவல் தொடர்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் கதாபாத்திரங்களின் பேச்சுக்களாலும், சின்னச் சின்ன சம்பவங்களாலும் நாவல் தனது வடிவத்தைக் கண்டடைகிறது. நாவல் படிப்பதே ஒரு திரைப்படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. நாவலில் உள்ள சில வசனங்கள் படத்திலும் இருக்கிறது. குறிப்பாக ‘அம்மா... மகாலட்சுமி... பிச்சை போடுங்கம்மா... ஏ... ஜோதிலட்சுமி...’
நாவலில் இருக்கும் குரூரமும் நாற்றமடிக்கும் அவர்களின் வாழ்க்கை முறையும், அதனை ஒரு பிழைப்பாகக் கொண்டு உருப்படிகளை விற்று வாங்கி பிச்சை எடுக்க வைப்பனின் நாறிப் போன வாழ்க்கையையும் அப்படியே பதிவு செய்யாமல் விட்டதற்காக நான் கடவுளை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
பிச்சை எடுப்பதற்காகவே குறைப்பிறவியாகப் பிறக்க வேண்டும் என்று ஒரு கூனனையும், கை கால் சூம்பி, மண்டை சப்பிப் போன ஒற்றைக் கண்ணோடு இருக்கும் ஒருத்தியுடன் அணைய விடும் பண்டாரத்தைப் பார்த்து நாம் அதிர்ந்து நிற்க, பண்டாரமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் ஓர் இடமும் உண்டு. சிறுவர்களைப் பிடித்து வந்து நாக்கறுத்து, அமிலம் ஊற்றி வெந்து போன முகமாக உருத் தெரியாமல் உருக்கி அழித்து, கண் குத்தி, ‘பெத்த அம்மா பாத்தாக்கூட சந்தேகப்படமாட்டா. அப்டி மாத்திருக்கோம்’ என்று சொல்லும் ஓர் இடத்திலிருந்து அதிர்ந்து போய் ஓடுகிறார் பண்டாரம். தன்னுடைய தொழிலைவிட மிகவும் மோசமான ஒரு விஷயத்தைக் கண்டவர் வீடு சேரும்போது தன் இடுப்பில் வைத்திருந்த பணத்தை எவ்வளவு என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல் அப்படியே கோயில் உண்டியலில் திணிக்கிறார். ஆயிரத்து இருநூறு இருக்கும். இல்லை மேலேயா...
தனது மகளின் கல்யாணத்துக்காக உருப்படிகளை விற்கும் பண்டாரம், தன்னுடைய ஐசுவரியம் என்று சொல்லும் மாங்காண்டி சாமியாரை விற்கச் சம்மதமில்லாமல் ‘அது எனக்க ஐஸரியமாக்கும்’ என்று சொல்லச் சொல்ல மாங்காண்டி சாமியின் விலை ஏறுகிறது. பத்தாயிரத்தில் ஆரம்பிக்கும் பேரம் அறுபதாயிரத்தில் முடிகிறது. அதே மாங்காண்டி சாமியை சில காலம் கழித்து பத்தாயிரம் ரூபாய்க்கு தானே வாங்கிக் கொள்ளும் இடத்தில் பண்டாரம் ஒரு நல்ல வியாபாரி.
நாவலில் இவர்கள் பேசும் நாகர்கோயில் கன்னியாகுமரித் தமிழ், திரைப்படமாகும்போது கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆர்யா வரும்போதெல்லாம் என்ன மொழியில் பேசப் போகிறாரோ என்று கவனிக்க வேண்டியிருந்தது.
படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்த விஷயங்கள் இளையராஜாவின் இசை, ஆர்தர் வில்சனின் கேமரா, பூஜாவின் நடிப்பு.
இப்படிப்பட்ட மக்களின் வாழ்க்கையை நாவலாக்கியதற்காக ஜெயமோகனுக்கும், அதைத் திரைப்படத்தின் வழியாகப் பல கோடி பேருக்குக் கொண்டு சேர்த்த பாலாவுக்கும் நன்றியைச் சொல்லலாம். மத்தபடி இந்த அகோரி, சாமியார் இதெல்லாம் என்னமோ சொல்றாங்களே... அதுக்கெல்லாம் ஏதாவது படம் எடுத்திருக்காங்களா? யாராவது சொல்லுங்க.
Labels:
ஏழாம் உலகம்,
நான் கடவுள்,
பாலா,
ஜெயமோகன்
Subscribe to:
Posts (Atom)